``செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்க மாட்டோம்!" - என்.ஆர்.இளங்கோ... ED-யின் அடுத்தகட்ட நகர்வு என்ன?!

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்பதால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், நீதிபதி பரத சக்கரவர்த்தி, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், 10 நாள்களில் தனியார் மருத்துவமனையிலிருந்து சிறையில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் கடந்த ஜூலை 4-ம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.

செந்தில் பாலாஜி - உயர் நீதிமன்றம் - அமலாக்கத்துறை

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதிசெய்ததுடன், செந்தில் பாலாஜியை எப்போது முதல் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிப்பது என்பது குறித்து முடிவெடுக்க, ஏற்கெனவே வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு கடந்த ஜூலை 15-ம் தேதி பரிந்துரைத்தார்.

இந்தப் பரிந்துரையை ஏற்ற தலைமை நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வை அமைக்க ஒப்புதல் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்டிருப்பதாக, தான் பிறப்பித்த தீர்ப்பில் உறுதியாக இருப்பதாக நீதிபதி நிஷா பானு தெரிவித்தார். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்தப் புதிய உத்தரவையும் பிறப்பிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் போலீஸ் காவல் குறித்து உச்ச நீதிமன்றமே முடிவுசெய்யும் எனவும் தெரிவித்து, இந்த ஆட்கொணர்வு வழக்கை முடித்துவைத்து  நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி


இது தொடர்பாக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவிடம்  பேசினோம்.  "இந்தத் தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். உரிய நடைமுறைகளைப் பின்பற்றி இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன், `அமலாக்கத்துறை எப்போதிலிருந்து காவலில் எடுக்கும் என்பதை அமர்வு நீதிமன்றம் முடிவுசெய்யும்’ என்றார். மூன்றாவது நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறது. அதன் காரணமாகவே, `அமலாக்கத்துறை காவல் குறித்து உச்ச நீதிமன்றம் முடிவுசெய்யும்’ என இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது.

ஆட்கொணர்வு மனு முடித்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் நாங்கள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் உச்ச நீதிமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட எழுத்துபூர்வமான வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இன்று முதல் மீண்டும் இரு தரப்பு வாய் மொழி வாதங்களும் தொடங்கும். உயர் நீதிமன்றத்தில் நாங்கள் எப்போதும் ஜாமீன் கேட்கவில்லை. எனவே, உச்ச நீதிமன்றத்திலும் அந்தக் கோரிக்கையை எழுப்பவேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் நாங்கள் இந்தக் கைது சட்டவிரோதமானது என்கிறோம். கைது சட்டவிரோதமெனில் நீதிமன்றக் காவல் இயந்திரத்தனமானதாக மாறிவிடுகிறது. 

என்.ஆர்.இளங்கோ

ED காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்பதை நாங்கள் விவாதிக்கவில்லை. ED தங்கள் அதிகாரம் குறித்து வாதிட்டதன் காரணமாகவே அந்த வாதங்களை முன்வைத்தோம். எனவே, நான் மேற்கூறியவற்றை மையமாகவைத்தே,  உச்ச நீதிமன்றத்தில் எங்கள் விவாதம் இருக்கும். நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்.

இது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் பேசினோம். ``தற்போதைய நிலையில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை பொறுத்தவரை அதைச் சாதகம், பாதகம் என எளிமையாக வகைப்படுத்த முடியாது. அதேநேரம் அதில் எங்களுக்குச் சாதகமான சில அம்சங்கள் இருக்கின்றன. உதாரணமாக, ஒருவேளை உயர் நீதிமன்றமே அமலாக்கத்துறை எப்போதிலிருந்து காவலில் எடுக்கலாம் என்று முடிவுசெய்திருந்தால், நிச்சயமாக செந்தில் பாலாஜி தரப்பினர் மேல்முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றிருப்பார்கள். எனவே, இந்தத் தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தின் காவல் குறித்த முடிவே இறுதியான ஒன்றாக இருக்கும்.

அதேநேரம் ஆட்கொணர்வு வழக்கு முடித்துவைக்கப்பட்டிருப்பது எங்கள் தரப்புக்கு வலு சேர்க்கும்விதமாக இருக்கிறது. வாதங்களைப் பொறுத்தவரை துஷார் மேத்தா உயர் நீதிமன்றத்தில், `கைது சட்டவிரோதமானது அல்ல. ED-க்கு காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இருக்கிறது’ ஆகியவற்றை முன்வைத்தார். அதே போன்ற வாதங்கள் தான் உச்ச நீதிமன்றத்திலும் தொடரும்" என்றார்.



from India News https://ift.tt/rwXglFP

Post a Comment

0 Comments