தி.மு.க அரசை கண்டித்தும், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்றைய தினம் பா.ஜ.க சார்பில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன்படி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில், அந்த கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் கலந்துக் கொண்டார். அப்போது, தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் கனிமொழி எம்.பி குறித்து அவதூறான வகையிலும், தகாத வார்த்தைகளாலும் பேசியதாக விக்கிரவாண்டி தி.மு.க நகர துணைச் செயலாளர் சித்ரா, போலீஸிடம் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில், வி.ஏ.டி கலிவரதனை போலீஸார் இன்று கைது செய்திருக்கின்றனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவராக இருந்து வருபவர்தான் இந்த வி.ஏ.டி.கலிவரதன். முகையூர் எனும் சட்டமன்றத் தொகுதி இருந்தபோது, அங்கு பா.ம.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக பதவி வகித்தவர். சில வருடங்களுக்கு முன்பாக கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பா.ம.க-விலிருந்து விலகி பா.ஜ.க-வில் ஐக்கியமாகி, விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் ஆனார். அந்த கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் இவர்மீது அளித்த பாலியல் புகார்; கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதே கட்சிப் பிரமுகர் ஒருவரின் மனைவி, இவர்மீது அளித்த கொலை மிரட்டல் புகார்; 'அண்ணாமலை என்ன கடவுளா?' என்ற ஆடியோ சர்ச்சை என தொடர்ந்து கட்சி வட்டார சர்ச்சையில் சிக்கிவந்த இவர், "இந்த பாஜக-வில் இருப்பவனுங்களுக்கு எல்லாம் எந்த பொறுப்பு என்ன பவர் என்றெல்லாம் தெரியாமல் இருக்கு" என்று, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசும்படியாக அண்மையில் ஆடியோ ஒன்று வெளியாகி மேலும் சலசலப்பை கூட்டியிருந்தது.
இந்த நிலையில், வி.ஏ.டி.கலிவரதனை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்ககோரி, விழுப்புரம் பாஜக-வினர், விழுப்புரம் பாஜக அலுவலகத்தில் அமர்ந்து இருமுறை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில்தான், நேற்றைய தினம் விக்கிரவாண்டியில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கிறார் அவர். அப்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் கனிமொழி எம்.பி குறித்து அவதூறான வகையிலும், தகாத வார்த்தைகளாலும் பேசியதாக விக்கிரவாண்டி தி.மு.க நகர துணைச் செயலாளர் சித்ரா போலீஸில் புகார் அளித்தார்.
அந்த புகாரையேற்ற விக்கிரவாண்டி போலீஸார், வி.ஏ.டி கலிவரதன் மீது 153, 504, 505 (1) C, ஐ.பி.சி r/w 4 OF TNHW act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், டி.சி.ஆர்.பி., டி.எஸ்.பி உமாசங்கர் தலைமையில், விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் விநாயக முருகன் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஆய்வாளர் மேற்பார்வையிலான போலீஸார்... அரகண்டநல்லூர் அருகே டி.கீரனூரில் உள்ள வி.ஏ.டி கலிவரதன் வீட்டிற்கு இன்று அதிகாலை சென்று கலிவரதனை கைது செய்தனர். அதன்பின், விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 14 நாட்கள் விழுப்புரம் மத்திய மாவட்ட சிறையில் அடைத்தனர்.
from India News https://ift.tt/w1GxkQB
0 Comments