மகாராஷ்டிராவில் பா.ஜ.க.கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாரும், அவரது ஆதரவாளர்களும் சேர்ந்த பிறகு ஏற்கெனவே கூட்டணி அரசில் இருக்கும் சிவசேனாவில் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. சிவசேனா தலைவர்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அஜித் பவார் வந்ததால் சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு நிதித்துறையை அஜித் பவாருக்கு கொடுக்ககூடாது என்று சிவசேனா பா.ஜ.க.வுக்கு நெருக்கடி கொடுத்தது.

ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் அஜித் பவாருக்கு நிதித்துறையை பா.ஜ.க.கொடுத்துவிட்டது. அதோடு அஜித் பவார் தான் முதல்வராக விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் தன்னை ராஜினாமா செய்ய சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இருந்து கொண்டிருக்கிறார். இப்பிரச்னை குறித்து ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், சட்டமேலவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
தற்போது மகாராஷ்டிரா சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. நேற்று கூட்டம் முடிந்தவுடன் ஏக்நாத் ஷிண்டே அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். டெல்லியில் பா.ஜ.க.தலைவர்களை சந்தித்து அஜித் பவார் பிரச்னை குறித்தும், மகாராஷ்டிராவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யவேண்டியதன் அவசியம் குறித்தும் பேச இருக்கிறார். சட்டமன்றத்தின் மழை காலக்கூட்டத்தொடர் முடிந்த பிறகுதான் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்று தெரிகிறது. அதுவும் சிவசேனாவை சேர்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தெரிகிறது. இதனால் எஞ்சியவர்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் ஷிண்டே கவலையில் ஆழ்ந்திருக்கிறார்.
16 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித்தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி உத்தவ் தாக்கரே சபாநாயகரிடம் மனு கொடுத்து இருக்கிறார். அம்மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உத்தவ் தாக்கரே சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார். இதனால் அம்மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு சபாநாயகர் ராகுல் நர்வேகர் தள்ளப்பட்டு இருக்கிறார்.
முதல்வர் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சபாநாயகர் முடிவு எடுக்கும்பட்சத்தில் முதல்வர் பதவிக்கும் ஆபத்து ஏற்படும். இது குறித்தும் ஷிண்டே டெல்லியில் பா.ஜ.க.தலைவர்களுடன் பேச இருக்கிறார். முதல்வர் ஷிண்டே பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும், இது தொடர்பான செய்திகள் அனைத்தும் வதந்தி என்று அமைச்சர் உதய் சாவந்த் தெரிவித்திருக்கிறார்.
from India News https://ift.tt/AFhoTn7
0 Comments