மணிப்பூர்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விவாதத்தை தவிர்க்கும் காரணம் அரசியலா, அச்சமா?

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டத் திருத்த மசோதா, தொல்பொருள் துறை தளப்பாதுகாப்பு மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா, தபால் சேவை மசோதா, தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா, புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மசோதா, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவும் மசோதா, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களின் பட்டியலின, பழங்குடியின மக்கள் தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதா உள்ளிட்ட 32 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

நாடாளுமன்றம்

இவையன்றி, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு கூட்டுக்குழு அறிக்கை பெறப்பட்ட உயிரியல் பன்முகத்தன்மை திருத்த மசோதா 2022, சிறிய குற்ற நடவடிக்கைகள் தொடர்பான விதிகளை மாற்றும் ஜன் விஸ்வாஸ் சட்டத் திருத்த மசோதா, நிலைக்குழு கூட்டுக்குழு பரிசீலனையில் இருக்கும் வனப்பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்ட இரு மசோதாக்கள், மத்தியஸ்த மசோதா போன்றவையும் நிறைவேற்றப்படுவதற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

‘தனக்கு இருக்கும் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் சட்டங்களை நிறைவேற்றும் வழிமுறை, மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருக்கும் வழிமுறை...’ என தொடர்ந்து பாஜக அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் எதிர்கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார்கள். அதோடு, ‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் போதோ, பேசும் போதே, பா.ஜ.க.வினர் எழுந்து நின்று “மோடி, மோடி...”, “ஜெய்ஸ்ரீராம்...” என்று அந்த விவாதத்தை மடைமாற்றுகிறார்கள். பிரதமர் மோடியோ தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அதை ரசிப்பவராகவே இருக்கிறார்’ என்கிற காட்டமான விமர்சிக்கின்றன எதிர்க்கட்சிகள்.

எதிர்கட்சிகள்

'36 விநாடிகள் பேசிய பிரதமர்'

இந்த மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக பேசிய பிரதமர் மோடி, "மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் நாகரிக சமூகத்துக்கான அவமானம். இதற்காக நாடு வெட்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டங்களை இயற்றும்படி நான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தச் சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், குற்றவாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தப்பக் கூடாது. நான் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன். சட்டம் அதன் முழு பலத்துடன் தனது கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது" என்று தெரிவித்திருந்தார். இதையொட்டி, வெறும் 36 விநாடிகளில் ஒரு பிரச்சினையைப் பற்றி பிரதமர் பேசிச் சென்றதாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதோடு நாடாளுமன்றத்தில் அவர் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

நிலைமை இவ்வாறு இருக்க, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விவாதத்தை விரும்பாததற்கு காரணம் பயமா என்கிற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, ``நாடாளுமன்றம் என்பது ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் தளம். அங்கு கேள்விகள் கேட்கப்பட்டு, அந்த கேள்விகள் விவாதிக்கப்பட்டு, அந்த விவாதத்தின் மூலம் பதில் பெறப்பட்டு, அந்த பதிலும் விவாதிக்கப்பட்டு, அதன் மூலம் சட்டம் இயற்றப்பட்டு, அந்த சட்டத்தினால் மக்களுக்கு நல்லதா கெட்டதா என்று முடிவு செய்வதுத்தான் நாடாளுமன்றம். ஜனநாயக நடான இந்தியாவின் நாடாளுமன்ற தன்மையே விவாதிப்பதுதான்.

தமிழன் பிரசன்னா

ஆனால், மோடி கடந்த ஒன்பது ஆண்டுகளில் அதிகபட்சமாக பத்து நாள் கூட நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. எந்த விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை. நாடாளுமன்றம் நடைபெறும் போது பிரதமர் இருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால், அந்த நேரங்களில் வெளிநாடுகளில் இருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் விவாதங்களை மோடி புறக்கணிப்பது என்பது, மக்களை சந்திக்க, எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள, கேள்விகளுக்கு பதில் சொல்ல அஞ்சுகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. கேட்டால் மன்கி பாத்தில் ரேடியோவில் பேசுவதாக சொல்கிறார். அதற்கு எதற்கு இவர் பிரதமாராக இருக்க வேண்டும். ஜனநாயகம் என்பதே விவாதத்துக்குரியது. அதை தொடர்ந்து தவிர்ப்பது என்பது மோடிக்கு எதுவும் தெரியாது, அவர் விவாதத்து தயராக இல்லை என்பதோடு ஜனநாயகத்தின் மீதான அவரின் அச்சம் தெரிகிறது. அவர் பேசினால் அவரின் உண்மையான நிலை என்ன, தகுதி என்ன என்பது அம்பலமாகும். அதனாலேயே அவர் விவாதங்களில் தவிர்க்கிறார்” என்றார்.

புரட்சி கவிதாசன்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன், “எதிர்க்கட்சிகளின் அரசியல் மேடையாக நாடாளுமன்றத்தை மாற்றுவதை பிரதமர் விரும்பவில்லை. பிரதமர் என்கிற பொறுப்பு அவருக்கு இருக்கிறது. அந்த வகையில் பதில் சொல்வதற்கும் தயாராக இருக்கிறார். ஆனால், முழுக்க முழுக்க இந்திய மக்களை முட்டாளாக்க நாடகம் நடத்தும் போது, அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இந்திய ஜனநாயகத்தின் கோயிலாக இருக்க கூடிய நாடாளுமன்றத்திற்குள் முதலில் அமைதியாக வந்து அமர்ந்து, ஒழுங்காக நடத்த ஒத்துழைப்பு கொடுங்கள். பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வராதவர் கிடையாது. வர மாட்டேன் என்பதும் அவரின் நிலைபாடு இல்லை. எப்ப வர வேண்டும், எதற்கு வர வேண்டும் என்றும் அவருக்கு தெரியும். அதனால்தான் அமைதியை பதிலாக வைத்திருக்கிறார்” என்றார்.



from India News https://ift.tt/tfpZHGO

Post a Comment

0 Comments