ஒன் பை டூ: "பாஜக முறித்துக்கொள்ளும்வரை நாங்கள் கூட்டணியில் தொடர்வோம்" என்ற ஓ.பி.எஸ் கருத்து சரியா?

டி.ஜெயக்குமார்; முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

``ஓ.பி.எஸ்-ஸின் இந்தக் கருத்திலிருந்து அவர் அரசியலுக்கே லாயக்கில்லாதவர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. நாங்கள்தான் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறோம். அவர் இல்லை என்பது மிகவும் வெளிப்படையாகச் சொல்லப்பட்டுவிட்டது. ஆனால், இவ்வளவு நடந்த பிறகும் காலைப் பிடித்துக்கொண்டு, ‘என்னை விட்டுவிடாதீர்கள்’ என்று கெஞ்சிக்கொண்டிருப்பதாகவே அவரின் கருத்தை எடுத்துக்கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து, அ.தி.மு.க-வில் தலைமைப் பதவி வகித்த, நீண்ட அரசியல் அனுபவம்கொண்ட ஒருவரால் எப்படிக் கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் முகம் சுளிக்கும் அளவுக்கு நடந்துகொள்ள முடிகிறது... அவர் இத்தனை ஆண்டுக்காலம் அ.தி.மு.க-வில் பயணித்தார் என்பதைச் சொல்லவே அருவருப்பாக இருக்கிறது. அவரை நம்பியவர்கள் அனைவரையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டார். தான் ஒரு முன்னாள் அ.தி.மு.க-காரன் என்று சொல்வதற்குக்கூட ஓ.பி.எஸ் அருகதையற்றவர். கோடானு கோடி அ.தி.மு.க தொண்டர்களின் ஆலயமான, கட்சியின் அலுவலகத்தை குண்டர்களைவைத்து அடித்து நொறுக்கினாரே... அன்றே ஒவ்வோர் அடிமட்ட தொண்டரும் ஓ.பி.எஸ்-ஸை துரோகியாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். துரோகம் அவரின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. அம்மாவின் ஆன்மாகூட ஓ.பி.எஸ்-ஸை ஒருபோதும் மன்னிக்காது.’’

மருது அழகுராஜ், டி.ஜெயக்குமார்

மருது அழகுராஜ், ஓ.பி.எஸ் ஆதரவாளர்

``பிளவுபட்ட அ.தி.மு.க-வின் நிலைமையை, தங்களின் அரசியலுக்காக பா.ஜ.க பயன்படுத்துவதை உணர்த்தும் ஒரு கருத்தாகவே இதைப் பார்க்கிறேன். பா.ஜ.க-வை ‘இந்தியாவின் மிக மோசமான கட்சி’ என்று விமர்சித்தவர் பொன்னையன். ‘சனியன் தொலைந்தால் போதும்’ என்று காரித் துப்பியவர் சி.வி.சண்முகம். இவர்களோடு, 11 மணி பாடகர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்களும் கோரஸ் பாடினார்கள். ஆனால், கூட்டணி தர்மத்துடன் குறைகளை நெறியோடு எடுத்துச் சொல்லி, பா.ஜ.க-வுக்கு உரிய மரியாதை அளித்தவர் ஓ.பி.எஸ். பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில், தங்களைத் தாறுமாறாக விமர்சனம் செய்த ‘எட்டு தோல்வி’ எடப்பாடிக்கு அழைப்பு விடுத்ததோடு, மழைக்காலக் கூட்டத்தொடரில் ரவீந்திரநாத்துக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள். இது, பா.ஜ.க-வின் சித்து விளையாட்டாகவே கருதப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் மனதில்கொண்டுதான் பழுத்த அரசியல் அனுபவம்கொண்ட அண்ணன் ஓ.பி.எஸ்., `அவர்களாக நீக்கும் வரை நீடிப்போம்’ என்று பேசியிருக்கிறார். கூடவே, எதிர்க்கட்சிக் கூட்டணியையும் வரவேற்றிருக்கிறார். எடப்பாடியால் ஒருபோதும் தமிழக மக்களின் வாக்குகளைப் பெற முடியாது. வீர வசனம் பேசிய எடப்பாடி படுத்துவிட்டார். அண்ணன் ஓ.பி.எஸ் வீரத்தோடு அரசியலை முன்னெடுக்கிறார். இதை எதிர்வரும் அரசியல் நிகழ்வுகள் உறுதிப்படுத்தும்.



from India News https://ift.tt/lzn1wQ3

Post a Comment

0 Comments