மகாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அஜித் பவார் தலைமையில் பிளவு ஏற்பட்டது. சரத் பவாரின் சகோதரர் மகனான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேருடன் சேர்ந்து பா.ஜ.க. அமைச்சரவையில் சேர்ந்து கொண்டார். கடந்த இரண்டாம் தேதி அவர் அமைச்சரவையில் சேர்ந்ததில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அஜித் பவார் உட்பட 9 பேரையும் கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் பதவி நீக்கம் செய்யும்படி சரத் பவார் மாநில சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் மனு கொடுத்துள்ளார். சரத் பவார் அணியில் இருக்கும் ஜெயந்த் பாட்டீல் மற்றும் ஜிதேந்திர அவாட் ஆகியோரின் எம்.எல்.ஏ.பதவியை பறிக்கவேண்டும் என்று கோரி அஜித் பவார் தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அஜித் பவார் தனக்கு 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அவருக்கு இருக்கிறது என்று இன்று தெரிய வரும். இன்று சரத் பவார் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார். மும்பையில் உள்ள ஒய்பி சவான் சென்டரில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ளவேண்டும் என்று கட்சியின் புதிய கொறடா ஜிதேந்திர அவாட் உத்தரவிட்டுள்ளார். இதில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதே போன்று அஜித் பவாரும் இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார். இக்கூடத்தில் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாது சட்டமேலவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொள்ளும்படி அஜித் பவார் கேட்டுக்கொண்டுள்ளார். 42 எம்.எல்.ஏ.க்கள் அபிடவிட்டில் கையெழுத்து போட்டுள்ளதாகவும், மேலும் சிலர் கையெழுத்திட இருப்பதாக அஜித் பவார் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாந்த்ராவில் உள்ள சகன் புஜ்பால் கல்வி நிறுவனத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை பொறுத்து இருவரின் செல்வாக்கு தெரிய வரும். சரத் பவார் ஏற்கனவே தனது கட்சியில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இரு கூட்டத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தற்போது 53 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(சரத்பவார்) மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், ``கட்சியில் இருந்து 9 எம்.எல்.ஏ.க்களை நீக்கிவிட்டோம். தற்போது எங்களிடம் 44 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். இன்று கூடும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு சரத் பவார் டெல்லியில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவர்கள்(அஜித் பவார்) தங்களது செயலை நியாயப்படுத்தவேண்டியிருக்கிறது. ஆனால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். அவர்களைப்பற்றி விவாதிக்க விரும்பவில்லை.
நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ். எனக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுத்தால் அதனைப்பற்றி நான் கவலைப்படவில்லை” என்று தெரிவித்தார். அஜித் பவார் தனது கட்சிக்காக புதிய அலுவலகத்தையும் திறந்துள்ளார். அரசு பங்களா ஒன்றை கட்சி அலுவலகமாக மாற்றிவிட்டனர். மேலும் அஜித் பவார் விரைவில் தேர்தல் கமிஷனை அணுகி முறைப்படி தங்களது அணியை தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அங்கீகரிக்கும்படி கேட்க இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
from India News https://ift.tt/EYZ75Wg
0 Comments