புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு 147 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கெளரவித்தார். பின்னர் அவர் பேசும்போது, "மருத்துவத்துறையில் பணியிடங்கள், பதவி உயர்வு எல்லாம் ஒளிவுமறைவின்றி, எந்தவித சிபாரிசுகளும் இல்லாமல் தகுதியின் அடிப்படையில் வெளிப்படைத் தன்மையோடு நடைபெறுகிறது. இன்று பட்டம் பெறுகிற மாணவர்கள் மனிதநேயமிக்க மருத்துவராக எதிர்காலத்தில் நீங்கள் பிரகாசிக்க வேண்டும்.
இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 71 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இன்னும் புதிதாகத் தொடங்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 கோரிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியிருக்கிறோம். தமிழகத்தில் புதிதாக 30 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையில், 11 கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு அனுமதியளித்திருக்கிறது. தமிழகத்தில் புதிதாக 11 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் விரைவிலேயே தொடங்கப்படும்'' என்றார்.
முன்னதாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.6 கோடியில் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார். இதற்கிடையே அன்னவாசலில், அதிரடி ஆய்வுமேற்கொண்ட அமைச்சர், தனியார் காப்பகத்தின் பாதுகாப்பில் செயல்பட்ட மனநோயாளிகள் காப்பகம் முறையாகச் செயல்படாத நிலையில், அவற்றின் ஒப்பந்தத்தை ரத்துசெய்து, அங்கிருந்தவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ``மீட்கப்பட்டவர்களில் சுயநினைவில் உள்ளவர்களிடம் அவர்களின் உறவினர்களைக் கேட்டறிந்து அவர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கிறேன். இதேபோல், தமிழகம் முழுவதும் இயங்கும் தொண்டு நிறுவன காப்பகங்களில் ஆய்வுமேற்கொண்டு, அதை வீடியோ பதிவுசெய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை மத்திய அரசு 20-ம் தேதி தொடங்கினால், நாங்கள் 25-ம் தேதி தொடங்குவோம். விரைவிலேயே புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரி பணி முடிந்து, இந்தாண்டிலேயே தொடங்குவதோடு, 50 மாணவர்களின் சேர்க்கையும் நடைபெறும்" என்றார்
from India News https://ift.tt/kn8LK4R
0 Comments