பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலத்தின் குருகிராமையடுத்த நூஹ் பகுதியில் கடந்த திங்களன்று, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பேரணி சென்றபோது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு பெரும் வன்முறையாக வெடித்திருக்கிறது. பா.ஜ.க மாவட்ட தலைவர் தொடங்கிவைத்த பேரணி தற்போது மூன்று நாள்களாக வன்முறையாக எரிந்துகொண்டிருக்க, இதில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.
மேலும் இந்த வன்முறையில் மசூதி உட்பட கடைகள், வாகனங்கள் எரித்து நாசமாக்கப்பட்டன. மூன்று நாள்களாக வன்முறையை இன்னும் கட்டுக்குள் கொண்டுவரவில்லை இந்த இரட்டை இன்ஜின் பா.ஜ.க அரசு. இன்னொரு பக்கம், அமைதி காக்குமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் எம்.எல்.கட்டர், ``எங்களால் எல்லோரையும் பாதுகாக்க முடியாது, காவல்துறையாலோ அல்லது ராணுவத்தாலோ கூட அதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது" என்று நேற்று வெளிப்படையாகச் சொன்னார்.
இந்த நிலையில் வன்முறையிலிருந்து அனைத்து தரப்பினரும் விலகியிருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை வலியுறுத்தியிருக்கிறது. நேற்றைய தினம் நடைபெற்ற வெளியுறவுத் துறை மாநாட்டில் ஹரியானா வன்முறை தொடர்பாகப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறையின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், ``வன்முறையைப் பற்றி வெளிப்படையாகச் சொன்னால், எப்போதும் போல அமைதியாவும், வன்முறையிலிருந்து விலகியிருக்குமாறும் அனைத்து தரப்பினரையும் நாங்கள் வலியுறுத்துவோம்" என்று கூறினார்.
மேலும், ஹரியானா வன்முறையில் அமெரிக்கர் யாராவது பாதிக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு, ``இது தொடர்பாக அமெரிக்க தூதரகத்திடமிருந்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை''எனத் மேத்யூ மில்லர் கூறினார்.
தற்போது கைமீறிப் போய்க்கொண்டிருக்கும் இந்த வன்முறையானது நூஹ் பகுதி மட்டுமல்லாது அருகிலுள்ள குருகிராம், ஃபரிதாபாத், பல்வால் ஆகிய மாவட்டங்களிலும் பரவிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அந்தந்தப் பகுதிகளில் 20 மத்தியப் படைகள் நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
from India News https://ift.tt/fZljId3
0 Comments