தி.மு.க அமைச்சர்களுக்கு எதிராக ‘ஊழல் பட்டியலை’ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.மு.க-வினர் மீது ‘ரூ5,600 கோடி ஊழல் பட்டியலை’ ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அளித்தார். தி.மு.க-வினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துவரும் அண்ணாமலை அ.தி.மு.க-வினர் மீதான ஊழல் குற்றச்சாட்டு பற்றி பேசுவதில்லை.
2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பத்தாண்டு காலம் தமிழ்நாட்டை அ.தி.மு.க ஆண்டது. அப்போது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அ.தி.மு.க-வினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உண்டு. ‘தி.மு.க ஊழல் பட்டியலை’ அண்ணாமலை வெளியிட்டபோது, அ.தி.மு.க ஊழல் பட்டியலை வெளியிடுவீர்களா என்ற கேள்வி அவரை நோக்கி எழுந்தது. இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகளின் யார் ஊழல் செய்திருந்தாலும் வெளியிடுவோம் என்றார். ஆனால், அதிமுக உடனான கூட்டணியை பாஜக தேசிய தலைமை உறுதி செய்த பிறகு, அண்ணாமலை, அதிமுக ஊழல் குறித்து பேசுவதில்லை.
இந்த நிலையில்தான், ‘தி.மு.க-வினருக்கு எதிராக ஊழல் பட்டியல் வெளியிடும் அண்ணாமலை, அ.தி.மு.க-வினருக்கு எதிராக ஏன் ஊழல் பட்டியல் வெளியிடவில்லை’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பிவருகிறார். ‘பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.மு.க அமைச்சர்கள் குறித்து ஊழல் பட்டியல் வெளியிட்டிருப்பதை வரவேற்கிறேன். இது ஒன்றும் புதிது அல்ல. தி.மு.க-வினருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது... அது எப்படி அவர்களுக்கு கிடைத்தது என்பதெல்லாம் நாட்டு மக்களுக்குத் தெரியும்.
ஆனால், பா.ஜ.க கூட்டணி வைத்திருப்பதால், அ.தி.மு.க-வில் உள்ளவர்கள் புனிதர்களாகிவிட மாட்டார்கள். அ.தி.மு.க-வினரின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும். இரண்டு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்கிறார் சீமான்.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், தி.மு.க-வினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்திருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், அண்ணாமலையை நோக்கி சரமாரியாக கேள்விகளை முன்வைத்தார். ``நீங்கள் நேர்மையானவர், உண்மையானவர் என்றால், அதிமுக சொத்துப் பட்டியலை ஏன் வெளியிடவில்லை. அ.தி.மு.க அமைச்சர்களில் ஏழு பேர் மீது சி.பி.ஐ வழக்கு இருக்கிறது. அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. அது பற்றி நீங்கள் ஏன் பேசுவதில்லை. அந்தப் பட்டியலை ஏன் நீங்கள் வெளியிடுவதில்லை... நேர்மையாளராக இருந்தால், இரண்டு தரப்பினர் பற்றிய ஊழல்களையும் வெளியிட வேண்டும். அதை விடுத்து, அ.தி.மு.க-வில் இருக்கும் அனைவரையும் புனிதர்களாக்கும் வேலையை நீங்கள் செய்துகொண்டிருந்தால் எப்படி?” என்று அண்ணாமலையைப் பார்த்து கேட்கிறார் சீமான்.
அதேபோல, ‘தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த அஜித் பவார் மீது ரூ.70,000 கோடி ஊழல் வழக்கு இருக்கிறது என்று பா.ஜ.க தலைவர்களே சொன்னார்கள். ஆனால், அவரை அவசர அவசரமாக தங்கள் கூட்டணியில் சேர்த்து, அவருக்கு துணை முதல்வர் பதவியையும் கொடுத்தார்கள். அப்படியென்றால், ஊழலை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்றுதானே பொருள். பா.ஜ.க-வில் ரெளடிகளும் ஊழல்வாதிகளும் அதிகளவில் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, நான் புனிதமானவன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி? அ.தி.மு.க-வின் ஊழல்களைப் பேசாமல், தி.மு.க-வை மட்டுமே நீங்கள் பேசிக்கொண்டிருந்தால், உங்களுடைய அரசியல் லாபத்துக்காக அதைச் செய்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றி நீங்கள் பேசுவதே இல்லையே ஏன்? கொடநாட்டில் கொலை நடந்திருக்கிறது. முன்னாள் முதல்வரின் இல்லம் என்பதால், அங்கு ஒரு நிமிடம்கூட மின் இணைப்பு துண்டிக்கப்பட மாட்டாது. அப்படியிருக்கும்போது, ஒரு மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்கச் சொன்னது யார்? ஆறு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏன் அவர்கள் கொல்லப்பட்டார்கள்? யார் சொல்லி அது நடந்தது? அதை விசாரித்து மக்களுக்கு சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்கிறதுதானே.
இது பற்றி அண்ணாமலை பேசுவதே இல்லையே, ஏன்? அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி நீங்கள் வாயே திறப்பதில்லையே, ஏன்? அ.தி.மு.க-வின் ஊழல்களை வெளியிட்டால், அப்போது உங்களை நேர்மையாளர் என்று பாராட்டுகிறேன். கூட்டணியில் இருப்பதால் அவர்களுக்கு ஒரு புனிதப் பிம்பம் கொடுத்து, அவர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறது. அந்த அணுகுமுறை தவறு” என்றார் சீமான்.
அண்ணாமலை மீது சீமான் வைத்துவரும் விமர்சனம் குறித்து பா.ஜ.க-வின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம். அதற்கு அவர், ``அ.தி.மு.க குறித்து சீமான் குறிப்பிடும் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தி.மு.க அரசுதான். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது சி.பி.ஐ வழக்கு ஏற்கெனவே பதியப்பட்டிருக்கிறது. மற்றபடி, பா.ஜ.க மீது சீமான் முன்வைக்கும் விமர்சனங்களை நாங்கள் பொருட்படுத்தவில்லை” என்றார் நாராயணன் திருப்பதி.
முன்னதாக, நேற்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், சீமான் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ``‘திமுக மீது பாஜக ஊழல் பட்டியல் வெளியிடுகிறது. ஏன் அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடவில்லை.’ என சீமான் கேட்கிறார். அதிமுக ஊழல் பட்டியலை சீமான் வெளியிடட்டுமே. நாங்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேசுகிறோம். அதில் குறைகள் சொல்லலாம். ஆனால் சீமான் ஏதாவது வெளியிட்டுள்ளாரா என்பது தான் கேள்வி.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/S3BIXr6
0 Comments