திமுக உட்கட்சி பஞ்சாயத்து: 61 நிர்வாகிகள்; 5 மணிநேர விசாரணை - அமைச்சர், மேயருக்கு கனிமொழி அட்வைஸ்!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும், நாகர்கோவில் மாநகராட்சி மேயராகவும் இருக்கிறார் மகேஷ். இவருக்கும் குமரி மேற்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் இடையே மோதல் மோதல் போக்கு நீடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மேயர் மகேஷ் தங்களை திட்டியதாக நாகர்கோவில் துணை மேயர் மேரி பிரின்ஸிலதா உள்ளிட்ட சில கவுன்சிலர்கள் வெளிப்படையாகவே புகார் கூறினர். மேலும் அமைச்சர் மனோதங்கராஜ் தூண்டுதலால் துணை மேயர் எதிராக செயல்படுவதாக மேயர் மகேஷ் தரப்பு கூறி வந்தது.

இதுகுறித்து ஜூனியர் விகடன் இதழில் விரிவாக கட்டுரை வெளியிட்டிருந்தோம். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க-வில் உள்கட்சி பிரச்னை பூதாகரமானதைத் தொடர்ந்து அதுகுறித்து விசாரணை நடத்த தி.மு.க மேலிடம் முடிவு செய்தது. தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழி நேற்று மதியம் திடீரென நாகர்கோவிலுக்கு வந்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்த அமைச்சர் மனோ தங்கராஜிம், மேயர் மகேஷும் அவசரமாக விமானம் பிடித்து நாகர்கோவில் வந்தனர்.

அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ் உள்ளிட்டோர்

அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் உள்ளிட்டோரிடம் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து கனிமொழி பேசினார். இதற்கிடையே கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, மாவட்ட, மாநில நிர்வாகிகள் அவரசரமாக நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டனர். மேலும் நாகர்கோவில் மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர்களும் அழைக்கப்பட்டனர். நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாலை 4 மணி முதல் தனி அறையில் கனிமொழி, நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

மாவட்டத்தில் என்ன நடக்கிறது, கட்சியில் என்ன பிரச்னை, உங்களுக்கு எதாவது பிரச்னை உள்ளதா என்பதுபோன்ற பல கேள்விகளை கனிமொழி கேட்டுள்ளார். வேறு எந்த நிர்வாகிகளும் அறையில் இல்லாததால் கனிமொழியிடம் நிர்வாகிகள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படையாக கொட்டி உள்ளனர். அதில், மேயர் மகேஷுக்கு எதிராகவே அதிக நிர்வாகிகள் கருத்து கூறியதாக உள்தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது. அவர் பா.ஜ.க-வினருக்கு ஆதரவாக செயல்படுகிறார், திடீரென டென்சன் ஆகிறார் என சில நிர்வாகிகள் கூறி உள்ளனராம். அதே சமயம் மகேஷை மேயராக வர விடாமல் சதி செய்தவர்கள்தான் பிரச்னைக்கு காரணம் எனவும், அமைச்சர் மனோ தங்கராஜ் தரப்பு கிழக்கு மாவட்டத்தில் தலையிடுவதும்தான் பிரச்னைக்கு காராணம் எனவும் சில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனராம்.

கருத்துச் சொல்ல வந்திருந்த பெண் கவுன்சிலர்கள்

கவுன்சிலர்களிடம் மாநகராட்சி சம்பந்தமான பிரச்னைகளை கேட்டறிந்துள்ளார் கனிமொழி. மகேஷுக்கு எதிராக புகார் வாசித்த கவுன்சிலர்களிடம் 'இனி அந்த மாதிரி நடக்காமல் நான் சொல்லுகிறேன். இனி உங்களுக்கான வேலைகள் வந்துசேரும். நான் மேயரிடம் பேசுகிறேன்' என கனிமொழி உறுதி அளித்துள்ளாராம். இதில் மாநில நிர்வாகிகள் 8 பேர், மாவட்ட நிர்வாகிகள் 15 பேர், ஒன்றிய நிர்வாகிகள் 11 பேர், பகுதி நிர்வாகிகள் 4 பேர், மாநகராட்சி கவுன்சிலர்கள் 23 என மொத்தம் 61 நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார் கனிமொழி.

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 5 மணி நேரம் தொடர்ச்சியாக புகார்களையும், கருத்துக்களையும் கனிமொழி கேட்டறிந்தார். பின்னர், அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் ஆகியோரை தனியாக அழைத்து ஒருமணி நேரம் அட்வைஸ் செய்தாராம் கனிமொழி. அவர்களை சமாதானமாக போகும்படி கனிமொழி கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சி பிரச்னை குறித்த பஞ்சாயத்தை கனிமொழி நேரடியாக நடத்திய சம்பவத்தால் குமரி தி.மு.க பரபரத்து கிடக்கிறது.



from India News https://ift.tt/bkYRW0i

Post a Comment

0 Comments