நேட்டோ படையில் இணைவதற்கு உக்ரைன் முனைப்பு காட்டியது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர், "உக்ரைன் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை என்றால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" எனத் தெரிவித்தார்.
ஆனால் உக்ரைன் தனது முடிவிலிருந்து பிவாங்கவில்லை. இதையடுத்து அந்த நாட்டின்மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும்படி, ரஷ்ய ராணுவத்துக்கு உத்தரவிட்டார், அதிபர் புதின். இதையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் தொடங்கி, ஓராண்டுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ, பொருளாதார உதவிகள் செய்து வருகின்றன. இதனால் இந்தப் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. சமீபகாலமாக உக்ரைன்மீதான தனது தாக்குதலை தீவிரமாக்கியிருக்கிறது, ரஷ்யா. இந்த நிலையில், புதினுடன் கைகோப்பதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்திருப்பது சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பை தொற்றிக்கொள்ளச் செய்திருக்கிறது.
இது குறித்து ரஷ்யாவின் தேசிய தினத்தையொட்டி, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், "உக்ரைனுக்கு எதிரான இந்தப் போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் முடிவுக்கு முழு ஆதரவு தருவதோடு, முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். நீதி வெற்றி பெறுவது உறுதி. ரஷ்ய மக்கள் வெற்றி வரலாற்றில் தொடர்ந்து பெருமை சேர்ப்பார்கள்.
ஒரு சக்திவாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பெரும் இலக்கை நிறைவேற்ற இரு நாட்டு மக்களின் பொதுவான விருப்பத்துக்கு இணங்க, ரஷ்ய அதிபருடன் கைகோக்கிறேன். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு எங்கள் நாட்டின் முழு ஆதரவை வழங்குவோம்.
வட கொரிய மக்கள், ஏகாதிபத்தியம் மற்றும் தன்னிச்சையான தன்மைக்கு எதிராக தங்கள் நாட்டின் இறையாண்மை, உரிமைகள், வளர்ச்சி மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கான புனித நோக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதை செயல்படுத்துவதற்கான அவர்களின் முழுப் போராட்டத்தின் வழியாக, ரஷ்ய மக்களுடன் ஒற்றுமையாக இருந்து, அவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்குவார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
from India News https://ift.tt/ti4asIr
0 Comments