``இதயமே நொறுங்கிவிட்டது" - மணிப்பூர் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்ட கொடூரம்... ஸ்டாலின் வேதனை!

பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில் மைதேயி எனும் பழங்குடியல்லாத பெரும்பான்மை சமூகத்தினருக்கும், குக்கி எனும் பழங்குடி சமூகத்துக்கும் இடையில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகக் கட்டுக்கடங்காத இனக்கலவரம் நடந்துவருகிறது. இரட்டை இன்ஜின் பா.ஜ.க அரசு இதனைக் கட்டுப்படுத்தாமல் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக எதிர்க்கட்சிகளும் சாடிவருகின்றன. இதுவரையில் கலவரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர்.

குக்கி இனப் பெண்களுக்கு நேர்ந்த `கொடூரம்'

இவ்வாறான சூழலில் இதுநாள் வரையில் உயிர்கள் பலி, வீடுகள் எரிந்து நாசம் போன்ற செய்திகள் நாளும் வந்துகொண்டிருந்த நிலையில், மணிப்பூரில் குக்கி சமூக பெண்கள் இருவரை இளைஞர்கள் சிலர் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச்சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகி மனித சமூகத்தையே கலங்க செய்துவிட்டது. இந்த வீடியோ பற்றிய விசாரணையில், இது மே 4-ம் தேதி நடந்த சம்பவம் என்றும், வீடியோவில் வரும் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டனர் என்றும் தெரியவந்தது. எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க அரசைத் தொடர்ந்து கடுமையாகச் சாடி வருகின்றன.

இந்த நிலையில் இதுபற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின், தன்னுடைய இதயமே நொறுங்கிவிட்டதாக வேதனை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் என் இதயமே நொறுங்கிவிட்டது. நம்முடைய மனசாட்சி எங்கே போனது?

ஸ்டாலின்

இத்தகைய வெறுப்பும், விஷமத்தன்மையும் மனித குலத்தின் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது. எனவே இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நின்று, மரியாதைக்குரிய சமூகத்தை வளர்ப்பதற்கு உழைக்க வேண்டும். மேலும், மணிப்பூரில் அமைதி திரும்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



from India News https://ift.tt/MBub1NI

Post a Comment

0 Comments