``அத்வானி ரதத்தை லாலு நிறுத்தியதுபோல, 2024-ல் மோடியின் ரதத்தை நிதிஷ் நிறுத்துவார்!" - தேஜஸ்வி யாதவ்

மத்தியில் ஆளும் பா.ஜ.க-வை 2024 லோக் சபா தேர்தலில் வீழ்த்தவேண்டும் என்று பீகார் முதல்வர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்காக மாபெரும் அளவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மாநாட்டை நடத்தை நிதிஷ் குமார் முன்னமே திட்டமிட்டிருந்தார். அதற்கேற்றவாறே முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களை நிதிஷ் குமார் நேரில் சந்தித்துவந்தார். இடையில் ஒடிசாவில் மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்ட சோகத்தால், ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். அதோடு, மாநாட்டில் கட்சித் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்றும், கட்சியின் சார்பாக பிரதிநிதிகளை அனுப்ப வேண்டாம் என்றும் நிதிஷ் குமார் கூறியிருந்தார்.

நிதிஷ் குமார்

அதன் தொடர்ச்சியாக, பாட்னாவில் மாநாட்டுக்கான மேடை அமைப்பது முதல் அனைத்து வேலைகளும் நடைபெற்றுவருகின்றன. இதில், ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சரத் பவார், உத்தவ் தாக்கரே என 15 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பீகாரின் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தன்னுடைய தந்தை லாலு பிரசாத் யாதவ், அத்வானியின் ரத யாத்திரையை நிறுத்தியதுபோல், 2024-ல் பிரதமர் மோடியின் ரதத்தை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி நிறுத்தும் எனவும் கூறியிருக்கிறார்.

நேற்றைய தினம் மாநில கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் பேசிய தேஜஸ்வி யாதவ், ``இந்துக்கள், முஸ்லிம்கள் அல்லது வேறு எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, அனைவருமே நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியிருக்கிறார்கள். முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்று சில தரப்பிலிருந்து வரும் மூர்க்கத்தனமான கருத்துகளை நாங்கள் கேட்டுக்கொண்டுதான் வருகிறோம்.

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

ஆனால் உறுதியாக இருங்கள், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் இருக்கும் வரை, யாரும் அப்படிப்பட்ட ஒன்றை செய்யத் துணிய முடியாது. இந்த நாடு யாருடைய தந்தை வீட்டுச் சொத்தும் அல்ல. முன்பு அத்வானியின் ரத யாத்திரையை லாலு பிரசாத் யாதவ் தடுத்து நிறுத்தினார். இப்போது, நிதிஷ் குமார் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி மோடி ரதத்தை நிறுத்தும். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாடு நாசமாகிவிடும். ஒரு சர்வாதிகாரி அதிகாரத்தின் மேல் இருப்பது போல தெரிகிறது. மேலும், அந்த நபரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டம் சிதைக்கப்படுகிறதே தவிர பயனுள்ள எதுவும் எட்டப்படவில்லை.

மோடி

இரண்டு கோடி வேலைகள், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம், 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த தோல்வியுற்ற வாக்குறுதிகள் குறித்து நாங்கள் கேள்விகளை எழுப்பும்போதெல்லாம், இந்து - முஸ்லிம், கோயில் - மசூதிகள் என்று பேசி மக்களின் கவனத்தை அவர்கள் திசை திருப்ப முயல்கிறார்கள்" என்றார்.



from India News https://ift.tt/jcAIJCQ

Post a Comment

0 Comments