தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் அரசு நிகழ்ச்சி, மற்றும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அந்த விழாவில் எதிர்க்கட்சிகளை சரமாரியாக விமர்சித்திருந்தார். ``வாரிசு அரசியலின் அடிப்படையே ஊழல்தான்" எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசுவின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-06/b5561f13-3a9a-4527-a782-54076af6ec03/WhatsApp_Image_2023_06_15_at_8_09_59_PM__1_.jpeg)
அப்போது பேசிய அவர், ``திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு திருமண விழா அழைப்பிதழிலேயே தன்னை திராவிட இயக்க எழுத்தாளர் என அடையாளப்படுத்தியிருக்கிறார். இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில் வெளிப்படையாக இதைக் கூறுவதற்கு அச்சப்பட்டு யோசிப்பார்கள். ஆனால் திருநாவுக்கரசு போன்றவர்களுக்குத்தான் தன்னை திராவிட இயக்கத்தோடு இணைத்து அடையாளப்படுத்திக் கொள்வதற்கான துணிவு இருக்கிறது.
திராவிட கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் குறிப்பிட்டு கூறுவதானால், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், பெண்களுக்கான இலவசப் போக்குவரத்து வசதி, பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் நுழையும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, ஒரு கோடி பேர் பயன் பெறவிருக்கும் கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டம் ஆகியவற்றைக் கூறலாம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/9b91ecb1-c735-4e0e-a1e9-dedfaea939de/telangana_pm_modi_spech.jpg)
நமது திட்டங்கள் சிலருக்கு எரிச்சலை, பொறாமையை ஏற்படுத்தியிருக்கின்றன. அதனால்தான் வாய்க்கு வந்தபடியெல்லம் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சூழலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று இந்தியாவுக்கு ஆபத்து என்று சொல்வதைவிட பேராபத்து வந்திருக்கிறது. அந்த பேராபத்திலிருந்து நாம் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இன்றைக்கு நாம் அறிவித்து நிறைவேற்றிக் கொண்டிருக்கும் இந்தத் திட்டங்களைப் பார்த்து விமர்சனம் செய்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்புகிறேன்.
பா.ஜ.க 2014-ம் ஆண்டு பொது தேர்தலுக்கு அறிவித்த வாக்குறுதிகளில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா... இன்றைய பிரதமர் மோடி 'நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தையெல்லாம் மீட்டுக் கொண்டு வந்து, நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் ஒருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவேன்' என்று உறுதிமொழி கொடுத்தார். ரூ.15 லட்சம் வேண்டாம். ஒரு ரூ.15 ஆயிரம்... ஏன் ஒரு 15 ரூபாயாவது கொடுத்திருக்கிறாரா... இதுவரை அதைப்பற்றி சிந்திக்கவுமில்லை, கேட்கவுமில்லை, பேசவுமில்லை. மாதம் இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவோம் என்றெல்லாம் உறுதிமொழி கொடுத்தார். ஆனால் அந்த உறுதிமொழிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-06/5222cd22-753b-41f2-b9bd-30f83c83cf65/narendra_modi_shah_650x400_51489312929.webp)
அதே போல விவசாயிகளின் நலனுக்காகப் பாடுபடுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இந்தியாவின் தலைநகரத்தில் விவசாயிகள் ஒன்று கூடி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தபோது, நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோன கொடுமை எல்லாம் நடந்தது. வெயில், குளிர், மழை எனப் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து போராட்டம் நடத்தியவர்களைக் கண்டும் காணாமல் ஆட்சி நடத்தியவர் பிரதமர் மோடி. அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.
எனவே, இது எல்லாவற்றையும் உணர்ந்துதான் மத்தியில் இருக்கும் சர்வாதிகார ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக, இன்று இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, நல்ல முடிவை இந்திய நாட்டுக்கு ஏற்ப்படுத்தி தர வேண்டும் என, பீகார் மாநிலம், பாட்னாவில் நிதிஷ்குமாரின் முயற்சியின் காரணமாக அனைத்து எதிர்க்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து வரும் 17,18 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலம், பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/d59feb91-6ea4-4318-adb3-552296bc5039/87293_thumb.jpg)
இதையெல்லாம் பார்த்து எரிச்சல் பட்டு கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க ஆட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் பிரதமர் மோடி, பிரதமர் என்ற தன் நிலையை மறந்து எதையெதையோ பேசி உளறிக் கொண்டிருக்கிறார். தி.மு.க ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை... நமது கொள்கையும் லட்சியமும் ஒரே கோட்டில்தான் இருக்க வேண்டும். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் நாம் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற அடிப்படையில், இந்தக் களத்தில் இறங்கியிருக்கிறோம்" என்றார்.
from India News https://ift.tt/4BOCbn9
0 Comments