தரசச: மன எழதக கடகக அதகப பணம வசலபப?! - கறறசசடடம ஆடசயர பதலம!

அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது. அந்தக் கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை ஒரு புகார் மனு வடிவில் அதிகாரிகள் பெறுவது இயல்பு. இதே போன்று திருச்சி ஆட்சியர் அலுவலகத்திலும் வாரம்தோறும் திங்கள்கிழமை காலை எட்டு முதல் மதியம் ஒரு மணி வரை பொதுமக்களிடம் மனுக்களைப் பெறுவது வழக்கம். ஒரு குறை தீர்க்கும் கூட்டத்தில் சராசரியாக ஐந்நூறு மனுக்கள் வரை பெறப்படுகின்றன.

திருச்சி ஆட்சியர் அலுவலகம்

இந்த நிலையில், திருச்சி ஆட்சியர் அலுவலகத்துக்குள்ளே வெவ்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கூட்டமைப்பாக இணைந்து இலவசமாக மனு எழுதித்தர ஆட்கள் இருக்கின்றனர். இருப்பினும், ஒருசிலர் ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிலிருந்துகொண்டு மனு எழுதித் தருவதற்குப் பணம் வசூலிப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்துகொண்டிருக்கின்றன.

என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் சென்றோம். அங்கே இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுத்துக்கொண்டிருக்கும் பாத்திமா கண்ணனிடம் இது குறித்து விசாரித்தோம். ``இங்கு இலவசமாக மனு எழுதித்தர பத்து பேர் வரை இருக்கிறோம். இருப்பினும் வருகின்ற ஐந்நூறு மனுக்களில் முந்நூறு மனுக்கள் பணம் கொடுத்துதான் எழுதப்படுகின்றன. 

முதன் முறையாக மனு அளிப்பவர்களும், அவசரமாக மனு அளிப்பவர்களும், இங்கே நாங்கள் இலவசமாக மனு எழுதித் தருவது தெரியாமல், அலுவலகத்துக்கு வெளியே மனுவை காசு கொடுத்து எழுதி வாங்கிவிடுகின்றனர். மக்கள் தங்களது வேலையை விட்டுவிட்டு தங்களது குறைகளைக் கூற ஆட்சியர் அலுவலகத்தை நாடுகின்றனர். அவர்களின் இன்னல்கள் என்னவென்று அறியாமல், வருகின்ற மக்கள் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி பாரபட்சமின்றி அனைவரிடமும் 100 முதல் 150 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். வெளியே பணம் கொடுத்து எழுதும் பெரும்பாலானோரின் மனுக்களில் எழுத்துகள் தெளிவாக இல்லாததால், இங்கே எங்களிடம் வந்து மறுபடியும் எழுதிக்கொள்கின்றனர்.

ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியில் மனு எழுதித் தரும் ஆட்கள்

பலர், தாங்கள் பஸ்ஸுக்குக்கு வைத்திருந்த ஐம்பது, நூறு ரூபாயைக்கூட அவர்களிடம் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு நடந்து செல்லும் அவலங்கள் நடக்கின்றன. அவர்களைப் பணம் வசூலிக்காமல் சமூக சேவை செய்யச் சொல்லவில்லை, ஒரு மனுவுக்கு 25 முதல் 30 ரூபாய் வசூலித்தால் போதுமானது. அதிகமாகப் பணம் வசூலிப்பவர்கள்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் தரிசனத்துக்கு வரும் மக்களிடம், சிலர் சாமி தரிசனத்துக்குக் காசு கொடுங்கள் என்று கேட்பதுபோல, ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே வருவதற்கு முன்னரே அழைத்து மனு எழுதிவிட்டு காசு கேட்கின்றனர். காவல்துறை சார்பில் பலமுறை வலியுறுத்தியும் கேட்பதாக இல்லை.

தொடக்கத்திலேயே இரண்டு முறை `உள்ளே இலவசமாக மனு எழுதித் தரப்படும்' என்ற பேனர் வைத்திருந்தோம். வைத்த ஓரிரு நாள்களிலேயே அந்த பேனர்கள் கிழித்து, எடுத்துச் செல்லப்பட்டன. ஒரு பேனருக்கு நானூறு முதல் ஐந்நூறு ரூபாய் வரை ஆகிறது. இனி வரும் காலங்களில் நிரந்தரமான பலகை வைத்தால்தான் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கும்" என்றார்.

இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, "நாங்க இப்போதான் மொத தடவையா வர்றோம். அதுனால உள்ள இலவசமா மனு எழுதித் தர்றது எங்களுக்குத் தெரியாது. அதுனாலதான் காசு கொடுத்து எழுத வேண்டியதா போயிருச்சு" என்றனர். 

ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியில் மனு எழுதித் தரும் ஆட்கள்

இது குறித்து ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே பணம் வாங்கிக்கொண்டு, மனு எழுதுவோரிடம் பேசினோம். அதில் பெரும்பாலானோர் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள்தான். அவர்களிடம் கேட்டபோது, "அலுவலகத்துக்கு உள்ளே மனு எழுதுவோர் புகாரைத் தெளிவாக விவரிப்பது இல்லை. வாரத்தில் ஒரு நாள் மட்டும்தான் 30, 40 எனச் சம்பாதிக்கிறோம். 100 ரூபாயெல்லாம் யாரும் வாங்குவதில்லை. அப்படி வாங்கினால் நடவடிக்கை எடுக்கட்டும். எங்களிடம் வருபவர்களின் புகாருக்கு ஏற்ப, அனைத்து விண்ணப்பங்களும் இருக்கின்றன. உள்ளே மனு எழுதுவோர் புகாரின் சாரம் அறிந்து எழுதுவதில்லை. இவர்களுக்கு இதை வழங்கவும் என நான்கு வரி மட்டும்தான் எழுதுகின்றனர். நாங்கள் ஒரு மனுவை எழுத இருபது நிமிடங்கள் எடுத்துக்கொள்வோம். பத்து நிமிடங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசிய பிறகுதான் மனு எழுதத் தொடங்குவோம்.

எடுத்துக்காட்டாக ஒருவர் வீட்டுமனைக்காக வருகிறார் என்றால், சும்மா நாலு வரிகளை மட்டும் எழுதுவார்கள். ஆனால் நாங்களோ, எத்தனை வருடங்களாக நீங்கள் வாடகை வீட்டில் இருந்தீர்கள், குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள், குடும்பத் தலைவர் என்ன வேலை செய்கிறார், குழந்தைகள் எத்தனை அதில் ஆண் குழந்தைகள் எத்தனை... பெண் குழந்தைகள் எத்தனை என விசாரித்த பிறகே எழுதுகிறோம். பெரும்பாலானோர், உள்ளே புகாரை தெளிவாக விவரித்து எழுதுவதில்லை, ஆகையால் வெளியே வந்து எங்களிடம் பணம் கொடுத்து எழுதி வாங்கிச் செல்கின்றனர்" என்று கூறினர்.

மக்கள் குறைதீர் கூட்டம்

மேலும் ஒரு மாற்றுத்திறனாளியிடம் பேசும்போது, ``நான் ஒரு எம்.ஏ படித்த பட்டதாரி. அரசாங்க வேலை கேட்டால் ஐந்து முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை லஞ்சமாகக் கேட்கிறார்கள். மாற்றுத்திறனாளியான நான், வாழ்வாதாரத்துக்கு வேறு வழியில்லாமல்தான், இதைச் செய்து வருகிறேன்'' என்றார்.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் பேசினோம். ``அலுவலகத்துக்கு வெளியில் பணம் பெற்றுக்கொண்டு மனு எழுதுவோர் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள். இருப்பினும், அவர்களது வாழ்வாதாரம் கருதி அவர்களிடம், `மனு எழுதிக் கொடுப்பதற்கு அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது, குறைவான கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்' என அறிவுறுத்தியிருக்கிறோம். அதிகமாகப் பணம் வசூல் செய்பவர்கள்மீது ஏதேனும் புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுப்போம்" எனக் கூறினார்.



from India News https://ift.tt/EN6B3fP

Post a Comment

0 Comments