``அவர்களிடம் சென்று பேசுவதால் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள்” - ஆளுநர் ரவியின் பேச்சும் எதிர்ப்பும்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி ஊட்டி ராஜ்பவனில் மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின், துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் இன்னும் பிற விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, ``சுதந்திரத்தின் ஆரம்ப பத்தாண்டுகளில், காமராஜர் போன்ற கல்விக்கு பெரும் ஊக்கம் அளித்த தலைவர்கள் இங்கு இருந்தனர். அதைத் தொடர்ந்து, கல்வியின் அவசியம் பரவியது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

அடுத்தடுத்து வந்த அரசுகளின் கொள்கைகள் இதைப் பரவலாக்கி, அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குச் சென்றடையச் செய்ததால் அதன் பலன்களை நாம் அனுபவித்தோம். இந்த கல்விப்பரவலானது, நமது பொருளாதாரம் மற்றும் சேவை வழங்கல் நடவடிக்கைக்கு ஊக்கம் அளித்தது. மேலும் தமிழ்நாடு நாட்டின் முன்னணி மாநிலமாக மாறியது. நாம் அந்த நிலையை சிறிது காலம் தக்க வைத்திருந்தோம். இன்றைய நிலை என்ன?

இன்று பல துறைகளில் நாட்டின் முன்னோடியாக இருக்கும் நாம் முதலிடத்திலிருந்து, ஐந்து மற்றும் ஆறாம் நிலைக்கு வந்திருக்கிறோம். நமது கல்வி வளர்ச்சி பதிவு விகிதம் (GER) தேசிய சராசரியை விட கிட்டத்தட்ட இரு மடங்காக இருக்கிறது. ஆனால் அது இன்றைய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதா என்பதுதான் கேள்வி. நமது இளைஞர்களுக்கு தங்களின் பட்டப்படிப்புக்கு உரிய வேலை கிடைப்பதில்லை. நமது தொழில்துறையினரும் பணியமர்த்தக் கூடிய தகுதியான பொறியாளர்கள் எங்களுக்குக் கிடைப்பதில்லை எனக் கவலை தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள்

என்ஜினியரிங் பட்டதாரிகளை விட நமது பாலிடெக்னிக் மாணவர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளையும், நல்வாய்ப்புகளையும் பெறுகிறார்கள் என்ற முரண்பாடான நிலைதான் இன்று இருக்கிறது. கல்லூரிகளில் முதுகலை பாடம் கற்பிக்கும் முதுகலை பட்டதாரிகளுக்கு, அன்றாடம் ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு கிடைப்பது போன்ற மாதம் 15-20 ஆயிரம் ஊதியமே கிடைக்கிறது. ஏனென்றால், காலத்தின் தேவைகளுக்கு ஏற்ற கல்வியை நாம் வழங்கவில்லை. இது குறித்து நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

மற்றொரு பிரச்னை, கலை, வரலாறு, தத்துவம் போன்றவைகளில் பட்டம் பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்புகள் இருண்டிருக்கின்றன. இங்கே தான் காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பலதரப்பட்ட கற்பித்தல் வாய்ப்பின் அவசியம் வருகிறது. அது வேலையைத் தேடுவதற்கு அவர்களை தகுதிபெறச் செய்யும். இதுதான் புதிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கிய கூறுகளாகும். பல்துறை திறன்களை வழங்குவதன் மூலம் காலத்திற்கு பொருத்தமான கல்வியை தருவதே அதன் நோக்கம்.

பிரதமர் மோடி - புதிய நாடாளுமன்றம்

அடுத்த 25 ஆண்டுகளில் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தனது தொலைநோக்குப் பார்வையை நமது பிரதமர் கொண்டிருக்கிறார். எல்லா பயணத்திலும் நமது கல்வியை எல்லா காலத்துக்கும் உகந்ததாக எப்படி மாற்றுவது என்பதையும் நினைத்தார். அப்போதுதான், பள்ளிகளில் மட்டுமல்ல, உயர் கல்வி நிறுவனங்களிலும் கற்பிக்கும்போதும் படிக்கும்போதும் பிராந்திய மொழியில் படித்தால் நிலைமை மாறும் என தெரிய வந்தது. ஆங்கிலம் அந்நிய மொழி தானே. நமது மாணவர்களில் பலர், ஆங்கில மொழியை பயன்படுத்துவதில் சிரமத்தை எதிர்காள்பவர்களாக உள்ளனர்.

அதே மாணவர்கள் தாய்மொழியில் பேசுவதை வசதியாக உணர்கிறார்கள். அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் கற்க ஆங்கிலம் கற்றுக்கொள்வது முக்கியம் என்ற நம்பிக்கை நம் ஆழ் மனதில் பதியப்படும் அளவுக்கு ஆங்கிலத்திற்கு நாம் அடிமைப்பட்டுவிட்டோம். இந்த எண்ணம் அடியோடு மாற வேண்டும். நமது இளைஞர்களுக்காக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து உருவாக்கினால், அந்த இளைஞர்களின் தடுமாற்றத்தை நாம் தடுக்கலாம். தமிழ் வழியில் கல்வி வழங்கும் நடவடிக்கை, நமது மனித ஆற்றலுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

மாணவர்கள்

அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்கள் உற்பத்தியை சீனாவிலிருந்து இடமாற்றம் செய்ய மாற்று நாடுகளைத் தேடுகின்றனர். அவர்கள் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம், உள்கட்டமைப்பை நாம் உருவாக்கிய விதம், நமது மின் உற்பத்தியை மேம்படுத்துதல் போன்றவையே இதற்கு காரணம். இன்று உலகின் முதல் மூன்று ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான சூழல் அமைப்பில் இந்தியா இருக்கிறது. உலகிலேயே மிகவும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட நாடு இந்தியா. இந்த மாற்றம் தங்களின் உற்பத்தியை இடமாற்றம் செய்வதற்கான வருங்கால இந்தியா என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்கிறது.

நமது மாநிலத்தில், அவர்களை மேலும் மேலும் கவரக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். நாம் கேட்பதாலோ அல்லது அவர்களுடன் சென்று பேசுவதாலோ முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள். சிறிய மாநிலமான ஹரியானாவில் நமது மாநிலத்திற்கு இணையான அந்நிய நேரடி முதலீடு (FDI) உள்ளது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். நீங்கள் நினைத்தால், எந்த கட்டத்திலும் சாதிக்கலாம்" எனப் பேசியிருக்கிறார். முதலீட்டாளர்கள் குறித்து பேசுகையில் யாரையும் ஆளுநர் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

எனினும் அண்மையில் முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், ஆளுநரின் இந்த பேச்சு சர்ச்சையானது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ``முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணத்தை இழிவுபடுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி விஷத்தைக் கக்கி இருக்கிறார். ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும். இல்லையேல் நாகலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும்” என்றார்.



from India News https://ift.tt/FxaHkAX

Post a Comment

0 Comments