நாடு முழுவதும் 508 ரயில்வே ஸ்டேஷன்களைப் புதுப்பிக்கும் விதமாக, அம்ரித் பாரத் நிலைய திட்ட துவக்க விழாவை, பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார். அதன் அடிப்படையில், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் 23 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெறவிருக்கிறது. இந்த திட்டத்தின் துவக்க விழாவை முன்னிட்டு, பா.ஜ.க-வை சேர்ந்த மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தெற்கு மாவட்டத் தலைவர் ஜெய்சதீஸ், தி.மு.க சார்பில், எம்.பி பழனிமாணிக்கம், ராஜ்ய சபா எம்.பி கல்யாணசுந்தரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க, பா.ஜ.க-வினர் கலந்துகொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ராஜ்ய சபா எம்.பி., கல்யாணசுந்தம் பேசும்போது, `ஒன்றிய பிரதமர்' எனக் கூறினார். இதற்கு பா.ஜ.க-வினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால், சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. அதையடுத்து பா.ஜ.க நிர்வாகிகள் சமாதானம் செய்து அமரவைத்தனர். பின்னர் எம்.பி., பழனிமாணிக்கம் பேச துவங்கியபோது, பா.ஜ.க-வினர் கூச்சலிட்டனர். அப்போது பழனிமாணிக்கம், ``1999-ம் ஆண்டில் தி.மு.க-வை தஞ்சாவூரில் தூக்கி நிறுத்தியவன் இந்த பழனிமாணிக்கம். இங்கு கூச்சலிட வேண்டாம். 20 ஆண்டுகளில் அரசியலில் பழம் திண்ணு கொட்டை போட்டவன். இது போன்ற கூட்டத்தை 10 நிமிடங்களில் என்னால் கூட்ட முடியும்.
தஞ்சாவூர் அரசியல் வேறு, மற்ற ஊரில் உள்ள அரசியல் வேறு. கடந்த 10 ஆண்டுகளாக தஞ்சாவூர் தொகுதிக்கு மத்திய அரசு எந்த திட்டங்களையும் செய்யவில்லை" எனக் கூச்சலிட்ட பா.ஜ.க-வினரிடம் மேடையிலிருந்து பேசினார். இதனைக் கண்டித்து, பா.ஜ.க-வினர் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு விழா நடைபெறும் இடத்தை விட்டு வெளியேறி, ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க-வினரை காவல்துறை கைது செய்தது. இதையடுத்து விழா நடைபெறும் இடத்திற்கு வந்த தி.மு.க-வினர் தமிழ்நாடு அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.
இதனால் கூட்டத்தில் சுமார் பத்து நிமிடங்கள் சலசலப்பும் பரபரப்பும் நிலவியது. செய்தியாளர்களிடம் பா.ஜ.க நிர்வாகி, கருப்பு முருகானந்தம், ``தி.மு.க எம்.பி பழனிமாணிக்கம், பா.ஜ.க-வினருக்கு மிரட்டல்விடும் தொனியிலும், மத்திய அரசின் திட்ட துவக்க விழாவிலும், மத்திய அரசை குறைகூறி பேசியிருக்கிறார். இனி தஞ்சாவூர் எம்.பி பழனிமாணிக்கம் என்ன ஊழல் செய்திருக்கிறார் என்பதை வெளிக்கொண்டு வருவோம். நாங்கள் அவரது வயதுக்கு மரியாதை கொடுத்தோம். மத்திய அரசு விழாவில், மத்திய அரசை விமர்சனம் செய்த எம்.பி பழனிமாணிக்கத்தை இனி துாங்கவிட மாட்டோம்" என்றார்.
from India News https://ift.tt/WEIyUKv
0 Comments