தமிழகம் முழுவதுமே தி.மு.க-வில் கோஷ்டி பூசல்கள் அதிகரித்தபடியே இருக்கின்றன. பெரும்பாலான மாவட்டங்களில் வெளிப்படையாகவே கட்சியினர் பிரிந்து கிடப்பதுடன் ஒருவருக்கொருவர் எதிர்மறையான அரசியல் செய்து வருகிறார்கள். அதனால் கட்சித் தலைமை தலையிட்டு அதிரடியாக சிலரின் பதவி பறிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பது கட்சித் தொண்டர்களின் விருப்பம்.
ஆனால், கட்சியினர் அனுப்பும் புகார்கள் கட்சித் தலைமைக்குச் சேரவில்லையோ என கட்சியினர் நினைக்கும் அளவுக்கு எந்த புகாரின்மீதும் நடவடிக்கை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தென் மாவட்டத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் நெல்லை மாவட்ட தி.மு.க கோஷ்டி பூசலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அதிரடியாக மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் பதவி பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் பதவி பறிப்பு நடந்திருக்கிறது.
தென்காசி மாவட்டத்திலும் கோஷ்டி பூசல் அதிகரித்தபடியே இருந்தது. கட்சி நிர்வாகிகளுக்குள் இருக்கும் கோஷ்டிகளால் மக்கள் பணிகளில் தொய்வு ஏற்படும் சூழல் உருவானது. குறிப்பாக, தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவராக உள்ள தமிழ்செல்விக்கு எதிராக சொந்தக் கட்சியின் கவுன்சிலர்கள் சிலரை தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளரான சிவபத்மநாதன் தூண்டிவிட்டு கவுன்சில் கூட்டம் நடக்க முடியாதபடி முடக்கியதாகக் கூறப்பட்டது.
அதனால் மாவட்ட ஊராட்சி தலைவரான தமிழ்செல்வி தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் தனக்கு ஏதாவது ஏற்பட்டால் தி.மு.க மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன், கவுன்சிலர் கனிமொழி ஆகியோரே பொறுப்பு என மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புகார் மனு அளித்தார். அத்துடன், தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க-வில் உள்ள கோஷ்டி மோதல் இரு தினங்களுக்கு முன்பு தொண்டர்கள் முன்பாகவே வெளிப்படையாக வெடித்தது. மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து தென்காசியில் தி.மு.க மகளிர் அணி சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வியை பேச விடாமல் பைக் பிடுங்கப்பட்டதுடன், அவரை மேடையில் இருந்து கீழிறக்கினார்கள். அவரோ, “கட்சியில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு கிடையாது. நீங்கள் மணிப்பூர் பெண்களுக்கு நடந்த கொடுமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்களா..” என மேடையிலேயே கொந்தளிப்புடன் கேட்டதை ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த தி.மு.க தொண்டர்கள் பலரும் கேட்டு வேதனையடைந்தனர்.
தென்காசி மாவட்ட தி.மு.க-வினருக்குள் நிலவும் சண்டைகள் இணையத்திலும் வைரலாக எதிரொலித்தது. ஒவ்வொரு அணியினரும் தங்களுக்கு எதிரான அணியினரைப் பற்றி அவதூறாகவும் ஆதாரத்துடனும் பல்வேறு புகார்களைத் தெரிவித்து வந்தனர். தாங்கள் செய்ய வேண்டிய வேலையை சொந்தக் கட்சியினரே செய்து முடிப்பதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள எதிர்க்கட்சியினர் பலரும் இந்த மோதலை சுவாரஸ்யத்துடன் வேடிக்கை பார்த்து வந்தார்கள்.
இந்த நிலையில், நீண்ட மௌனத்துடன் இருந்த கட்சித் தலைமை திடீரென சுதாரித்துக் கொண்டு தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த சிவபத்மநாதனை அதிரடியாக நீக்கியுள்ளது. கட்சிக்குள் தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு செயல்பட்டதுடன் தொண்டர்களை அரவணைத்துச் செல்லாததே இந்த மாற்றத்துக்குக் காரணம் என கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சுரண்டை நகரச் செயலாளராக பணியாற்றும் ஜெயபாலன் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
சிவபத்மநாதன் பதவி பறிப்பு தென்காசி தெற்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் பலரையும் அச்சம் அடைய வைத்துள்ளது. காரணம், கட்சியின் பெண்களை ஆபாசமாக வர்ணித்தவர்கள், இணையத்தில் சொந்தக் கட்சியின் மகளிரையே அருவருப்பாக பதிவிட்டவர்கள் என பலரும் கலக்கம் அடைந்திருக்கிறார்கள். அதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
from India News https://ift.tt/3G8q7n5
0 Comments