முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் ராஜஸ்தானில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கான வேலைப்பாடுகளில் காங்கிரஸ் தலைமை தீவிரமாக இருந்தாலும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையிலான உட்கட்சி மோதல் அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.வுமான ராஜேந்திர குதா, தான் இல்லையென்றால் அசோக் கெலாட் சிறையில் இருந்திருப்பார் எனக் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. அதுவும் கடந்த வெள்ளிக்கிழமையன்று அசோக் கெலாட்டால், ஊர்க்காவல்படை, குடிமைப் பாதுகாப்பு, பஞ்சாயத்து ராஜ், ஊரக மேம்பாடு ஆகியவற்றுக்கான இணை அமைச்சர் பொறுப்பிலிருந்து, ராஜேந்திர குதா பதவிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இத்தகைய பேச்சு வெளிப்பட்டிருக்கிறது.
நேற்றைய தினம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இதுபற்றி பேசிய ராஜேந்திர குதா, ``காங்கிரஸ் தலைவர் தர்மேந்திர ரத்தோருக்கு எதிராக அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ரெய்டு நடத்தியபோது அசோக் கெலாட் ஒரு ரெட் டைரியைப் (red diary) பற்றி சொல்லி, அது எவ்வளவு விலையாக இருந்தாலும் அதனை மீட்கவேண்டும் என்னிடம் கூறினார். அசோக் கெலாட் விடாமல் அதுபற்றியே கேட்டுக்கொண்டிருந்தார். ரெட் டைரியை எரித்துவிட்டீர்களா என்றெல்லாம் அசோக் கெலாட் கேட்டார். அந்த ரெட் டைரியில் எதுவும் இல்லையென்றால் அவர் அப்படி கேட்டிருக்கமாட்டார். எனவே இந்த ராஜேந்திர குதா இல்லையென்றால் அசோக் கெலாட் சிறைக்குச் சென்றிருப்பார்" என்று கூறினார்.
இருப்பினும் கடைசிவரை அந்த ரெட் டைரியில் என்ன இருந்தது என்பது ராஜேந்திர குதாவும் வாய் திறக்கவில்லை. மேலும் தன்னுடைய பதவிநீக்கம் குறித்து ராஜேந்திர குதா பேசுகையில், ``என்னை ராஜினாமா செய்யச் சொன்னால் நானே ராஜினாமா செய்திருப்பேன். இல்லையென்றால் அழைத்து நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். நீதிபதிகள் கூட நடவடிக்கை எடுப்பதற்கு முன் அவகாசம் தருகிறார்கள்" என்றார்.
பின்னர் ராஜேந்திர குதாவின் பேச்சு பேசுபொருளாகவே, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா இது தொடர்பாக, ``ஊழல்கள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர்பாக உண்மை தெரிந்தவர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா?" என ட்விட்டரில் கேள்வியெழுப்பியிருந்தார்.
from India News https://ift.tt/VBEGWsg
0 Comments