நேற்றைய தினம் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. அதன்படி வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட காமராஜரின் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காமராஜர் இல்லத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து மாலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், "அரசியல் கடினமான பாதை. அதை அறநெறி பிறழாமல் செய்யவேண்டும். எத்தனை தேசிய தலைவர்கள் வந்தாலும், சிறந்த தேசிய தலைமைக்கு எடுத்துக்காட்டு காமராஜர் தான். காங்கிரஸ் கையிலிருந்து ஆட்சி கைவிட்டுபோன சமயத்தில், அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசை பலரும் விமர்சித்துப் பேசினர். ஆனால் காமராஜர் அவர்களிடத்தில், இப்போதுதான் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ளார்கள். அவர்கள் மீது உடனே குற்றச்சாட்டை முன்வைப்பது சரியானதல்ல. அவர்களுக்கும் நேரம் கொடுக்கப்படவேண்டும். முக்கியமாக மக்கள் அவர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுள்ளார்கள். ஆகவே, நாம் ஆட்சிக்கு வரவேண்டுமென்றால் மக்களின் வாக்குகளை நாம் வாக்குப்பெறுவதற்கூடிய வேலையை செய்யுங்கள் என்றார் காமராஜர். இதுதான் சிறந்த தலைமை.
காமராஜர் எளிமையாக வாழ்ந்தார். கல்விக்காக மாணவர்களுக்கு மத்திய உணவு தந்தார். புதிய கல்விச்சலைகளை உருவாக்கினார். தொழிற்சாலை அமைத்தார். இதை யாரும் மறுக்க முடியாது. இதுமட்டுமல்ல, இதற்கு மேலும் அவருக்கு சிறப்புகள் உண்டு. முக்கியமாக அவர் மாநில அரசியலை கடந்து, தேசிய அரசியலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து இரண்டு பிரதமர்களை உருவாக்கியவர். எனக்கு தெரிந்து ராஜராஜனுக்கு சோழனுக்கு அடுத்து சிறப்பான புகழை பெற்றவர் என்றால் அது கர்மவீரர் காமராஜர்தான். காமராஜர் இதோடு மட்டும் நின்றுவிடவில்லை. தமிழகத்தில் சமூகநீதியை உருவாக்கியவரும் காமராஜர் தான். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கக்கனிடம் காவல்துறையும், அறநிலையத்துறையும் வழங்கி சமூகநீதியை உணர்த்தினார்.
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கோட்பாட்டை வகுத்தவரும் காமராஜர் தான். இதுவே நாடாளுமன்றத்தில் சட்டவடிவமாகி அரசியலமைப்பு சட்டமானது. ஆகவே, இட ஒதுக்கீட்டை முதன் முதலில் வழங்கியதும் காங்கிரஸ் கட்சிதான். இதை கட்சித் தொண்டர்கள் பரப்புரை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கூச்சலிடுவதும், புலம்புவதுமா அரசியல். இல்லை, மக்களுக்கு ஆக்கபூர்வமாய் செய்வதே அரசியல். அன்று ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், இந்து மகா சபா என்ற பெயரில் இருந்தவர்கள்தான் இன்று பா.ஜ.க-வாக உள்ளனர். ஆனால் இந்தியாவில் மகாத்மா காந்தியைப்போல மதச்சார்பற்றவர்களை, மதச்சார்பற்ற கட்சிகளை இளந்தலைவர் ராகுல் காந்தி ஒன்று திரட்டுக்கிறார்.
இங்கே இந்து என்பதற்கும், இந்துத்துவவாதி என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. நான் இந்து. ஆனால் அதற்காக பிற மதங்களுக்கு எதிரானவன் அல்ல. என்னுடைய விருப்பத்திற்காக நான் பின்பற்றும் மதத்தை பிறர் மேல் திணிக்கமாட்டேன் என்பவன் இந்து. ஆனால் இந்துத்துவவாதி என்பவன், நான் நேசிக்கும் மதத்தை தவிர மற்ற மதங்களுக்கு எதிராக நிற்பவன். இதைத்தான் மகாத்மா காந்தியின் இறப்பு வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இன்று ஆளுகிற பா.ஜ.க அரசு, மக்கள்மீது அநேக சுமைகளை இறக்கிவைத்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை சர்வதேச சந்தை மதிப்பில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்படிப் பார்க்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 35 ரூபாய்க்கு இன்று அரசு தரவேண்டும். ஆனால் லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் விற்கிறார்கள். சமையல் சிலிண்டர் 200 ரூபாய்க்கு தரவேண்டும். ஆனால் அது 2,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. பிரதமர் மோடியால், கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றித்தர முடியவில்லை.
விவசாயிகளின் வருமானம் உயர்த்த வழிசெய்வதாகச் சொன்னார், செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது 6-7 சதவீதமாக உள்ளது. குறைந்த வரி, ஒரே விலை என்பதுதான் காங்கிரஸ் வகுத்த திட்டம். ஆனால் பா.ஜ.க-வினர் மிக அதிக வரி விதித்து ஜி.எஸ்.டி. அமல்படுத்தினர். அவர்களால் இந்தியாவுக்கு சிறந்த பொருளாதாரத்தை தர முடியவில்லை. இப்படி எல்லாத்துறைகளிலும் அவர் (மோடி) தோல்விகளைச் சந்தித்துள்ளார். முன்னாள் பிரதமர் நேரு, தன் அன்பால் இணைத்தப் பகுதி காஷ்மீர். ஆனால் அதை மூன்றாக உடைத்து, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்தார் மோடி. அதிகாரத்தால் எல்லாம் செய்துவிட்டு காஷ்மீர் விஷயத்தில் நேரு குழப்பம் செய்ததாக தெரிவித்தார். குழப்பம் செய்வது ஆர்.எஸ்.எஸ் கொள்கை. அதைத்தான் பிரதமர் மோடி செய்து வருகிறார்.
இந்தியா முழுமைக்கும் பா.ஜ.க-வை எதிர்க்கிற கட்சிகள் எல்லாம் மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து வருகின்றன. முன்பு காங்கிரஸை ஏற்காத பிராந்திய கட்சிகள்கூட தற்போது காங்கிரஸை ஏற்று, கூட்டணியில் இணைந்து வருகின்றன. ஜூலை 17-ம் தேதி கர்நாடகத்திலே நடக்கக்கூடிய அனைத்துக்கட்சி மாநாட்டில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இதை அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி இல்லாமல் பா.ஜ.க-வை வீழ்த்த முடியாது. எனவே, அடுத்த தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும். அதற்கு நமது ஆதரவு வேண்டும் என தெளிவான கடிதத்தையும் எழுதியிருக்கிறார். கடந்த முறை 39 தொகுதிகளை வென்றெடுத்த நமது கூட்டணி, வருகிற தேர்தலில் 40 தொகுதிகளிலும் கட்டாயம் வெற்றி பெறும். நமது கூட்டணியின் வலுவை பார்த்து பா.ஜ.க பயப்படுகிறது. இந்த பயத்தை மறைக்கத்தான் அண்ணாமலை மேக்கேதாட்டூ அணை விஷயத்தை எடுத்துக்கொண்டு புலம்புகிறார்.
மேக்கேதாட்டூவில் அணைக்கட்ட வேண்டுமென்று அந்த மாநில அரசு நினைத்தாலும் காவிரி நீரை பங்கிடும் மாநிலங்களின் அனுமதியில்லாமல் அங்கு அணை கட்டமுடியாது என்பது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. இதை தி.மு.க-வும், தமிழ்நாடு காங்கிரஸும் வலியுறுத்துகின்றன. மேக்கேதாட்டூ அணை விஷயத்தில் தமிழக அரசு எடுத்துவைக்கும் ஒவ்வொரு முயற்சிகளுக்கும் தமிழக காங்கிரஸ் பக்கபலமாக உறுதுணையாக நிற்கிறது. ஆனால், தமிழக பா.ஜ.க- அரசின் முயற்சிக்கு உறுதுணையாக நிற்காமல், எதிர்த்து நின்று குறைசொல்லி கூச்சலிடுகிறது, அண்ணாமலையின் இந்த செயல், கர்நாடகத்தில் மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு மறைமுகமாக இவர்கள் ஆதரவு அளிப்பது போலத்தான் தெரிகிறது. ஆகவே, குறை சொல்வதை விட்டுவிட்டு அரசுக்கு உறுதுணையாக இருங்கள். ஆக்கபூர்வமாகச் செய்யுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
from India News https://ift.tt/aZkRzrF
0 Comments