இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமரும், ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான போரிஸ் ஜான்சன், `பார்ட்டிகேட்' விவகாரம் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார்.
பார்ட்டிகேட் விவகாரம் என்பது, இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோது அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய பிறந்தநாளன்று, டவுனிங் ஸ்ட்ரீட்டில் தனது அதிகாரபூர்வ இல்லத்தில் கேளிக்கைகளுடன் பார்ட்டி கொண்டாடியது குறித்தது.
இந்த பார்ட்டியில், தற்போதைய பிரதமரும் அப்போதைய நிதியமைச்சருமான ரிஷி சுனக் உட்பட அரசு அதிகாரிகள், அவருடைய கட்சியினர் எனப் பலரும் கலந்துகொண்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டிருக்கும் சமயத்தில் பிரதமரே இவ்வாறு செயல்படலாமா... என்று அப்போதே இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக வெடிக்க, பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. போரிஸ் ஜான்சனுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து விசாரிக்க, விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், தன்னுடைய செயலுக்காக வருந்துவதாக போரிஸ் ஜான்சன் மன்னிப்பும் கேட்டார்.
இந்த நிலையில் பார்ட்டிகேட் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் வெளியான அறிக்கையில், போரிஸ் ஜான்சன் பொறுப்பற்ற முறையில் நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், 10 நாள்கள் வரை அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யவும் விசாரணைக்குழு பரிந்துரைத்தது. இத்தகைய சூழலில்தான் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் நேற்று அறிவித்தார்.
தன்னுடைய ராஜினாமா குறித்து போரிஸ் ஜான்சன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``விசாரணைக்குழுவிடம் எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதைப் பார்த்து நான் மிகவும் திகைத்துப்போனேன். நாடாளுமன்றத்திலிருந்து என்னை வெளியேற்றுவதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். குறைந்த எண்ணிக்கையிலான குறிப்பிட்ட சிலரால் நான் வெளியேற்றப்படுகிறேன். நாடாளுமன்றத்தை நான் தவறாக வழிநடத்தியதாக அவர்கள் கூறுவதில் எந்தவொரு சிறிய ஆதாரம்கூட முன்வைக்கப்படவில்லை. குழுவின் தலைவர் உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதாரங்களைப் பார்ப்பதற்கு முன்பே என் மீதான குற்றத்தைப் பற்றி ஆழமான, பாரபட்சமான கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர். நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறுவது மிகவும் வருத்தமளிக்கிறது. இருந்தாலும் உடனடியாகப் பதவி விலகி, இடைத்தேர்தலைச் சந்திக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
from India News https://ift.tt/SbUWdQR
0 Comments