நீதிமன்றங்களில் அம்பேத்கர் மற்றும் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் சங்கங்களின் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோரின் உருவப்படங்களைத் திறக்க அனுமதிகோரி பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்த கோரிக்கைகள் குறித்து ஏப்ரல் 11-ம் தேதி உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் மோதல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் வகையில், தேசிய தலைவர்களின் படங்களும், சிலைகளும் வைக்கப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்கட்டி, காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படம் அல்லது சிலை தவிர வேறு படங்கள், சிலைகளுக்கு நீதிமன்றங்களில் அனுமதி கிடையாது என அவர் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
2008, 2010, 2011, 2013, 2019 ஆகிய ஆண்டுகளிலும் இதே முடிவுதான் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் படத்தை கூட நீதிமன்றங்களில் வைக்க அனுமதியில்லை என கூறுவதா என்று பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நெல்லையில் நேற்று (23.07.2023) செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “புதிய இந்தியாவை கட்டமைத்ததோடு, அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தவர் என்பதற்காகவே அம்பேத்கர் படம் நீதிமன்றங்களில் வைக்கப்பட்டிருந்தது. அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் விரைவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகளின் இம்முடிவை எதிர்த்து சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், நேற்று(24.07.2023) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட நீதிமன்ற வாயிலிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற வாயிலிலும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் திரண்டு, அம்பேத்கர் படத்தை நீக்க வலியுறுத்தும் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தனர். அரசியல் சாசன சிற்பியின் படத்தையே வைக்க அனுமதி மறுப்பதா என அவர்கள் கண்டன முழக்கம் எழுப்பினர்.
இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “தேனி சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த சசிகுமார் என்பவர், சட்டக்கல்லுரி முதல்வர் அறையில் அம்பேத்கர் படத்தை வைக்க வேண்டும் என்றும், தமிழில் வகுப்புகள் நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி போராட்டம் நடத்தியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார். அதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சசிகுமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பு கொடுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அம்பேத்கர் படத்தை அரசு கட்டடங்களில் வைக்க எந்தத் தடையும் இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மிகத் தெளிவாக தீர்ப்பு கொடுத்துள்ளது. நீதிபதிகளுடைய தீர்மானங்களைக் காட்டிலும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கே அதிக வலிமை. எனவே இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டால், அம்பேத்கர் படங்களை வைக்க அனுமதி கிடைக்க வாய்ப்பு அதிகம்” என்கின்றனர்.
தேனி மாணவர் தொடர்ந்த வழக்கில் 2022-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``அரசு அலுவலகங்கள் மட்டும் கட்டடங்களில் அம்பேத்கர் படத்தை வைக்கலாம் என தமிழக 1990-ம் ஆண்டில் அரசாணை இயற்றியுள்ளது. அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர். சமூக நீதியின் அடையாளம். ஒவ்வொரு சட்ட மாணவருக்கும் அம்பேத்கர் முன்னுதாரணமாக திகழ்கிறார். அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்க சட்டக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். என்னுடைய சேம்பரில் கூட அம்பேத்கரின் படம் இல்லை. இதை விரைவில் சரி செய்வேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டக் கல்லூரிகளில் அம்பேத்கர் படத்தை வைக்கலாம் என்றால், நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை ஏன் வைக்கக்கூடாது என்றும் சில வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில் சமத்துவ வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்க புர்வாலாவை சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், ``நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாண்பமை மெட்ராஸ் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா அவர்களைச் சந்தித்து இது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தலைமை நீதிபதியிடம் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை சட்டத்துறை அமைச்சர் கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் (Status Quo to be continued) எனத் தெரிவித்தார். இத்தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from India News https://ift.tt/euQ2CvD
0 Comments