உக்ரைன் - ரஷ்யாவுக்கிடையே போர் தொடங்கியது முதல், உலக நாடுகள் பலவும் ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. மேலும், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், உக்ரைனிலிருந்து சட்டவிரோதமாகக் குழந்தைகளை நாடு கடத்திய குற்றத்துக்காகவும் ரஷ்ய அதிபர் புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் International Criminal Court (ICC) கைது வாரன்ட் பிறப்பித்தது. இந்த நிலையில், இது குறித்து ஐசிசி வழக்கறிஞர் கரீம் கான், ``ரஷ்ய அதிபர் புதின் 123-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளில் காலடி எடுத்துவைத்தால் கைதுசெய்யப்படுவார்'' எனத் தெரிவித்தார்.
ஆனால், ஐசிசி-யில் உறுப்பினராக இல்லை என்பதால், புதினைக் கைதுசெய்ய முடியாது என ரஷ்யா தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின், பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டுக்காக தென்னாப்பிரிக்காவுக்குச் செல்வார் அப்போது அவரைக் கைதுசெய்ய வேண்டும் என தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கூட்டணி, நீதிமன்றத்துக்குச் சென்றது. ஆனால், தென்னாப்பிரிக்க அதிபர் சீரில் ரமபோசா (Cyril Ramaphosa), ``புதினைக் கைதுசெய்வது போன்ற நடவடிக்கை தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தானது.
இதில் தென்னாப்பிரிக்காவுக்கு வெளிப்படையான சிக்கல்கள் இருக்கின்றன. ரஷ்ய அதிபர் புதின் தென்னாப்பிரிக்காவில் கைதுசெய்யப்பட்டால், அது ரஷ்யாவுடனான போர் பிரகடனமாகக் கருதப்படும். ரஷ்யாவுடன் போரில் ஈடுபடுவது நமது அரசியலமைப்புக்கு முரணானது" என பதிலளித்திருந்தார். இந்த நிலையில், ஐசிசி-யின் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதிலிருந்து உக்ரைன் - ரஷ்ய எல்லையை புதின் தாண்டவில்லை எனக் கூறப்படுகிறது. பிப்ரவரி 2022-ல் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, புதின் அண்டை நாடுகளான முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுக்கும், இரானுக்கும் மட்டுமே பயணம் செய்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, பிரிக்ஸ் மாநாட்டிலும் ரஷ்ய அதிபர் புதின் கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் சொ்கேய் லாவ்ரோவ் பங்கேற்றார். அதேபோல, ஐசிசி ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிடவில்லை என்றாலும், செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெறவிருக்கும் G20 உச்சி மாநாட்டிலும் புதின் கலந்துகொள்ளமாட்டார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில்தான், அக்டோபர் மாதம் சீனாவில் நடைபெறவிருக்கும் One Belt One Road forum என்ற மாநாட்டில் பங்கேற்க புதின் ஒப்புக்கொண்டிருக்கிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகு, அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என சொல்லப்படுகிறது. மேலும், புதின் தனது பாதுகாப்புக்கு முற்றிலும் உத்தரவாதம் அளிக்கும் நாடுகளுக்கு மட்டுமே செல்ல தயாராக இருப்பதாகவும், அந்த இடங்களில் சீனாவும் ஒன்று என்று கூறப்படுகிறது. புதின் இந்த ஆண்டு மார்ச் மாதம்தான் சீனாவுக்கு பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/G2FQazE
0 Comments