குமாரபாளையம் திமுக நகர்மன்ற தலைவருக்கு ஆதரவாக இருந்த மூன்று கவுன்சிலர்களும், ஒரு தி.மு.க ஒன்றிய கவுன்சிலரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அக்கட்சியில் இணைந்துள்ள சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் நகர்மன்ற தலைவராக இருப்பவர் தி.மு.க-வைச் சேர்ந்த விஜய்கண்ணன். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வில் சீட் கிடைக்காததால், தி.மு.க தலைமை விதித்த கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாக போட்டியிட்டு, வென்றார். அதோடு, 7 தி.மு.க கவுன்சிலர்கள், 3 அ.தி.மு.க கவுன்சிலர்கள், 7 சுயேச்சைகளை 'வளைத்து', அவர்களின் ஆதரவோடு சுயேச்சை சேர்மனாக பதவியேற்றுக்கொண்டார். இதற்கிடையில், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரான 'மதுரா' செந்தில் மூலம் தி.மு.க-வில் இணைந்த விஜய்கண்ணன், தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அல்லது குமாரபாளையம் வடக்கு நகர செயலாளர் ஆகிய இரு பதவிகளில் ஏதேனும் ஒரு பதவியை பெற காய்நகர்த்தி வந்தார்.
ஆனால், கட்சி தலைமை அவருக்கு நாமக்கல் தி.மு.க மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவராக பதவி கொடுத்தது. தான் நினைத்த பதவி கிடைக்காததால், அவர் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் தங்கமணி மூலம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க-வில் இணையபோவதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில்தான், அவர் சார்பாக இருந்த மூன்று நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க-வை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ஒருவரும் அ.தி.மு.க-வில் இணைந்திருப்பது, பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
இதுபற்றி, நம்மிடம் பேசிய இந்த விவகாரத்தைப் பற்றி அறிந்த சிலர், ``விஜய்கண்ணன் பதவிக்காக ஆட்டம் காட்டுவதை அறிந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், அவரை சமாதானப்படுத்த பேசியதாக சொல்லப்பட்டது. இன்னொருபக்கம், விஜய்கண்ணன், தங்கமணியை நேரடியாக சந்தித்து, அ.தி.மு.க-வுக்கு செல்ல பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. இந்த சூழலில்தான், விஜய்கண்ணனை சமாதானப்படுத்த, தி.மு.க மாநில துணை செயலாளர் அன்பகம் கலை, விஜய்கண்ணனை அழைத்து, 'உங்களுக்கு உரிய பதவி கிடைக்கும். போய் கட்சி வேலையைப் பாருங்கள்' என்று சொல்லி அனுப்பினார். விஜய்கண்ணனுடன் அவருக்கு சார்பாக இருக்கும் எட்டு கவுன்சிலர்களும் சென்றனர். ஆனால், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த 'பஞ்சாயத்துக்கு' பிறகு செல்லை ஆஃப் செய்துவிட்டு, விஜய்கண்ணன் அமைதியாகிவிட்டதாக சொன்னார்கள். அங்கிருந்தபடி, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அ.தி.மு.க-வில் இணையபோவதாகவும் சொன்னார்கள்.
ஆனால், கடந்த திங்கள் கிழமை இரவு, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் தங்கமணி முன்னிலையில், விஜய்கண்ணனுக்கு ஆதரவாக இருந்ததாகச் சொல்லப்பட்ட குமாரபாளையம் நகராட்சி கவுன்சிலர்களான ரேவதி திருமூர்த்தி, நந்தினிதேவி ராஜகணேஷ், 20 - வது வார்டு உறுப்பினர் வள்ளியம்மாள் மற்றும் பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 8 - வது வார்டு தி.மு.க ஒன்றிய கவுன்சிலராக இருக்கும் தனசேகரன், குப்பாண்டபாளையம் ஊராட்சி 12 - வது வார்டு தி.மு.க பிரதிநிதி ரவி, ஜே.ஜே நகர் தி.மு.க கிளை பொருளாளர் மணிவண்ணன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, அவர் தலைமையில் அ.தி.மு.க-வில் இணைந்துள்ளனர். இவர்களில், குமாரபாளையம் நகராட்சி கவுன்சிலர்களாக இருக்கும் ரேவதியும், நந்தினிதேவியும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கவுன்சிலர்கள்.
ஆனால், அ.தி.மு.க தலைமையை மீறி, கடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, சுயேச்சையாக வென்ற விஜய்கண்ணனுக்கு ஆதரவு கொடுத்து, அவரை சேர்மனாக்க உதவியவர்கள். இதனால், இந்த இரண்டு கவுன்சிலர்களையும் அ.தி.மு.க தலைமை கட்சியைவிட்டு நீக்கி அப்போது நடவடிக்கை எடுத்தது. இந்த சூழலில்தான், மறுபடியும் அவர்களை தங்கமணி அ.தி.மு.க-வில் இணைத்திருக்கிறார். அதேபோல், மற்றொரு கவுன்சிலரான வள்ளியம்மாள் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர். அவரும் விஜய்கண்ணன் சேர்மனாக ஆதரவு கொடுத்தவர். தற்போது, அவரும் அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். 30 ஆண்டுகளாக தி.மு.க-வில் இருந்து, கட்சிக்காக கடுமையாக உழைத்தும் உரிய முக்கியத்துவத்தை கட்சி தலைமை தரவில்லை என்ற கோபத்தில் இருந்த தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன், தங்கமணி மூலம், அ.தி.மு.க-வில் ஐக்கியமாகியிருக்கிறார்.
ஆனால், 'அ.தி.மு.க-வுக்கு தாவப்போகிறேன்' என்று பூச்சாண்டி காட்டிவந்த விஜய்கண்ணன் தி.மு.க-வில் இருக்கிறாரா அல்லது அ.தி.மு.க-வுக்கு போகப்போகிறாரா என்று இப்போது வரை உறுதியாக தெரியவில்லை. இதற்கிடையில், 'உங்க மாவட்டச் செயலாளர் பதவி நிலைக்க வேண்டும் என்றால், விஜய்கண்ணன் அ.தி.மு.க-வுக்கு போககூடாது' என்று 'மதுரா' செந்திலுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் பரவுகிறது. இதனால் விஜய்கண்ணனை 'தாஜா' பண்ணும் செயல்களில் 'மதுரா' செந்தில் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால், ஆளுங்கட்சி தி.மு.க-வாக இருக்கையில், தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு நகராட்சி சேர்மன் அ.தி.மு.க-வுக்கு சென்றால், அது தி.மு.க-வுக்கு பின்னடைவாக இருக்கும் என்பதால்தான், தி.மு.க தலைமையே விஜய்கண்ணனை தக்கவைக்க 'இறங்கி வந்து' முயற்சி செய்கிறது. ஆனால், அதை தனக்கு சாதகமான அம்சமாக நினைக்கும் விஜய்கண்ணன், அதையே துருப்பாக வைத்து, தலைமை வரை 'தண்ணி காட்டி' வருகிறாராம்.
அதேநேரம், குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பதுபோல், தி.மு.க-வில் நிலவிவரும் இந்த 'குழப்பத்தை' தனக்கு சாதகமாக்க நினைக்கும் தங்கமணி, இன்னும் எத்தனை தி.மு.க உள்ளாட்சி பிரதிநிதிகளை அ.தி.மு.க-வுக்கு இழுக்க முடியும் என்று தீவிரமாக 'தூண்டிலை' வீசிவருவதாக சொல்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/TAn4oVg
0 Comments