மணிப்பூர் கலவரத்தில், பழங்குடிச் சமூகமான குக்கி இனப் பெண்கள், பழங்குடியல்லாத மைதேயி இன ஆண்கள் குழுவால் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான அவலம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் மே 4-ம் தேதியே நடந்திருந்த நிலையில், போலீஸாரும் அப்போதே வழக்கு பதிவுசெய்தனர்.ஆனால் நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானப் பிறகே, இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதே தெரியவந்தது. இரண்டு மாதங்களாக ஆதாரம் எதுவும் கிடைக்காததால் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என போலீஸ் கூறுவது கொடுமையாக இருக்கிறது.
மேலும், இந்த சம்பவத்தின்போது போலீஸார் தங்களை அந்தக் கும்பலிடம் ஒப்படைத்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியிருக்க இதைவிடவும் நாட்டுக்கே பேரவலம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரின் மனைவியாவார். இந்த நிலையில் மணிப்பூர் சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பாதிக்கப்பட்ட குக்கி சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் 10 பேர், கலவரத்தில் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த 114 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாகவும், மேலும் குக்கி சமூக பெண் ஒருவர் கொடூரமான முறையில் இரண்டு முறை கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாகவும் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டிருக்கின்றனர்.
இது குறித்து குக்கி சமூக எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், ``நமது சக இந்தியர்களின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய, அப்பாவி குக்கி இன மக்களுக்கு எதிராக மைதேயி சமூகத்தவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான செயல்களை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இம்பால் மாவட்டத்தின் கோனுங் மாமாங்கில் உள்ள கோபிபுங், உரிபோக்கில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த தாய், மகள் கொல்லப்பட்டனர். மேலும், செக்கானிலிருந்து கடத்தப்பட்ட பெண் ஒருவர் லாங்கோல் மற்றும் நகாரியன் மலையில் இரண்டு முறை கொடூரமாகக் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளானார்.
அதோடு போறோம்பட்டில் இரண்டு செவிலியர் மாணவிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்பிழைத்தனர். அதேசமயம், மனநலம் குன்றிய குக்கி சமூக பெண் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டார். இவையாவும், பெண்களுக்கும் மனித குலத்துக்கும் எதிரான மிகவும் மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டித்தனமான குற்றமாகும். இதுவரை குக்கி சமூகத்தைச் சேர்ந்த 114 இறந்திருப்பது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.
எனவே குக்கி சமூக மக்கள் கொல்லப்பட்டது உட்பட அனைத்து வழக்குகளும், மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்படவேண்டும். அதோடு, இத்தகைய குற்றங்களுக்குக் காரணமான அனைத்து குற்றவாளிகளையும் தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தவேண்டும்" என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கூட்டறிக்கை வெளியிட்ட குக்கி சமூக எம்.எல்.ஏ-க்களில் ஏழு பேர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/ex8qmX6
0 Comments