பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்ணுக்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் என்பவருடன் ஆன்லைனில் பப்ஜி விளையாட்டின் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்ததால், பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் தன்னுடைய நான்கு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்தார். அவர் சச்சினுடன் திருமணம் செய்துகொண்டு நொய்டாவில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்ற தகவல் கிடைத்தவுடன், கடந்த 4-ம் தேதி காவல்துறை சச்சின், சீமா ஹைதர் இருவரையும் கைதுசெய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தது. சீமா ஹைதர் குறித்து உத்தரப்பிரதேச காவல்துறைக்குப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. அதனால், சீமா ஹைதரிடம் உத்தரப்பிரதேச தீவிரவாதத் தடுப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சீமா ஹைதர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பின் ஏஜென்டாக இருப்பாரோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இந்த விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆனாலும், இந்தியாவில் இருக்க சீமா ஹைதர் தொடர்ந்து போராடி வருகிறார். மேலும், இந்தியாவில் வாழ குடியுரிமைக் கோரி குடியரடித் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனுத் தாக்கல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர் தன்னுடைய மனுவில், ``இந்திய கலாசாரம் மற்றும் மரபுகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டிருக்கிறேன். என்னை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த தீவிர முயற்சிகள் நடந்து வரும் நிலையில், கருணையுடன் என்னை இங்கேயே இருக்க அனுமதியுங்கள்" எனக் கோரியிருக்கிறார்.
ஆனால், சீமா ஹைதரை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப உத்தரப்பிரதேச தீவிரவாதத் தடுப்புப் படை பரிந்துரைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், சீமா ஹைதரை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பினால் அவர் கொலைசெய்யப்படுவார் என பாகிஸ்தானிலிருந்து சிலரால் எச்சரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
from India News https://ift.tt/CVdBSQ7
0 Comments