"நீதிமன்ற வளாகங்களில் காந்தி, வள்ளுவரின் சிலைகள், உருவப்படங்கள் தவிர மற்ற தலைவர்களின் சிலைகள், உருவப்படங்களை நீக்க வேண்டும்" என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களுக்குச் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பினார். `இது அம்பேத்கர் படங்களை அகற்றுவதற்கான முயற்சி' எனக் கடுமையான எதிர்ப்புகளும் கண்டனங்களும் போராட்டங்களும் வெடித்தன.
இதனையடுத்து தமிழக அரசு நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்து அது தொடர்பாகக் கோரிக்கை ஒன்றையும் உயர்நீதிமன்றத்திடம் வைத்தது. இதற்குப் பதிலளித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, "நீதிமன்றங்களில் தற்போது உள்ள நடைமுறையே தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.
இருந்தும் முதலில் வெளியான சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்தான் தற்போது இப்படிப் பின்வாங்கி இருக்கின்றனர், மீண்டும் இந்தப் பிரச்னை நிச்சயம் தலைதூக்கும் என்பதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விவாதித்து வருகின்றனர். இந்தப் பரபர அரசியல் சூழலில் ஓய்வுபெற்ற மேனாள் நீதிபதி சந்துருவிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினேன்.
"இந்தியாவிலேயே நீதிமன்றங்களில் தமிழ்நாட்டில்தான் சட்டமேதை அம்பேத்கர் புகைப்படங்கள், சிலைகள் உள்ளன. தற்போது, 'காந்தி, வள்ளுவர் படங்கள் மட்டும்தான் நீதிமன்றங்களில் இருக்கவேண்டும். வேறு எந்தத் தலைவர்களின் உருவப் படங்களும் சிலைகளும் இருக்கக்கூடாது' என்று சுற்றறிக்கை அனுப்புவது அம்பேத்கர் புகைப்படங்களை அகற்றுவதற்குத்தான் வழிவகுக்கும். அதனால், இது ஒரு மோசமான சுற்றறிக்கை மட்டுமல்ல, பிரச்னையை உருவாக்கும் சுற்றறிக்கை.
எல்லா நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் புகைப்படம் கட்டாயம் இருக்கவேண்டும் என்று வழக்கறிஞர் சங்கங்கள் வைத்துக்கொண்டிருக்கும் கோரிக்கையை நீதிபதிகள் நிறைவேற்றாமல் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் காந்தி, வள்ளுவர் படங்களைத் தவிர, வேறு எந்தப் படமும் இருக்கக்கூடாது என்று சொல்வது, அம்பேத்கர் புகைப்படங்களை நீக்கவேண்டும் என்ற அர்த்தத்தில்தான். அம்பேத்கர் அரசியலைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி. அவர் உருவாக்கிய 215-வது பிரிவின்படிதான் உயர்நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. 215-வது பிரிவின்கீழ் உருவாக்கப்பட்ட நீதிமன்றமே, அந்தச் சட்டத்தை உருவாக்கிய சிற்பிக்கு இடமில்லை என்று சொல்வதைக் கேவலமாகத்தான் பார்க்கவேண்டும்.
இவர்களுக்கு காந்தி தேசத்தந்தை ஆகிவிட்டார். திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவராகிவிட்டார். திருக்குறளிலேயே நிறையக் குறைகளும் ஒவ்வாத நெறிகளும் உள்ளன. காந்தியே சனாதனத்தை நம்பியவராக உள்ளபோது, இவர்களை எப்படி நீதித்துறையின் ஒரு பங்காக வைக்கமுடியும்? காந்தி, வள்ளுவர் படங்களுடன் அம்பேத்கர் படமும் கட்டாயம் இருக்கவேண்டும். அது என்ன அளவில், எந்த மாடலில் இருக்கவேண்டும் என்று வேண்டுமானால் நீதித்துறை முடிவெடுத்துக்கொள்ளட்டும். ஆனால், நீக்கச்சொல்லி இல்லாத பிரச்னையை உருவாக்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் மனுவுக்குச் சிலை வைத்துள்ளார்கள். அந்த சிலையை நீக்கக்கூடாது என்று தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கருக்கு இருக்கும் சிலைகூட தடுப்பில்தான் வைக்கப்பட்டுள்ளது. சட்டம் இயற்றியவரின் சிலையையே பாதுகாக்கவேண்டிய நிலையில் வைத்திருப்பது நீதித்துறைக்குத்தான் அவமானம். சனாதனத்தை உயர்த்திப்பிடிக்கும் மனுவுக்குச் சிலை இருக்கலாம். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநாட்டிய அம்பேத்கருக்குச் சிலை இருக்கக்கூடாதா? மனு பரவாயில்லை. அம்பேத்கர்தான் பிரச்னை என்றால், உங்களுக்கு ஏதோ கோளாறு இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 3(1)(v)) பிரிவின்படி, பட்டியலின மக்கள் மதிக்கக்கூடிய தலைவர்கள் பற்றி எழுத்தாலோ, பேச்சாலோ, வேறு விதமாகவோ அவமரியாதை செய்தால் ஆறு மாதம் முதல் ஐந்து வருடங்கள் வரை தண்டனை கொடுக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. அப்படியெனில், அம்பேத்கரை அவமதிக்கும் எல்லா நீதிபதிகளுக்கும் இந்தப் பிரிவின்படி தண்டனை கொடுக்கலாமா? அம்பேத்கர் படம் இருக்கக்கூடாது என்று உத்தரவு போட்டாலே அது அவமரியாதைதான். அம்பேத்கரின் படத்திற்கோ சிலைக்கோ அவமானம் ஏற்படுத்தினால் அது சட்டப்படி கிரிமினல் குற்றம்.
இவர்கள், அனுப்பியுள்ள சுற்றறிக்கை அந்த அடிப்படையில்தான் உள்ளது. சட்டத்தை உருவாக்கிய சிற்பிக்கு மரியாதை செலுத்தும் விதமாகத்தான், நீதிமன்றங்களில் அம்பேத்கரின் புகைப்படம் வைக்கச்சொல்கிறோம். ஆனால், இவர்கள் மரியாதை செலுத்தக்கூடாது என்பதற்காகத்தானே நீக்கச் சொல்கிறார்கள். அப்படியென்றால், இவர்களின் உள்நோக்கம்தான் என்ன?" என்று கேள்வியெழுப்புகிறவர், நீதிபதிகளிடையே இருக்கும் முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டுகிறார்.
"கடந்த வருடம் மதுரையில் ஒரு நீதிபதி 'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே உருவாக்கியவர் அம்பேத்கர்தான். அவர் சமூக நீதியின் அடையாளம். ஒவ்வொரு சட்ட மாணவரின் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்கச் சட்டக்கல்லூரி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பவேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்ததோடு, வழக்குத் தொடுத்தவருக்கு 10,000 ரூபாய் வெகுமதியும் அளிக்க உத்தரவிட்டார்.
ஆனால், இப்போது நீதிமன்றம் ஒருமித்த குரலில் பேசாமல், தனித்தனியாக வேறுமாதிரி பேசுவது ஸ்திரமற்றத் தன்மையைக் காட்டுகிறது. மணிப்பூர் மாதிரி முக்கியமான பிரச்னை இருக்கும்போது ஏன் இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும்?" என்கிறவரிடம் "அம்பேத்கர் படத்தை நீக்கச்சொல்வதில் சாதி உள்நோக்கம் இருப்பதாக விமர்சிக்கிறார்களே?" என்று கேட்டோம்.
"அவரைப் பிடிக்காதவர்கள்கூட இருக்கலாம். இந்து சனாதனவாதிகளுக்கு அம்பேத்கரைப் பிடிக்காதுதான். இன்று இந்துக் கடவுளின் புகைப்படங்கள் எல்லா நீதிமன்றங்களிலும் உள்ளன. வெள்ளிக்கிழமை பூஜைகூட செய்கிறார்கள். அதையும் ஒரு நீதிபதிகள் பெஞ்ச் சரியென்றுதான் சொன்னது. அதுவே, சிறுபான்மையினர் வழிபடும் தெய்வங்களின் படங்கள் இல்லை. இதில், உருவ வழிபாட்டை நம்பாதவர்களும் இருக்கிறார்கள். குறிப்பிட்ட மதத்தினரின் கடவுள்களின் புகைப்படங்கள் மட்டும் வைப்பவர்களுக்கு எப்படி அம்பேத்கரைப் பிடிக்கும்? அரசியல் சாசன தினம் கொண்டாடுபவர்கள், அரசியலமைப்புச் சட்டம் இயற்றியவரைக் கொண்டாடமாட்டேன் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?
எந்தத் தனிப்பட்ட சாதியினரும் உரிமை கோராத வகையில், கேள்வி எழுப்பாதவாறு நீதிமன்றமே அம்பேத்கர் புகைப்படங்கள் இருக்கவேண்டும் என்று உத்தரவு கொடுத்தால் இப்பிரச்னைக்கு முடிவு கட்டலாம். ஏற்கெனவே, தமிழக அரசு அம்பேத்கர் புகைப்படங்களை வைக்க உத்தரவிட்டுள்ளது. அதற்கு, எங்களைக் கட்டுப்படுத்தமுடியாது என்று கூறிய நீதிமன்றமே இப்போது அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க உத்தரவிடலாமே? ஆனால், அப்படிச் செய்யாமல் மக்களுக்கு நீதிபதிகள் மீது சந்தேகக் கண்ணோட்டம் ஏற்படும் வகையில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்கள்.
முன்பு, தமிழக அரசு போடும் காலண்டர்களை எல்லா நீதிபதிகளுக்கும் அனுப்பிவைப்பார்கள். அந்த, காலண்டர்களில் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இருக்கும். அவர்கள் படங்கள்தான் எல்லா கோர்ட்டிலும் தொங்கும். ஆனால், நான் அந்த காலண்டர்களை வைத்துக்கொள்ளமாட்டேன். இதுகுறித்து, ரத்தினம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தபோது, தலைமை நீதிபதியாக இருந்த இக்பால் 'இது நல்லமுடிவுதான். தமிழக அரசு போடும் காலண்டர்களை வைக்கக்கூடாது' என்று உத்தரவு போட்டார். அப்போதிலிருந்து, உயர்நீதிமன்றமே தனியாக காலண்டரை பிரின்ட் செய்கிறது. அதிலிருந்து, அந்த காலண்டர்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் முகம்தான் உள்ளது. நான் இருந்தபோது, என் படத்தைப் போடக்கூடாது என்று உத்தரவு போட்டேன். அதனால், என் படம் மட்டும் இருக்காது" என்றவர், அம்பேத்கர் படத்தை நீதிமன்றங்களில் எப்படி வைக்கலாம் என்பது குறித்து வரைமுறை ஒன்றை உருவாக்கலாம் என்றும் அது குறித்து தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதவுள்ளது குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
"ஓய்வுபெற்ற நீதிபதிகள் சேர்ந்து தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதவுள்ளோம். கடிதம் எழுத ஐந்தாறு நீதிபதிகள் ஒப்புக்கொண்டார்கள். அதைப் பரிசீலனை செய்து நீதிமன்றமே அம்பேத்கர் படம், அளவு, நிறம் போன்றவற்றை ஒரேமாதிரியாக முடிவு செய்து அனைத்து நீதிமன்றங்களுக்கும் அனுப்பவேண்டும். அப்போதுதான், இந்தப் பிரச்னையை முழுமையாகத் தீர்க்கமுடியும்" என்கிறார் உறுதியாக.
from India News https://ift.tt/4csbEZ5
0 Comments