விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தென்பசியாரை அடுத்த ஓமந்தூர் பகுதியில் இயங்கிவரும் பிரபல தனியார் பள்ளியின் அறக்கட்டளை சார்பில், 39 ஜோடிகளுக்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், 39 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் போபாலில் நடைபெற்ற பா.ஜ.க-வின் தொண்டர்கள் கூட்டத்தில், மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். ஒரு நாட்டில், ஒரு குடும்பத்தில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்க முடியாது என்று. சில கட்சிகளின் நிலைப்பாட்டில் வித்தியாசம் இருக்கலாம், தவறு கிடையாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு. உதாரணத்துக்கு, அ.தி.மு.க இருமொழிக் கொள்கையை ஆதரிக்கிறார்கள். பா.ஜ.க மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம். எனவே, வேறுபாடு எல்லா இடத்திலும் இருக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது அனைவரையும் இணைப்பதற்காக வரக்கூடிய சட்டம். யாரையும் பிரிப்பதற்காக வரக்கூடிய சட்டமில்லை.
பொது சிவில் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியப் பெண்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நல்ல சட்டம்தான். யாருக்கும் எதிரான சட்டமாக பொது சிவில் சட்டம் இருக்கப்போவது கிடையாது. வருகிற காலத்திலே அவர்களின் (அ.தி.மு.க) நிலைப்பாடு மாறும் என்று நம்புகிறேன். அதற்கான நேரம் தேவை, அதுவரை பொறுத்திருப்போம். எங்களைப் பொறுத்தவரை எல்லாக் கட்சியும் இணைந்து பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். மேக்கேதாட்டூ அணையைப் பொறுத்தவரை... தமிழகம், புதுவை, கேரளாவின் அனுமதி இல்லாமல், நதி வரும் பாதையில் மேலே உள்ள மாநிலம் அணையைக் கட்ட முடியாது. இன்று பிரச்னை இருப்பது கர்நாடகா, கர்நாடகச் சட்டமன்றம், காங்கிரஸ் கட்சி.
இந்த வருடம், தமிழகத்துக்கு காவிரி நீர் கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால், இங்கு எப்படி சாகுபடி நடக்கும். தண்ணீர் இல்லை எனச் சொல்லும் உரிமை யாருக்கு இருக்கிறது... 'காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம்'. அவர்கள் அப்படிச் சொல்வதற்கும் ஆய்வுகள், வழிமுறைகள் பல இருக்கின்றன. கர்நாடகாவின் துணை முதலமைச்சர், 'தண்ணீர் கொடுக்க மாட்டேன்' எனச் சொல்வதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. ஆனால் இதுவரை தமிழக முதலமைச்சரோ, நீர்வளத்துறை அமைச்சரோ, காங்கிரஸ் தலைவர்களோ ஏன் கண்டனத்தைப் பதிவுசெய்யாமல் இருக்கிறார்கள். அதனால் முதலமைச்சர் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வரும்போது, பா.ஜ.க முன்நின்று மிகப்பெரிய கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தும். அரசியல் லாபத்துக்காக தமிழகத்தின் நலனையும், விவசாயிகள் நலனையும் அடமானம் வைப்பதை பா.ஜ.க எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளாது. 'தண்ணீரைக் குறைவாகத் திறக்கிறார்கள்' என்று இவர்கள் சொன்னால் என்ன அர்த்தம்... தி.மு.க, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுபோக வேண்டும் இல்லையா... பா.ஜ.க-வான நாங்களும்கூடவே வருகிறோம். இந்த விவகாரத்தை ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லுங்கள்.
எதுவுமே செய்யாமல் தண்ணீரைக் குறைவாகத் திறந்திருக்கிறார்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம்... இவர்கள் ஒப்புக்குச் சப்பானியாகத்தான் நடக்கிறார்களே தவிர... விவசாயிகளின் நலன், தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள், முதலமைச்சரின் இதயத்தில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். தண்ணீர் வேண்டும், மேக்கேதாட்டூவில் அணை கட்டக் கூடாது. முன்பே சொன்னதுபோல, மூன்று மாநிலங்களின் அனுமதியில்லாமல் கர்நாடகா மேக்கேதாட்டூவில் அணைகட்ட முடியாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். கதவைத் திறக்கும் அதிகாரம் வேண்டுமானால் கர்நாடகாவுக்கு இருக்கலாம். ஆனால், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை தமிழக அரசு எடுத்துச் செல்ல வேண்டும். நாங்களும் தமிழக அரசோடு துணை நிற்போம். அதற்கும் இவர்கள் தயாராக இல்லை, கண்டனக் குரல் கொடுக்கவும் இவர்கள் தயாராக இல்லை. நேற்று துரைமுருகன் அண்ணன் பேசியதில்... உப்பு சப்புமில்லை, காரமுமில்லை. ஒப்புக்குச் சப்பானியாகச் செய்தியாளர்களைச் சந்தித்து, `இங்கே போகிறேன்... அங்கே போகிறேன்' என்கிறார். அவருடைய தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏன் கர்நாடக அரசைக் கண்டித்து துணை முதல்வருக்கு அறிக்கை கொடுக்கவில்லை.
39 எம்.பி-க்கள், துரைமுருகன், முதலமைச்சர் ஸ்டாலின் எல்லாம் கர்நாடகாவுக்குச் சென்று அறிக்கை கொடுக்க வேண்டும், அவர்களிடம் சொல்ல வேண்டும். இதற்கென கூட்டணியில் வேறு இருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் காங்கிரஸுக்கு இடத்தை விட்டுக்கொடுக்கிறார்கள் என்றால்... 2024 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருக்க வேண்டும் என்பதற்காக பேரம் பேசுகிறார்களா... அதற்காக தமிழக விவசாயிகளின் நலனை விட்டுக்கொடுப்பதற்கு முதலமைச்சர் கிளம்பியிருக்கிறாரா... தி.மு.க ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுநர் எல்லா விஷயத்திலும் பதில் சொல்ல ஆரம்பித்தால் எங்கே போய் நிற்கும்... ஆளுநர் தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு பிரச்னைக்கும் கருத்து தெரிவித்தால், தமிழக அரசு ஏற்றுக்கொள்ளுமா என்றால் ஏற்றுக்கொள்ளாது. ஆளுநர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசக் கூடாது. அது தவறாகப் போய்விடும். அவர் அரசியல்வாதி கிடையாது. தி.மு.க ஒரு தவறான முன்னுதாரணத்துக்கு ஆளுநரை இழுக்கிறது.
தமிழக ஆளுநர் அவ்வாறு பத்திரிகையாளரைச் சந்தித்தால் என்னைவிட மகிழ்ச்சியான ஆள் யாரும் இருக்க முடியாது. ஏனெனில், தி.மு.க-வின் வண்டவாளங்கள் வெளியே வரும். ஆனால், அவர் அவ்வாறு சந்திக்கக் கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. காரணம் என்னவெனில் ஆளுநர் அரசியல் பேசக் கூடாது. அப்படிப் பேசினால் மரபு சரியில்லாமல் போய்விடும். ஆளுநர் அவர்களுடைய கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும். அவர் அப்படிப் பேசினால் எங்களுக்கு லாபம்தான் என்றாலும்கூட, அதைச் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்துகிறோம். மற்ற ஆளுநர்களைப் பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை. தக்காளி விலை உயர்வுக்கு பா.ஜ.க மட்டுமல்ல, எல்லாக் கட்சியினரும் போராட்டம் நடத்த வேண்டும்" என்றார்.
from India News https://ift.tt/Dg26AmG
0 Comments