பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய பழங்குடியல்லாத `மைதேயி' சமூகத்துக்கும், பழங்குடிச் சமூகமான குக்கி உட்பட பிற பழங்குடி சமூகத்துக்கும் இடையில் மே 3-ம் தேதி முதல் இனக்கலவரம் நடைபெற்றுவருகிறது. மைதேயி சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் நடத்திய அமைதிப் போராட்டமானது, தற்போது பெருங்கலவரமாக அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் எவ்வளவோ எதிர்ப்புகள், கண்டனங்கள் தெரிவித்த போதிலும் பா.ஜ.க-வால் கலவரத்தை இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்னும் சிலர், பா.ஜ.க தான் திட்டமிட்டு கலவரத்தை தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்ப்பதாகக் கூறுகின்றனர். பிரதமர் மோடி இன்னும் கூட மணிப்பூருக்கு செல்லவில்லை என எதிர்க்கட்சிகள் சாடுகின்றனர். அதே நேரம், மணிப்பூர் விவகாரம் கலவரமாக வெடிக்க தொடங்கியதில் இருந்து பிரதமருடன் இது குறித்து தினமும் பேசிக் கொண்டு இருக்கிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுவரையில் மணிப்பூர் கலவரம் பற்றி, உயிரிழப்புகள், வீடுகள், கடைகள் எரிந்து நாசம் என்றே செய்திகள் வெளியாகிவந்த நிலையில், குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை இளைஞர்கள் சிலர் சாலையில் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பலருக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. இதுகுறித்த விசாரணையில், இந்த சம்பவம் மே 4-ம் தேதி நடந்ததென்றும், அந்த இரு பெண்களும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானர் என்றும் தெரியவந்திருக்கிறது. இதுபற்றி ஏற்கெனவே போலீஸார் வழக்கும் பதிவு செய்திருக்கின்றனர். அனால் இதுவரையில் யாரையும் போலீஸார் கைதுசெய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய இழிவான செயலால் பா.ஜ.க அரசை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். அந்த வரிசையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, ``மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோக்கள் நெஞ்சைப் பதறவைக்கின்றன. மத்திய அரசும், பிரதமரும் ஏன் கண்மூடித்தனமாக அமர்ந்திருக்கிறார்கள்?'' என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
அதேபோல் காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், ``நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த மோடி அரசு அனுமதிக்குமா? பிரதமர் தன் மௌனத்தைக் கலைப்பாரா?'' என்று கேள்வியெழுப்பியிருந்தார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன், ``நாடாளுமன்ற இரு அவைகளிலும் மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையென்றால் அதன்பிறகு ஏற்படும் இடையூறுகளுக்கு அவரே பொறுப்பு" என்று வலியுறுத்தியிருந்தார்.
இதற்கிடையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு, மணிப்பூர் முதல்வர் என்.பிரோன் சிங்கிடம் இதுபற்றி பேசியதாகக் கூறினார். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் வலுவான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாத நடத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு இன்று தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றம் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மோடி, ``புனித மாதமான சாவான் மாதத்தில், இன்று இந்த ஜனநாயகக் கோயிலில் நாம் அனைவரும் கூடும் வாய்ப்பை, எம்.பி-க்கள் அனைவரும், மக்களின் அதிகபட்ச நலனுக்காகப் பயன்படுத்தி தங்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன். மணிப்பூர் சம்பவம் பற்றி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இதில் எந்த குற்றவாளியும் தப்ப மாட்டார்கள் என்று இந்த நாட்டுக்கு நான் உறுதியளிக்கிறேன். சட்டம் தன் முழு வலிமையுடன் முடிவெடுக்கும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்ததை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். மேலும், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை வலுப்படுத்த அனைத்து மாநில முதல்வர்களையும் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
from India News https://ift.tt/oaeF5OL
0 Comments