முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: ஓட்டோமான் அரசால் ஒடுக்கப்பட்ட ஆர்மீனியர்கள்; காரணம் அரசியலா, மதமா?

ஆர்மீனியப் படுகொலைகளுக்கும் முதலாம் உலகப்போருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தப் படுகொலைகள் முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருக்கும்போது நடைபெற்றவை என்பதோடு இந்தப் படுகொலைகளைச் செய்தது முதலாம் உலகப்போரில் முக்கிய பங்கு வகித்த ஓட்டோமான் சாம்ராஜ்யம் எனப்படும் துருக்கி ஆகும்.

ஓட்டோமான் சாம்ராஜ்யம் என்பது பல மதங்களையும் பல இனங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. இதில் ஆர்மீனிய மக்கள் குறிப்பிடத்தக்க அளவிலிருந்தார்கள். முதலாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆர்மீனிய மக்கள் மீது ஓட்டோமான் சாம்ராஜ்ய அரசு பெரும் சந்தேகம் கொண்டது. அவர்களுக்கு ரஷ்யாவின் மீது ஒரு பிடிப்பு இருந்ததாக அது கருதியது (முதலாம் உலகப்போரில் ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் எதிரிகளில் ஒன்றாக ரஷ்யா இருந்தது நினைவிருக்கலாம்).

1898/99-ல் ஆர்மீனிய கிராமங்களிலிருந்து திருடும் குர்து இன மக்கள்

1915ல் முதலாம் உலகப்போர் நடை​பெறும் பகுதியிலிருந்த ஆர்மீனிய மக்களை தெற்குப் பகுதி மாகாணங்களுக்குக் குடியேற்றியது ஓட்டோமான் அரசு. ஆனால் இது சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. இதன் பின்னணியைக் காண்போம்.

துருக்கியின் கிழக்கு எல்லைப் பகுதி நாடுகளில் ஒன்று ஆர்மீனியா. இந்த இரு நாடுகளுக்குமிடையே முன்னொரு காலத்தில் பெரும் பகைமை நிலவியது. (அதன் நிழல் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது). 1915ல் நடைபெற்றது அந்தப் பகைமையின் உச்சக் கட்டம். அதாவது முதலாம் உலகப் போர் காலகட்டம்.

நான்காம் ​நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆர்மீனியா சுதந்திரமான தனி நாடாகத்தான் இருந்தது. அதற்கென்று ஒரு தனித்துவம் இருந்தது. உலகிலேயே கிறிஸ்தவத்தைத் தனது அதிகாரபூர்வமாக மதமாக அறிவித்த முதல் நாடு ஆர்மீனியாதான். என்றாலும் காலப்போக்கில் பல சாம்ராஜ்யங்களின் பிடிக்குள் சிக்கியது ஆர்மீனியா.

பதினைந்தாம் ​நூற்றாண்டில் அந்தப் பகுதியில் பிரமாண்டமாகப் பரவியிருந்த ஓட்டோமான் சாம்ராஜ்யத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டது. அபோஸ்டோலிக், கத்தோலிக்க மற்றும் ப்ராடெஸ்டென்ட் ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக ஆர்மீனியர்கள் இருந்தார்கள். சுயாட்சி மூலம் இவர்களே ஆர்மீனியாவை ஆட்சி செய்து கொள்ளலாம் என்ற சலுகையை வழங்கியது ஓட்டோமான் சாம்ராஜ்ய அரசு.
மதம் மாற்றப்பட்ட ஆர்மீனியர்கள்

ஆனால் ஆர்மீனியாவின் கிழக்கு மாகாணங்களில் வசித்தவர்கள் சில குறிப்பிட்ட சித்ரவதைகளுக்கு உள்ளானார்கள். எல்லைப் பகுதிகளில் வசித்த துருக்கியர்களும், குர்துகளும் ஆர்மீனியர்கள் விற்கும் பொருள்களுக்கு நிறைய வரிகளைத் தீட்டினார்கள். தவிர அவர்களைக் கடத்தி இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்துவதும் வழக்கமானது.

பொதுவாக ஓட்டோமான் சாம்ராஜ்யத்தில் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் சொத்துக்களை வாங்குவது தடை செய்யப்படவில்லை. அவர்களுக்கு வழிபாட்டு உரிமையும் உண்டு. என்றாலும் முஸ்லிம் அல்லாதவர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள்போலவே நடத்தப்பட்டார்கள். பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் புதிதாக எந்த வழிபாட்டுத் தலத்தையும் கட்டக்கூடாது என்ற நிபந்தனை அமுலுக்கு வந்தது (என்றாலும் இதைச் சாம்ராஜ்யத்தின் பல பகுதிகளில் அவ்வளவு கண்டிப்புடன் செயல்படுத்தவில்லை என்பதே உண்மை).

சட்டபூர்வமாக ஆர்மீனியாவில் முஸ்லிம்களுக்குச் சமமாகக் கிறிஸ்தவர்கள் நடத்தப்படவில்லை. குற்றவியல் பிரிவில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கிறிஸ்தவர்களோ, யூதர்களோ அளிக்கும் சாட்சி ஏற்கப்படவில்லை. வணிகம் தொடர்பான விஷயங்களில் மட்டும்தான் முஸ்லிம்களிடமிருந்து அவர்கள் நஷ்டஈடு பெறமுடியும். முஸ்லிம் வீடுகளுக்கு நே​ரெதிராக அவர்கள் தங்கள் வீடுகளைக் கட்டிக் கொள்ளக் கூடாது. மாதாகோவில்களின் மணியோசை கேட்கக் கூடாது.

பத்தொன்பதாம் ​​நூற்றாண்டில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று ஐரோப்பிய மகாசக்திகளும் ஓட்டோமான் சாம்ராஜ்யத்தைக் கேள்வி கேட்கத் தொடங்கின.

"ஆர்மீனியாவில் உள்ள கிறிஸ்தவர்களுக்குச் சம உரிமைகள் அளிக்க வேண்டும்".

ஓட்டோமான் சாம்ராஜ்யத்தை விட்டு வெளியேறும் ஆர்மீனியர்கள்

இதைத் தொடர்ந்து ஓட்டோமான் அரசு சிறுபான்மையினருக்கு ஆதரவாகப் பல திட்டங்களை அறிவித்தது. ஆனால் அவற்றை நடைமுறையில் கொண்டுவர அங்குள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் சம்மதிக்கவில்லை. இத்தனை தடைகளையும் மீறி ஆர்மீனியர்கள் வளர்ச்சி பெற்றார்கள். துருக்கியர்களைவிடப் படிப்பிலும் செல்வத்திலும் உயர்வு பெற்று விளங்கினார்கள். இதைத் துருக்கியர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தவிரத் துருக்கியர்களுக்கு வேறொரு சந்தேகமும் இருந்தது. ‘ஓட்டோமான் ஆட்சியாளர்களைவிட ஆர்மீனியர்கள் தங்களைச் சுற்றியுள்ள கிறிஸ்தவ நாடுகளிடம் அதிகப் பற்றுதலோடு இருப்பார்கள்’ என்பதுதான் அந்த ஐயம். அந்த சந்தேகம் உண்மைதான் என்பதுபோல்தான் ஆர்மீனியர்களும் நடந்து கொண்டனர். ஆனால், அதற்குக் காரணம் மதப் பற்றுதல் என்பதைவிடப் பாதுகாப்பின்மை எனலாம்.

பல ஆண்டுகள் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் அநீதிகளைப் பொறுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு வந்த ஆர்மீனியர்கள், ‘சம உரிமை தாகத்தை’ தங்கள் ச​மூகத்தினரிடமும் விதைத்தார்கள். அரசு அதிகாரிகளின் அடாவடித் தனங்களையும் சட்ட​த்தின் பார்வையில் தாங்கள் தாழ்வாக நடத்தப்படுவதையும் விவரித்து மனு கொடுத்தார்கள். ஆவண செய்வதாக உறுதியளித்த அரசு எதுவுமே செய்யவில்லை.

1916-ல் ஆயுதம் ஏந்திப் போராடும் ஆர்மீனியர்கள்

காலப்போக்கில் ரஷ்யச் சாம்ராஜ்யம்தான் தங்களுக்குப் பாதுகாப்பானது என்ற எண்ணம் ஆர்மீனியர்களுக்கு அதிகமானது. (அப்போது ரஷ்யாவை ஆண்டது கிறிஸ்தவ ஆட்சியாளர்கள்தான்). ரஷ்யப் படைகளும் ஆர்மீனியாவில் கால் வைத்தன. ஆர்மீனியர்களுக்கு சமத்துவம் அளித்தால்தான் தங்கள் படை பின்வாங்கும் என்றது ரஷ்யா. ஆர்மீனியர்கள், "எங்களுக்குச் சுதந்திரம்கூட வேண்டாம். உண்மையான சுயாட்சி அளித்தால் கூட போதுமானது" என்றனர்.

1915ல் உலகப்போர் நடை​பெறும் பகுதியிலிருந்த ஆர்மீனிய மக்களைத் தெற்குப் பகுதி மாகாணங்களுக்குக் குடியேற்றியது ஓட்டோமான் அரசு. ஆனால் இது சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. அந்தச் சந்தேகத்தின் எதிரொலிகள் வெகு பயங்கரமாக வெளிப்பட்டன.

- போர் மூளும்...



from India News https://ift.tt/FoDAC4p

Post a Comment

0 Comments