புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவித்தபடி காஸ் மானியத் தொகையாக சிவப்பு ரேஷன் அட்டைக்கு 300 ரூபாயும், மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கு 150 ரூபாயும் நிர்ணயித்து நேற்று முன் தினம் அரசாணை வெளியிடப்பட்டது. அதுகுறித்து இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, ``புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் இந்த ஆண்டினுடைய நிதிநிலை அறிக்கையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்ப பெண்களுக்கும் ரூ.1000/, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் காஸ் மானியம் சிலிண்டருக்கு ரூ.300/- என ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அதேபோல பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50,000/- வைப்பு நிதியாக வைக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால் அதை மக்களுடைய கருத்தைகேட்டு அறிவித்திருக்க வேண்டும். கருத்து கேட்புக்குப் பின் அறிவிப்பு வெளியாகும் போதுதான் அதற்குள்ள எதிர்பார்ப்பும், உணர்வும் அதிகமாக இருக்கும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/71db0996-4534-457b-9760-b3e63fcbf3c3/IMG_20230506_WA0002.jpg)
புதுச்சேரியில் யாரும் காஸ் மானியம் 300 ரூபாயையும், பெண் குழந்தைக்கு 50,000 ரூபாயையும் கேட்கவில்லை. அதேபோல் தமிழகத்தை முந்திக்கொண்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000/- உதவித்தொகை திட்டத்தை புதுச்சேரியில் அறிவித்தீர்கள். முதல்வர் அறிவித்த திட்டங்களை சட்டமன்றத்தில் நாங்கள் வரவேற்றாலும், காஸ் மானியத்தை ஒன்றிய அரசு வழங்கினாலும் அதை மாநில அரசு அந்த 300 ரூபாயை கழித்துக்கொண்டு காஸ் விநியோகம் செய்ய வேண்டும் என்று கூறினோம். அதேபோல பெண் குழந்தை பிறந்தால் வைப்பு நிதியாக வைக்கப்படும் ரூ.50,000/-ஐ 22 ஆண்டுகள் கழித்து எவ்வளவு ரூபாயாக திருப்பிக் கொடுப்பீர்கள் என்றும், இந்த திட்டங்களுக்கு உண்டான நிதி ஆதாரத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் நாங்கள் கேள்வி எழுப்பினோம். ஆனால் அப்போது எதற்கும் பதில் இல்லை.
இந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000/- வைப்பு நிதி, காஸ் மானியம் சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.300, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ.150 வழங்குவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி அவர்கள் காஸ் மானியம் ரூ.300 அனைத்து ரேஷன் கார்டுக்கும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அறிவிக்கும் முன், அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்றுத்தான் அறிவித்திருப்பார். அப்படி இருந்தும் முதல்வர் அறிவிப்பை நீர்த்துப்போகச் செய்கின்ற வகையில் தலைமைச் செயலரும், நிதிச் செயலரும் கூட்டாக சேர்ந்து சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.300 என்றும், மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ.150 என்றும் அரசாணை வெளியிட்டிருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமானப்படுத்தும் செயலாகும். அதேபோல், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களுக்கு ரூ.1000/- வழங்கும் திட்டத்தில், 13,000 பேருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயுடன் மட்டும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆனால் அத்திட்டத்தை செயல்படுத்தாமல் இன்னும் கணக்கெடுக்கும் பணி தொடர்வது குடும்பத் தலைவிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல், இத்திட்டத்தை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து வழங்கப் போகிறீர்களா அல்லது அரசாணை வெளியிட்ட பிறகு வழங்க உள்ளீர்களா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதையெல்லாம் தாண்டி சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை, கே.வி.கே, பஜன்கோ உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 7,000 தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி அறிவித்தீர்கள். அதை எப்போது வழங்குவீர்கள் ? புதுச்சேரி மக்கள் எதிர்பார்க்கக் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய தொழிற்சாலைகளைக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் இல்லை. இப்படி மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகள் இருக்கும்போது காஸ் மானிய அறிவிப்பை, அதுவும் முரண்பட்ட முறையில் அறிவித்திருப்பதை பிம்பப்படுத்துவதை யாரும் விரும்பவில்லை என்பதை அரசு உணர வேண்டும்” என்றார்.
from India News https://ift.tt/24o9Fkw
0 Comments