சேலம், கருப்பூர் பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று (28.06.20230 பெரியார் பல்கலைக்கழக உள் அரங்கில் நடைப்பெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விழா மேடைக்கு வருகை புரிந்தவுடன் முதலில் தேசிய கீதம் பாடப்பட்டு, அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. எப்போதும் கவர்னர் நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில், முதலில் தமிழ்தாய் வாழ்த்துப் பாடிவிட்டு, அதன் பிறகு நிகழ்ச்சியின் இறுதியில் தேசியகீதம் பாடப்படுவது வழக்கம்.
ஆனால் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலில் தேசியகீதம் பாடப்பட்டது, அங்கிருந்தவர்களை முணுமுணுக்க வைத்தது. அதேபோன்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருவதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் வரவில்லை. மேலும் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் ஆகியோர் விழாவுக்கு வருகை தந்திருந்தனர். ஆனால், அவர்கள் விழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே இடையில் அரங்கைவிட்டு வெளியேறினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருளிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் முதலில் என்னுடைய சட்டமன்ற தொகுதிக்குள் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாது 234 சட்டமன்ற உறுப்பினர்களாலும் நான் பெரியார் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு மரியாதை நிமித்தமாகக்கூட எனக்கு அழைப்பு விடுக்கவில்லை.
நானும், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவமும் நேற்றுகூட எங்களது தொகுதி பிரச்னை குறித்த மனுவினை ஆளுநரிடம் வழங்கத்தான் சென்றிருந்தோம். ஆனால் ஆளுநர் நாங்கள் மனுவை நீட்டும்போது, அவர் வாங்காமல், தன்னை விருந்தினர் மாளிகைக்கு வந்து பார்க்கச் சொல்லுமாறு அதிகாரிகளிடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்" என்றார்.
from India News https://ift.tt/ZdfRlyF
0 Comments