தமிழ்நாட்டைவிட அதிக அளவில் ஆறுகளும், மலைகளும் கேரளாவில் இருந்தாலும், அங்கு கனிமவளங்களை எடுக்க கடும் கட்டுப்பாடுகள் அரசால் விதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் அப்படி கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால், மாநிலம் தாண்டி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளா மாநிலம், விழிஞ்ஞத்தில் அதானி வர்த்தக துறைமுகம் அமைப்பதற்காகவும், கேரள மாநிலத்தின் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கும் தமிழ்நாட்டிலிருந்துதான் பாறாங்கற்களும், ஜல்லி, எம் சாண்ட் போன்றவையும் கொண்டு செல்லப்படுகின்றன. தமிழ்நாட்டு மலைகளை உடைத்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்துக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது. இதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் வழியாக 10 டயர்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிம வளங்களை ஏற்றிச்செல்லக் கூடாது எனவும், ஒரு லாரியில் 28 டன் எடைக்கு மேல் கனிமவளங்களைக் கொண்டுசெல்லக் கூடாது எனவும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிமவளங்கள் கொண்டு செல்ல 2 வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், இந்த விதிமுறைகள் வரும் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் குமரியைச் சேர்ந்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் கனிமவள கடத்தல் குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதே சமயம் தமிழ்நாடு அரசின் இந்த முடிவால் விழிஞ்ஞத்தில் அதானி துறைமுகம் அமைக்கும் பணி பாதிக்கும் என கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேரள துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவர்கோவில், தமிழ்நாடு கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், "தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் உத்தரவுபடி 28 டன்னுக்கு மேலும், 10 டயர்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிமவளங்கள் கேரளாவுக்குக் கொண்டுவரக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டின்படி கனிமவளங்கள் கொண்டு சென்றால் நஷ்டம் ஏற்படும் என்பதால் லாரி உரிமையாளர்கள் போக்குவரத்தை நிறுத்தியிருக்கின்றனர். கேரளாவில் செயல்படுத்தப்படும் துறைமுகத் திட்டத்துக்கு கற்கள் உள்ளிட்டவை மாநிலத்துக்குள்ளிருந்தும், வெளிமாநிலத்திலிருந்தும் பெறப்படுகின்றன. துறைமுகத் திட்டத்தின் தேசிய முக்கியத்துவம் கருதி தமிழ்நாடு அரசு இப்போது கொண்டுவந்திருக்கும் புதிய கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருக்கிறது.
from India News https://ift.tt/7dgGsaD
0 Comments