முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நேற்றைய தினம் விழுப்புரம் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கனிம வளத்துறையின் மூலமாக இயங்கிக்கொண்டிருக்கின்ற கல்குவாரிகள், கிரஷர்கள் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தத் தொழில் தற்போது முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. தமிழக அரசுக்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித் தருகின்ற துறை மட்டுமல்லாமல், தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்யக்கூடிய துறை அது.
அந்தத் துறையை நம்பிதான் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இன்றைக்கு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அரசாங்கமே அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்க முடியாது. அதுவும், தி.மு.க அரசு பொறுப்பேற்ற இந்த இரண்டாண்டுக்காலத்தில், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. காலியிடங்களும் நிரப்பப்படவில்லை. மாறாக லட்சக்கணக்கான பணியிடங்கள் இந்த அரசால் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன. இந்தக் கனிம வளத்துறையைப் பல்வேறு துறைகள் நம்பியிருக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 270 கல்குவாரிகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதை நம்பி, ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், இந்தத் தொழில் இரண்டு நாள்களாக முடங்கியிருக்கிறது.
சட்டவிரோதக் கல்குவாரிகளும், வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகின்ற கனிம வளங்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்து தினந்தோறும் சுமார் 15,000 லோடு கனிம வளங்கள், முறையற்ற, அனுமதி இல்லாமல், அரசு மற்றும் அதிகாரிகளுக்குத் தெரிந்தே கடத்தப்படுகிறது. அது முறைப்படுத்தப்பட்டு, அந்த வருவாய் அரசுக்கு வர வேண்டும். ஆனால், இந்த அரசு அதைத் தடுப்பதற்கு பதிலாக, கனிமவள குவாரிகளை நடத்திக்கொண்டிருக்கின்ற சிறிய, நடுத்தர தொழிலதிபர்களை மிரட்டுகிறது, அச்சுறுத்துகிறது.
கடந்த இரண்டாண்டுக்கால மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பல்வேறு தொழில்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்கின்றன, இங்கே வருவதற்கு அச்சப்படுகிறார்கள். அதே வேளையில், பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே வந்து தொழில் செய்வதற்குப் பல்வேறு சலுகைகளைத் தருகிறது இந்த அரசு. ஆனால், இங்குள்ள சிறு, குறு, நடுத்தர கல்குவாரி நடத்துபவர்கள் அரசிடம் எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்கவில்லை. சட்டத்துக்கு உட்பட்டு அமைதியான முறையில், எளிமையாகத் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதே அவர்களுடைய கோரிக்கை. ஆனால், ஏதோ ஓர் உள்நோக்கத்துக்காக, ஆதாயத்துக்காக இந்தக் கல்குவாரிகளை இன்றைக்கு இந்த அரசு பழிவாங்குகிறது. சட்டவிதிகளைப் பின்பற்றாமல், ஆய்வுசெய்யாமல், வாய் வழியாகவே, `நீங்கள் முறைகேடாகத் தொழில் செய்கிறீர்கள். உங்கள் குவாரி இழுத்து மூடப்படுகிறது' என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட சிலரை இந்த அரசு தொழில் செய்யவிடாமல் முடக்கிக்கொண்டுவருகிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள், துறை அதிகாரியைச் சென்று பார்த்தால், "நீங்கள் இன்னாரைப் பாருங்கள்" என்று சொல்லி அனுப்புகிறார்கள். `இன்னார் என்பது யார்?' இது அரசுக்கும், முதலமைச்சருக்கும் தெரியுமா... தெரிந்து நடக்கிறதா, இல்லை தெரியாமல் நடக்கிறதா... தெரியாமல் நடந்திருந்தால் இப்போது நாங்கள் சொல்கிறோம். நீங்கள் விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள். இந்தத் துறையின் இயக்குநர் நிர்மல்ராஜ், முதலமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உறுதியளித்திருக்கிறார். `நான் ஓராண்டுக்கு இவ்வளவு தொகையை இதிலே வசூலித்துக்கொடுக்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.
அதன்படி சட்டவிரோதமாக இந்தத் தொழிலை செய்துகொண்டிருக்கிற கல்குவாரிகளை ஆய்வு என்ற பெயரில் அனைத்தையும் மூடி உத்தரவிட்டுக்கொண்டுவருகிறார். குவாரி மூடப்பட்டதும் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது. உடனே அவர்கள் சொல்வதுபோல், இன்னாரைச் சந்தித்து செய்ய வேண்டிய முறைகளையெல்லாம் செய்த பிறகு, நூறு மடங்காகப் போடப்பட்ட அபராதம், இரண்டு மடங்காகக் குறைக்கப்படுகிறது. இதே இயக்குநரே அப்படிக் குறைத்திருக்கிறார்.
`இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்' என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார், வரவேற்கிறோம். அனுமதியின்றி இயங்கும் குவாரிகள் மீதும், கனிமவளங்களைக் கடத்துபவர்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள். அதே இரும்புக்கரத்தைக்கொண்டு பெரிய பெரிய நிறுவனங்கள் மீதும் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு இந்த குவாரி தொழில் செய்பவர்களில் பாதிப்பேர் திமுக-வைச் சேர்ந்தவர்கள். ஆனால், இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை அவர்கள்மீது பாய்கிறதா... கன்னியாகுமரி, கோயம்புத்தூரிலிருந்து 10,000 வண்டி கனிம வளங்கள் தினந்தோறும் கேரளாவுக்குக் கடத்தப்படுகின்றன. ஏன், இதன்மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது... வெளி மாநிலங்களுக்குக் கனிம வளங்களைக் கடத்திச் செல்லலாம்... ஆனால், தமிழ்நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கான கனிமவளங்களை எடுத்துச் செல்வதற்கு ஏன் இந்த அரசு முட்டுக்கட்டை போடுகிறது... என்ன நோக்கம்... என்ன காரணம்... யாருடைய ஆதாயம்... ஒரு தவறான அதிகாரியின் பேராசை காரணமாக இந்தக் கனிமத் தொழில் நசிந்துகொண்டிருக்கிறது.
அந்த அதிகாரி, துறையின் அமைச்சருக்குத் தெரியாமல் செய்திருப்பார் என சொல்லவதற்கு வாய்ப்பே இல்லை. முதலமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்த சக்திவாய்ந்த ஒருநபர், இந்தத் துறை இயக்குநர் மூலமாகப் பங்கு கேட்கிறார். முதலீடே போடாமல், யாரோ உழைத்ததில் பங்கு கேட்கிறார், இதுதான் நடக்கிறது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் வருமானத்தைக் கெடுக்கும். ஆகவே முதலமைச்சர் மட்டுமல்ல, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், இந்தக் கனிமத் தொழில்முனைவோரைக் காக்கும் கடமை இருக்கிறது" என்றார்.
from India News https://ift.tt/eUYipLW
0 Comments