‘பாஜக மாடல் டோல்கேட்’ குற்றச்சாட்டு: பரனூர் டோல்கேட் விவகாரத்தில் நடந்தது என்ன?!

பரனுர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி கூடுதலாக ரூ.28 கோடி ரூபாய் வசூல் செய்ததாக, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையான சிஏஜி அறிக்கையின் மூலம் தகவல் வெளியானது. மேலும், அந்த அறிக்கையில், ஆகஸ்ட் மாதம் 2019-ம் ஆண்டில் இருந்து ஜூன் மாதம் 2020-ஆம் ஆண்டின் காலகட்டத்தில் மட்டும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி வழியே 1.17 கோடி வாகனங்கள் சென்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதில் 62.37 லட்ச வாகனங்கள், அதாவது 53.27 சதவிகிதம் விஐபி வாகனங்கள் என்பதால் அதற்கான கட்டணத்தினை சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது. அதாவது பரனூர் சுங்கச்சாவடி வழியே செல்லும் 10 வாகனங்களில் 5 வாகனங்கள் விஐபி சலுகையில் செல்கின்றனாவா? என்றகிற கேள்விவும் எழுந்துள்ளது.

சு.வெங்கடேசன்

இந்த முறைகேடு குறித்து விமர்சித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “செங்கல்பட்டு – பரனூர் டோல் கேட்டில் ஓராண்டில் ஒரு கோடியே 12 லட்சம் வாகனங்கள் சென்றுள்ளது. இதில் 62 லட்சம் வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்தாத விஐபி வாகனங்கள். நவீன ஊழலின் அடையாளமான பரனூர் டோல்கேட்டை இனி ‘பாஜக மாடல் டோல்கேட்’ என்றே அழைக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், “சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் அம்பலப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட சுங்கக்கட்டண விதிகளின்படி, நான்கு வழிச்சாலைகள் ஆறுவழிச் சாலைகளாகவோ, எட்டுவழிச் சாலைகளாகவோ தரம் உயர்த்தப்படும் போது, கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை, ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணத்தில் 75 விழுக்காடு மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், தாம்பரம் - திண்டிவனம் இடையே இரு இடங்களில் நான்குவழிச் சாலையை எட்டுவழிச் சாலையாக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் சுங்கக்கட்டணத்தைக் குறைக்காமல் வழக்கமான கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வசூலித்து வருவது கண்டனத்துக்குரியது.

வேல்முருகன்

பரனூர் சுங்கச்சாவடி மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.28 கோடி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்றால், தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சுங்கச்சாவடிகளில் நூற்றுக்கணக்கான கோடிகள் வசூலிக்கப்பட்டிருக்கும் என்பது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் இத்தகைய சுங்கக்கட்டணக் கொள்ளையை தடுக்காமல், சுங்கச்சாவடி உரிமையாளர்களோடு கை கோர்த்துக் கொண்டு கூட்டுக் கொள்ளையில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது. சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளை அடிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. எனவே, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும். சுங்கக்கட்டண கணக்கு மேலாண்மை என்பது வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

“ஊழலை பற்றி பேச மோடிக்கு அருகதை உண்டா? அரசின் செலவுகள் குறித்த ஆய்வு செய்து, ஒப்புதல் அளிப்பது தான் சிஏஜியின் பணியாகும். அந்த அமைப்பே பாஜக ஊழல் ஆட்சி என தெரிவித்து ரூ.7.50 லட்சம் கோடி ஊழல் புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதை நாங்கள் சொல்லவில்லை. சிஏஜி தான் சொல்கிறது. முக்கியமாக, 7 விதமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது” என்று சமீபத்தில், நாகப்பட்டினம் கம்யூனிஸ்ட் எம்.பி செல்வராஜ் மகள் திருமண விழா பேசியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதில், பரனூர் சுங்கச்சாவடி குறித்தும் விவரித்துள்ளார்.

ஸ்டாலின்

அதன்படி, “நாடு முழுவதும் 600 சுங்கச்சாவடிகளில், 5 சுங்கசாவடிகளை சிஏஜி ஆய்வு செய்தது. விதிக்கு புறம்பாக ரூ.132 கோடியே 5 லட்சத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் பரனூர் சுங்கச்சாவடியில் ரூ. 6.50 கோடி முறைகேடாக வசூலிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆய்வு நடத்தினால் பல ஆயிரம் கோடி முறைகேடு நடத்திருக்கும் என ஆய்வு சொல்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “மீண்டும் மீண்டும் என்னவென்று தெரியாமலேயே உளர்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். பரனூர் சுங்கச்சாவடிக்கான அனுமதி முடிந்திருந்தாலும், நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கி, அதன் உத்தரவுபடி நடத்தி கொண்டிருக்கிறார்கள். சுங்கக் கட்டணம் அதிகமாக வசூலிக்கிறார்கள் என்று ஒரு பக்கம், சுங்கக்கட்டணம் வசூலிப்பதில்லை என்று அவர்களாகவே கூக்குரலிடுவது மறு பக்கம். இது வேண்டுமென்றே ஏதாவது பேச வேண்டும் என்கிற விஷயமாகத்தான் பார்க்க முடியும். சட்டப்படி சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டுமென்றால் அதை செலுத்தித்தான் ஆக வேண்டும்.

நாராயணன் திருப்பதி

இத்தனை வாகனங்கள் சுங்கக்கட்டணம் செலுத்தவில்லை என்கிறார்கள். அது, என்ன வாகனம், யாருடையது என்பது அந்தந்த சுங்கச்சாவடிகளில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழகத்தில் அரசியல் கட்சி சார்ந்தவர்கள், குறிப்பாக ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் பெரும்பாலானோர் சுங்க கட்டணத்தை செலுத்தாமல் தான் செல்கிறார்கள். அப்படி இல்லை என்று சொன்னால் அங்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தி, பணிபுரிபவர்களிடம் வன்முறையை கையாள்கிறார்கள். அதனால், அந்தந்த சுங்கச்சாவடியில் இருக்க கூடிய தரவுகளை பார்த்தாலே எந்தெந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மிரட்டி கட்டணத்தை செலுத்தாமல் செல்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். பாதிக்கு பாதி வாகனம் சுங்கக்கட்டணம் செலுத்துவதில்லை என்று முன் வைக்கும் இவர்களது குற்றச்சாட்டுபடி பார்த்தால், அது எல்லாம் பாஜக-வினரின் வாகனங்களா...” என்கிற கேள்வியினை முன் வைக்கிறார்.



from India News https://ift.tt/aCq69Qs

Post a Comment

0 Comments