குஜராத் மாநிலத்தில் 2002-ல் மோடி முதலமைச்சராக இருந்தபோது ஏற்பட்ட கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், எவ்வாறு இஸ்லாமியர்களின் மீதான பெருங்கலவரமாக வெடித்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தச் சம்பவத்தின்போது, ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற இஸ்லாமியப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். ஆனால், இதில் 14 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துவந்த 11 ஆயுள் தண்டனைக் குற்றவாளிகளை, கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் குஜராத் அரசு விடுதலை செய்தது. அதோடு, இந்தக் குற்றவாளிகளை மாலை, இனிப்புகளுடன் வரவேற்ற அவலமும் அரங்கேறியது.
குஜராத் அரசின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தன. குஜராத் அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களும் ஏராளமாகத் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், இது தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றில், ``குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் சமூகத்துடன் ஒன்றிணைய அரசியலமைப்பு ரீதியாக உரிமை உண்டு" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, சிபிஐ (எம்) மூத்த தலைவர் சுபாஷினி அலி ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிஜாம் பாஷா, ``குற்றவியல் விசாரணையில் இறுதிவரை நியாயமான விசாரணை மேற்கொள்ள குற்றம்சாட்டப்பட்டவருக்கு உரிமை இருக்கிறது. அதேசமயம், விசாரணை இறுதியான பிறகு அதில் தண்டனைக் குறைப்புக்கான அடிப்படை உரிமை எதுவும் இருக்க முடியாது. ஆனால், சட்டப்படி விண்ணப்பிக்கவும், பரிசீலனை செய்யவும் சட்டபூர்வ உரிமை இருக்கிறது'' என்றார்.
அதைத் தொடர்ந்து வாதாடிய மஹுவா மொய்த்ரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ``பில்கிஸ் பானுவுக்கு நடந்தது, மனித குலத்துக்கே எதிரான குற்றம். 2002-ல் நடந்த குஜராத் வகுப்புவாத மோதலிலிருந்து, பில்கிஸ் பானுவுக்கு என்ன நடந்தது என்பதை தனித்தனியாகப் பார்க்க முடியாது. இது, மதம் மற்றும் பாலின அடிப்படையில் குறிப்பிட்ட குழுவை இலக்காக வைத்து துன்புறுத்துவதன் ஒரு பகுதியாகும்" என்றார்.
பின்னர் இந்த வழக்கின் குற்றவாளிகள் தரப்பு, `தண்டனைக் குறைப்பு உத்தரவில் மூன்றாம் தரப்பினரைக் கேள்வி கேட்க அனுமதிப்பது ஆபத்தான முன்னுதாரணமாக அமையும்' என்று கூறியது.
இதை எதிர்த்த இந்திரா ஜெய்சிங், ``மனுதாரர்கள், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரின் ஒரு பகுதியாக இல்லையென்றாலும்கூட, பொதுநலனில் அக்கறை கொண்டிருக்கின்றனர். எனவே, குற்றம் நடந்த சூழல், அதன் தன்மை, நோக்கம், பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றை அரசு கவனத்தில்கொள்ள வேண்டும். மும்பை விசாரணை நீதிமன்ற நீதிபதி, `மதத்தை அடிப்படையாகக் கொண்ட நோக்கம் கொடூரமானது. இந்த விவகாரத்தில், குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே எந்த பகைமையும் இல்லாதபோதும், அதன் நோக்கம் தீமையானதாக இருந்தது. இது மனித குலத்துக்கு எதிரான குற்றம்' என்று குறிப்பிட்டு குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்க ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
இதில், நீதிபதியின் கருத்து பொருத்தமான காரணி மட்டுமல்லாது, ஒரு தீர்க்கமான காரணி ஆகும். எனவே, குற்றவாளிகளுக்கான தண்டனைக் குறைப்பில் அடிப்படை உரிமை எதுவும் இருக்க முடியாது" என்று வாதிட்டார்.
இறுதியாக நீதிபதி பி.வி.நாகரத்னா, ``குற்றம்சாட்டப்பட்டவர்கள் சமூகத்துடன் ஒன்றிணைய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை இருக்கிறது. இதில் தண்டனைக் குறைப்பு என்பது அடிப்படை உரிமையாக இருக்காது. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161 (தண்டனை குறைப்புக்கான ஆளுநரின் அதிகாரம்), பிரிவு 72 (தண்டனை குறைப்புக்கான குடியரசுத் தலைவரின் அதிகாரம்) ஆகியவை அந்த உரிமையை அங்கீகரிக்கிறது. எனவே, இது சட்டப்பூர்வ உரிமை" என்று கூறினார்.
from India News https://ift.tt/Ebr43ZT
0 Comments