மத்தியில் தனது ஆட்சிக்காலத்தின் ஒன்பது ஆண்டுகளை முடித்துவிட்டு பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பா.ஜ.க, கடந்த ஒன்பது ஆண்டுகளில் செயல்பட்டதை விடவும், தற்போது பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட, பொது சிவில் சட்டம் கொண்டுவருவது பற்றி பொது மக்களும், மத அமைப்புகளும் கருத்து தெரிவிக்கலாம் என 22-வது சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது.
அதோடு, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு நாடு திரும்பிய கையோடு பிரதமர் மோடி, பொது சிவில் சட்டத்தின் பேரில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுவதாகவும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதன் காரணமாக, `மணிப்பூர் கலவரம் பற்றி இதுவரை வாய் திறக்காத மோடி, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்துகிறார்' என எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி-யுமான கபில் சிபல், ஒன்பது ஆண்டுகளாக இல்லாமல் இப்போது எதற்கு பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர மோடி இவ்வளவு அழுத்தம் கொடுக்கிறார் எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார். இது குறித்து கபில் சிபல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``பொது சிவில் சட்டத்தைப் கொண்டுவர பிரதமர் மோடி வலியுறுத்துகிறார். கூடவே, எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டுகிறார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக இல்லாமல், 2024 லோக் சபா தேர்தலுக்கு முன் எதற்கு இந்த அழுத்தம்... இந்துக்கள், பழங்குடியினர், வடகிழக்கு பகுதியினர் உட்பட அனைவரையும் பொது சிவில் சட்டம் எவ்வாறு உள்ளடக்கும்... எல்லா நாளும் உங்கள் கட்சி (பா.ஜ.க) இஸ்லாமியர்களை குறிவைக்கையில் இப்போது மட்டும் என்ன திடீர் கவலை" என மோடிக்கு அடுக்கடுக்காக கேள்வியெழுப்பியிருக்கிறார்.
from India News https://ift.tt/aPeRixV
0 Comments