அமெரிக்காவுக்கு பத்து நாள் பயணம் மேற்கொண்டிருக்கிறார், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அதன் ஒருபகுதியாக சான் ஃபிரான்சிஸ்கோ நகரின், சான்டா க்ளாராவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "பாஜக அரசு அனைத்து மக்களையும் அச்சுறுத்துகிறது. அரசு நிறுவனங்களைத் தவறான வழியில் பயன்படுத்துகிறது. பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் மக்களைத் தொடர்பு கொள்ளக்கூடிய அரசின் அனைத்து அமைப்புகளையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
எனவே தான் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசியல் ரீதியாக செயல்படுவது இந்தியாவில் கடினாமாகி விட்டது என்பதால் கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீநகர் வரை நடைபயணம் மேற்கொண்டேன். இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது பாஜகவுக்கு உதவுவதற்காக ஊடகங்கள் சில விஷயங்களை எடுத்துக்காட்ட முயல்வதை தெரிந்து கொண்டேன். எனவே, ஊடகங்களில் காட்டப்படும் அனைத்தையும் உண்மை என்று நம்பிவிட வேண்டாம். ஊடகங்களால் காட்டப்படுவது மட்டும் இந்தியா இல்லை" என்றார்.
பின்னர் கலிபோர்னியாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே பேசிய ராகுல் காந்தி, "இந்தியாவில் இஸ்லாமியர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதேபோல் தான் சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரும் உணர்வை கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியளிக்க முடியும். வெறுப்பைக் கொண்டு வெறுப்பைக் குறைக்க முடியாது.
ஆனால் அன்பு மற்றும் பாசத்தால் மட்டுமே அதை குறைக்க முடியும். சிலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். வரலாற்றை வரலாற்றாசிரியர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கு அறிவியலையும், ராணுவத்துக்குப் போரையும் விளக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள். உண்மையில் அவர்களால் எதனையுமே புரிந்து கொள்ள முடியாது. எதனையுமே காது கொடுத்து கேட்கும் சகிப்புத் தன்மையும் இருக்காது.
எந்தவொரு மனிதனும் எல்லாவற்றையும் அறிய முடியாத அளவுக்கு உலகம் மிகப் பெரியது மற்றும் சிக்கலானது. கடவுளை விட தங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் கடவுளுடன் அமர்ந்து என்ன நடக்கிறது என்பதை அவருக்கு விளக்கலாம். இதற்கு நிச்சயமாக, நமது பிரதமர் ஒரு உதாரணம். நீங்கள் மோடிஜியை கடவுளுடன் உட்கார வைத்தால், பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர் கடவுளுக்கு விளக்குவார்.
இதனால் நான் எதை உருவாக்கினேன் என்பதில் கடவுள் குழப்பமடைவார். மோடி அரசு இந்தியாவில் நிலவி வரும் வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்னைகளை எதிர்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் மறுக்கிறது. செங்கோல் மனோபாவம் கொண்டவர்களிடம் நாம் வேறு எதனையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவருவதில், காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. கூட்டணி கட்சிகள் எதிர்த்தாலும் கொண்டு வருவோம்" என்றார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், "ராகுல் காந்தி தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது இந்தியாவை அவமதித்துள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் பிரதமர் மோடியை அவமதிக்க விரும்புகிறார். ஆனால் இந்தியாவை அவமதிக்கிறார், இந்தியாவின் முன்னேற்றத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்.
நமது வளர்ச்சியை உலகமே அங்கீகரிக்கும் நேரத்தில் அவர் இந்தியாவை களங்கப்படுத்த முயற்சிக்கிறார். பிரதமர் தனது சமீபத்திய வெளிநாட்டு பயணத்தின் போது கிட்டத்தட்ட 24 பிரதமர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் ஜனாதிபதிகளுடன் 50 க்கும் மேற்பட்ட சந்திப்புகளை நடத்தியிருக்கிறார். மோடி மிகவும் பிரபலமான தலைவர் என்று பல உலகத் தலைவர்கள் கூறி வருகின்றனர். 'பிரதமர் மோடிதான் பாஸ்' என்று ஆஸ்திரேலிய பிரதமர் கூறினார்.
ஆனால் ராகுலால் இதை ஜீரணிக்க முடியவில்லை. ராகுல் காந்தி பேசும் காலமான 1980-களில், காங்கிரஸ் ஆட்சி தான் நடந்தது. அப்போதுதான் தலித்துகள் மற்றும் பட்டியலின குடும்பங்கள் ஒடுக்கப்பட்டன. ஒருவேளை காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டதாகவும், பாஜகவின் கீழ் நல்லாட்சி நடைபெறுவதாகவும் அவர் வெளியே சென்று சொல்ல விரும்பியிருக்கலாம்” என்றார்.
இதனை தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், "வெளிநாடு செல்லும்போது அரசியல் செய்யாமல் இருக்க முயற்சி செய்வேன். நான் விமர்சனம் மேற்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால், தாய் நாட்டுக்கு சென்ற பிறகுதான் தீவிரமாக விமர்சிப்பேன். ஜனநாயக கலாசாரத்திற்கு உறுதியான கூட்டு பொறுப்பு உள்ளது. தேசிய நலன் மற்றும் கூட்டு நற்பெயர் ஆகியவற்றுக்கு உழைப்பதை போன்று பொறுப்பு இருக்கிறது" என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, "அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு மத்தியில் இந்தியா குறித்து தான் பேச முடியும். பாகிஸ்தான் குறித்து பேச முடியாது. இந்தியாவில் இருக்கும் அரசியல், ஜனநாயகம், மதசார்பின்மை, மக்கள் விரோத பாஜக அரசின் செயல்கள் குறித்து பேசாமல் வேறு என்ன பேச முடியும்?.
இந்திய மக்கள் நலன் சார்ந்து கவலையோடு இருக்கிற வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் அவர்கள் வருந்துகின்ற பிரச்னைகள் குறித்து தான் பேச முடியும். இதேபோல் வெளிநாடு செல்லும் போது மோடியும் பேசி இருக்கிறார். மறைமுகமா காங்கிரஸையும், முன்னாள் பிரதமர்களையும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். ஆகையால் ராகுல் காந்தி பேசுவது ஒன்றும் புதுமையானது அல்ல" என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி. "தான் சார்ந்த நாடு குறித்து விமர்சனம் செய்வது, மத ரீதியான பிரச்னை இருக்கிறது என்று கூறுவது, நாடு குறித்து தவறாக பேசுவதை தான் தவறு என்று கூறுகிறோம். அங்கு அரசியல் பேச வேண்டிய அவசியம் இல்லை. நாட்டின் வளர்ச்சி குறித்து பேசுங்கள். எங்களது நாட்டில் சிறுபான்மையினரே இருக்க முடியாது என்ற நிலை இருக்கிறது என்று இல்லாத விஷயத்தை எதற்காக பேச வேண்டும்" என்றார்.
from India News https://ift.tt/6p1RzQ5
0 Comments