மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ.க கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவாரும் அவரின் ஆதரவாளர்களும் சேர்ந்த பிறகு சிவசேனா தலைவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றவுடன், தான் முதல்வராக விரும்புவதாக தெரிவித்து இருந்தார். அவரின் இக்கருத்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் பா.ஜ.க-வுக்கு எதிராகவே இருக்கிறது. இதனால் அடுத்த தேர்தலுக்குள் ஏக்நாத் ஷிண்டேயை மாற்றிவிட்டு அஜித் பவாரை முதல்வராக்க பா.ஜ.க.தலைமை திட்டமிட்டு இருப்பதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தெரிவித்துள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு அஜித் பவாரின் பிறந்தநாளையொட்டி அவரின் ஆதரவாளர்கள் புனேயில் வைத்துள்ள பேனரில் அடுத்த முதல்வர் அஜித் பவார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேயும் அவசர அவசரமாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து தனது கவலையை தெரிவித்து விட்டு வந்திருக்கிறார்.
இது குறித்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பிருத்விராஜ் செளகான் கூறுகையில், ``தற்போதைய முதல்வர் தலைமையில் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்தித்தால் சரியாக இருக்காது என்று பா.ஜ.க கருதுகிறது. எனவே விரைவில் அஜித் பவார் புதிய முதல்வராக பதவியேற்பார். கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி முதல்வர் ஷிண்டே மற்றும் 15 எம்.எல்.ஏ.க்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள மனு மீது ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும்.
இம்மனு மீது முடிவு எடுக்கப்பட்ட பிறகு அஜித் பவார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஏக்நாத் ஷிண்டேயிக்கு தானேயை தவிர்த்து மாநிலத்தின் மற்ற பகுதியில் செல்வாக்கு கிடையாது. எனவே அவர் தலைமையில் மக்களவை தேர்தலை சந்திக்க பா.ஜ.க விரும்பவில்லை. பா.ஜ.க-வுக்கு அஜித் பவார் மாற்று தலைவராக இருக்கிறார். எனவே ஷிண்டேயின் எதிர்காலம் கேள்விக்குறிதான். அஜித் பவார் தலைமையில் தேர்தலை சந்திக்கவே பா.ஜ.க.தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்” என்றார்.
இந்த கருத்து குறித்து துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ``கூட்டணி அரசில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற முறையில் சொல்கிறேன். அஜித் பவார் மகாராஷ்டிரா முதல்வராக வரமாட்டார். அமைச்சரவை வரும் 10-ம் தேதிக்கு பிறகு விரிவுபடுத்தப்படும். ஜூலை 2-ம் தேதி அஜித் பவாரை உள்ளடக்கிய கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் அஜித் பவாரிடம் உங்களை முதல்வராக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்தோம்.
அதை அஜித் பவாரும் ஏற்றுக்கொண்டிருந்தார். மாநில தலைமையை மாற்றுவது குறித்து விவாதிக்கவே இல்லை. பிருத்விராஜ் வதந்தியை பரப்புகிறார். ஆகஸ்ட் 10-ம் தேதி எதாவது நடப்பதாக இருந்தால் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும். வேறு எதுவும் நடக்காது” என்று தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு மகாராஷ்டிராவில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. அஜித் பவார் மூலம் அதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று பா.ஜ.க.விரும்புவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு புறம் அஜித் பவாரின் முக்கிய ஆதரவாளரான சட்டமேலவை உறுப்பினர் அமோல் மித்ரி அளித்துள்ள பேட்டியில், `அஜித் பவாரின் சகாப்தம் தொடங்கிவிட்டதாக’ தெரிவித்துள்ளார். மேலும் கடந்த மக்களவை தேர்தலின் போதே பாராமதி தொகுதிக்கு பா.ஜ.க.குறிவைத்தது. ஆனால் முடியாமல் போய்விட்டது. இப்போது அஜித் பவாரை வைத்து சரத் பவாரின் மகள் சுப்ரியாவின் கோட்டைக்குள் நுழைய பா.ஜ.க திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.
from India News https://ift.tt/QGo9xKO
0 Comments