மறைந்த தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி இருந்த போது அவருடைய குடும்பத்துக்கும் முரசொலி மாறனின் மகன்களான கலாநிதி, தயாநிதி மாறன்களின் குடும்பத்துக்கும் இடையில் பிரச்னை எழுந்தது எல்லாருக்கும் தெரிந்ததே. பின்னர் உறவுகள் சிலரின் தலையீட்டால் அந்தப் பிரச்னை சரியாகி, மாறன் சகோதரர்கள் கலைஞரைச் சந்தித்த போது, கலைஞர் கூறிய வார்த்தைகள் ‘கண்கள் பனித்தது, இதயம் இனித்தது’.
இப்போது அதேபோன்றதொரு காட்சி அடுத்த மாதம், அதாவது ஜூலையில் கலைஞர் குடும்பத்தில் நடக்கலாம் என்கிறார்கள். அன்று இதயம் இனிக்கச் செய்தது தாத்தா - பேரன் உறவு என்றால் இப்போது அண்ணன் - தம்பி உறவு.
விஷயத்தைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா?
கருணாநிதி இருந்த போது என்னதான் அவருடன் பிரச்னை என்றாலும் மதுரையிலிருந்த படி கட்சி வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பார் அவரது மூத்த மகன் மு.க.அழகிரி. கருணாநிதி மறைவுக்குப் பிறகு கட்சியில் தனக்கு முக்கியத்துவம் இல்லையெனக் கருதினாரோ என்னவோ, தன்னுடைய தம்பி முதலமைச்சராவதற்குப் பச்சைக்கொடி காட்டவில்லை அவர். எனவே அண்ணன் தம்பி இடையே உறவுச் சிக்கல் எழ, அண்ணனுடன் பேசுவதையே நிறுத்திய ஸ்டாலின், கட்சியிலிருந்தும் அவரை ஒதுக்கி வைத்து, மதுரை தி.மு.க-வையும் முழுக்க முழுக்க தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
இதனால் மேலும் கடுப்பான அழகிரி, ‘தி.மு.க ஜெயிக்காது’ என்று பேட்டி கொடுக்குமளவுக்குப் போனார். அதைக் கண்டு கொள்ளாதவராய் ஸ்டாலின் தன் வேலையைக் கவனிக்க, 2021 தேர்தலில் தி.மு.க தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றியடைய, கொஞ்சம் சைலன்ட் ஆனார் அழகிரி.
இருந்தாலும் அழகிரி பேசிய சில பேச்சுக்கள் ஸ்டாலினைக் காயப்படுத்தியிருந்ததோ என்னவோ, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அண்ணனை நேரில் சந்திப்பதைத் தவிர்த்தே வந்தார். குடும்ப நிகழ்ச்சிகள் என்றாலும், அழகிரி இல்லாத நேரமாகத் தன்னுடைய விசிட் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். உதயநிதி ஸ்டாலின் மட்டும் மதுரை சென்ற ஒரு நாளில், அழகிரியின் வீட்டுக்குச் சென்று பெரியப்பாவிடம் ஆசி வாங்கிவிட்டு வந்தார். ஆக, இன்றைய தேதிக்கு அழகிரி தி.மு.க-வில் இருக்கிறாரா இல்லையா என்பதில் மதுரை தி.மு.க-வினருக்கே குழப்பம்தான்.
இந்தப் பின்னணியில் முதல்வராகப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், முதன் முதலாகச் சில தினங்களுக்கு முன் அழகிரியிடம் முதல்வர் ஸ்டாலின் போனில் பேசியதாக நம்மிடம் ஒரு நம்பகமான சோர்ஸ் தெரிவித்துள்ளது.
‘இப்ப அழகிரி குடும்பத்துடன் அமெரிக்காவுல இருக்கிற மகள் வீட்டுல இருக்கார். சம்மருக்கு இருந்துட்டு வரலாம்னு அங்க போயிருக்காங்க. இந்நிலையில் வருகிற ஜூன் 20-ம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறக்கப்படற நிகழ்ச்சியில கலந்துக்க வரச் சொல்லித்தான் அண்ணன் அழகிரியை முதல்வர் அழைத்திருக்கிறார்.
கலைஞர் கோட்டம் தயாளு அம்மாள் அறக்கட்டளை மூலம் திறக்கப்படுது. கோட்டத்தின் உள்ளேயே கலைஞருக்குச் சிலையும் நிறுவப்பட்டிருக்கு. முத்துவேலர் நூலகம் ஒண்ணும் திறக்கறாங்க. இந்த நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துக்குறாங்க.
’எங்கிருந்தோல்லாம் தலைவர்களைக் கூப்பிடுறப்ப, அண்ணனுக்கும் ஒரு வார்த்தை சொல்லலாமே’ன்னு உறவுகளில் சிலர் ஸ்டாலினிடம் சொல்லவே, அமெரிக்காவுல இருக்கிற அண்ணனுக்குப் போனைப் போட்டிருக்கிறார் ஸ்டாலின்.
நீண்ட நாள்கள் கழித்தான உரையாடல் என்பதால் ரொம்பவே நெகிழ்ச்சியா இருந்ததாம் அந்தப் பேச்சு. ’நல்லா இருக்கீங்களாண்ணே’ என நலம் விசாரித்தவர், நிகழ்ச்சி குறித்துச் சொல்லியிருக்கிறார். ‘நல்லா நடத்துங்க, என்னுடைய வாழ்த்துகள்’ என அழகிரி வாயிலிருந்து வர, ‘அப்படின்னா அங்கேயே இருந்துடப் போறீங்களாண்ணே’ என்றாராம் முதல்வர்.
’இல்ல, இப்ப திடீர்னு எப்படிக் கிளம்பறது? ஏற்கெனவே திட்டமிட்ட படி ஜூலை 8ம் தேதிதான் சென்னை திரும்பறேன்’ என்றாராம் அழகிரி.
முன்னதாக, ஜூலை 9ம் தேதி முரசொலி செல்வம் செல்வி தம்பதியின் வீட்டில் ஒரு விசேஷம் என்றும் அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் - அழகிரி இருவரையும் சந்திக்க வைக்கச் சிலர் முயற்சி செய்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே, முதல்வரிடம் அண்ணனையும் சிலை திறப்பு விழாவுக்கு அழைக்கச் சொல்லியிருக்காங்கன்னும் தெரியுது.
எப்படியோ, ஜூலை 9 நிகழ்ச்சியில் அழகிரி கலந்து கொள்வது உறுதியாகிய நிலையில், அதற்கு முன்பாக ஸ்டாலினும் அண்ணனுடன் பேசிவிட்டதால் அன்றைய தினம் இருவரும் பல வருடங்களுக்குப் பின் நேரில் சந்திப்பது நடக்கும்னு குடும்பத்துல பெரிய எதிர்பார்ப்பு இருக்கு" என்கிறது அந்த சோர்ஸ்.
செந்தில் பாலாஜி கைது, குடைச்சல் கொடுக்கும் ஆளுநர் எனத் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் ஒரு சூழலில் அதிரடிக்குப் பெயர் போன அழகிரி, ஸ்டாலினுடன் கைகோப்பதை தி.மு.க தொண்டர்களுமே விரும்புவார்கள் என்றே தெரிகிறது.
நடக்கிறதா பார்ப்போம்!
from India News https://ift.tt/ozO6UkR
0 Comments