தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை அரசு உயர்த்தப்போகிறது என்ற தகவல்கள் கடந்த சில தினங்களாக இணையத்தில் வலம்வந்த நிலையில், வீட்டு இணைப்புகளுக்கு மின்கட்டண உயர்வில்லை என்றும் வணிக நிறுவனங்களின் மின் இணைப்புகளுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. அறிக்கையின்படி, “கடந்த கால ஆட்சியின் திறனற்ற மேலாண்மையால் தமிழ்நாடு மின் வாரியத்தின் நிதிநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் உத்தரவுப்படி எரிபொருள் மற்றும் மின்சார கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. அதனை ஈடுசெய்யக் கூடுதல் மின் கட்டணம் வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ்நாடு மின்சார வாரியத்தால் கடந்த ஆண்டு மின் உபயோக கட்டணம், உச்சபட்ச நேர மின் பயன்பாட்டுக் கட்டணம், நிலைக்கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் வணிக நிறுவனங்களுக்கான மின் உபயோக கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது வணிகர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே ஊழியர்களுக்கான ஊதியம், இட வாடகை பன்மடங்கு உயர்ந்துள்ளது. தற்போதைய மின்கட்டண உயர்வும் சேர்ந்துவந்தால் தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை இது பெரிதும் பாதிக்கும்” என்கிறார்கள் தொழில் முனைவோர்கள் சிலர்
திருச்சியில் நேற்று மின்கட்டண உயர்வு பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "வீட்டு மின் இணைப்பைப் பொறுத்தவரைக்கும் எந்தக் கட்டணமும் உயர்த்தவில்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும். வணிகம் மட்டும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும், 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்வு இருக்கும். மற்ற மாநிலங்கள் இதைவிட அதிகம். அதிமுக ஆட்சியில் செங்குத்தாக மின் இணைப்பு கட்டணம் உயர்த்தப்பட்டன" என்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா இது தொடர்பாக கூறியதாவது, “ஏழு மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன் மீண்டும் மின் கட்டண உயர்வு என்பது ஏற்புடையதல்ல. ஏற்கனவே நொடிந்து போய் உள்ள வணிகர்கள், தொழில் முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் உற்பத்தி பாதிப்பு பொருள்கள் மீதான விலைவாசி உயர்வு என ஒவ்வொரு கட்டத்திலும் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் இருப்பதை அறிந்து தமிழக அரசு பரிசீலித்து தற்போது அறிவித்துள்ள வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை முழுமையாக நீக்கி அறிவித்திட அனைத்து உற்பத்தியாளர்கள் தொழில் முனைவோர் மற்றும் வணிகர்கள் சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மிகுந்த அழுத்தத்துடன் வலியுறுத்துகின்றது” என்கிறார்.
இந்த மின்கட்டண உயர்வு வீட்டு இணைப்புகளுக்கு கிடையாது, அதனால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என முதல்வர் தொடங்கி ஆளும் தரப்பில் அனைவரும் விளக்கமளிக்கிறார்கள். ஆனால், நேரடியாக மக்கள் பாதிக்கப்படவிட்டாலும் விலைவாசி உயர்வு என மறைமுகமாக இது பொதுமக்களைப் பாதிக்கும் என்பது மட்டும் தெளிவாகிறது.!
from India News https://ift.tt/snfcgT2
0 Comments