கோயில் நிர்வாக விவகாரத்தில் அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம் - பின்னணியும், தாக்கமும்?!

தமிழக கோயில்கள் பாதுகாப்பு தொடர்பாக நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இதில் சில உத்தரவுகளை அமல்படுத்திய தமிழக அரசு, சில உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக் கோரியும், விளக்கம் கேட்டும் மனு தாக்கல் செய்திருந்தது.

கோவில்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "கோயில்களையும், அதன் சொத்துக்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மட்டுமல்லாமல், கலாசாரம், மரபு அடங்கிய கோயில்களையும், பாதுகாக்க வேண்டும்.

மாநில அளவிலான புராதன ஆணையத்தில் ஏற்கனவே 16 பேர் உள்ள நிலையில், அறநிலையத் துறையை சேர்ந்த ஒருவரை சேர்ப்பதில் தவறில்லை. இதுசம்பந்தமாக சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாக்க சட்டம் இயற்றுவதில் தீர்க்கமாக இருப்பதாக கூறிவரும் தமிழக அரசு, நீதிமன்ற உத்தரவுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது.

இந்து சமய அறநிலையத்துறை

பொது நலன் கருதி சட்டம் இயற்றும்படி சொல்ல நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. தமிழ்நாடு புராதன ஆணைய சட்டத்தில் கோயில்களும் அடங்கும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலங்களான கோயில்களையும் மாநில அளவிலான புராதன ஆணையத்தில் சேர்க்க வேண்டும். அதேபோல கோயில்களின் வருமானம், செலவு ஆகியவை மத்திய கணக்கு தணிக்கை துறையால் தணிக்கை செய்யப்படுவதன் மூலம், மாநில அரசின் உரிமை ஏதும் பறிக்கப்படாது.

தற்போது இருக்கக்கூடிய முறையுடன் மத்திய கணக்கு தணிக்கை துறையும் தணிக்கை செய்யலாம். கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை ஒதுக்கீடு செய்வதாக இருந்தால், அதன்மூலம் கோயிலுக்கு பலன் இருக்க வேண்டும். அறநிலையத்துறை சட்டத்தின்படியே இந்த ஒதுக்கீடு இருக்க வேண்டும். கோயில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

சட்டம்

கோயிலின் அன்றாட நிர்வாகத்தில் அறங்காவலர்கள் முக்கிய பங்கு வகிப்பதால், அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமே அறங்காவலர்களை நியமிக்க கூடாது. அறங்காவலராக நியமிக்கப்படுபவர் ஆன்மீகவாதியாகவும், பக்தராகவும் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளை நியமிப்பதை தவிர்க்க வேண்டும். அறங்காவலர்களின் நியமனம் பக்தர்களின் பங்களிப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற வேண்டும்" என உத்தரவிட்டு, அரசின் மறு ஆய்வு மனுவை முடித்துவைத்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "ஒட்டுமொத்தமாக அரசியல்வாதிகளை அறங்காவலராக நியமிக்க கூடாது என்று சொல்வது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. எம்.பி, எம்.எல்.ஏ-என மக்களுடைய பிரதிநிதிகளாக அரசியல்வாதிகள் இருப்பார்கள், எனவே அவர்களை நியமிப்பதில் என்ன தவறு இருக்கிறது?.

ப்ரியன்

பதவியில் இல்லாத ஆளுங்கட்சி அரசியல்வாதிக்கு உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அவர்களை நியமனம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது. அரசியல்வாதிகள் என்றாலே ஊழல் செய்வார்கள், லஞ்சம் வாங்குவார்கள் என்ற எண்ணம் நமது மனதில் பதிந்து விட்டது.

ஆனால் அனைவரும் அப்படி செய்வார்கள் என்று சொல்ல முடியாது. உயர் நீதிமன்றம் இதுபோன்ற விஷயங்களில் தலையிட்டு பேசுவது சரி என்று தோன்றவில்லை. ஒரு கோயிலில் 6 பேர் கொண்ட அறங்காவலர் குழு இருக்கிறது என்றால், அதில் ஒன்று, இரண்டு அரசியல்வாதிகள் இருப்பதில் என்ன தவறு இருக்கிறது?.

கோவில்

இன்று கோயிலின் சொத்துக்கள் இணையதளத்தில் தெரிந்துகொள்ளும் அளவுக்கு வெளிப்படைத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள். ஊழல் செய்தால் சமூக வலைத்தளத்தில் உடனே வந்து விடுகிறது. எனவே அரசியல்வாதிகளை நியமிப்பதில் எந்த தவறும் இல்லை' என்றார்.



from India News https://ift.tt/7PoswcZ

Post a Comment

0 Comments