விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில், தி.மு.க அரசை கண்டித்து, நேற்று (29.05.2023) அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தலைமையேற்று பேசிய அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், "சட்டம் ஒழுங்கு மட்டுமல்ல, சட்டத்தின் ஆட்சியும் இன்றைக்கு தமிழகத்தில் நடைபெறவில்லை. கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்றும், நிர்வாக சீர்கேடுகளுக்கு பொறுப்பேற்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு ஓட வேண்டும். கள்ளச்சாராயம் யாரால் காய்ச்சப்படுகிறது... இன்று தி.மு.க அமைச்சர்களாக இருப்பவர்களின் நேரடி பார்வையிலே, தி.மு.க-வின் முக்கிய பிரமுகர்களின் ஆதரவோடு கள்ளச்சாராய வியாபாரம் தமிழகத்தில் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக ஆளுநரிடம் நேரடியாக கோரிக்கை மனுவும் அளித்துள்ளோம். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த இரண்டாண்டு காலத்திலான மு.க.ஸ்டாலின் அரசு என்ன சாதித்திருக்கிறது, நாட்டு மக்களுக்கு என்ன செய்திருக்கிறது? அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு தன் பகுதியில் உள்ள விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்கவே நேரமில்லை. ஆனால், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்... சாராயம் விற்று கொண்டிருக்கிறார். இதை நாங்கள் சொல்லவில்லை, செல்போனை துறந்தாலே அவர் ஒருவருக்கு கேக் ஊட்டுகின்ற படம்தான் வருகிறது. அவர் யார் என்றால் மரூர் ராஜா. அவரும் ஒரு வகையில் ஜமீன்தார்தான், சாராராய ஜமீன்தார்.
காவல்துறையை தன் கையிலே வைத்துக்கொண்டு அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று தெரியாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின். தமிழக டி.ஜி.பி., முதலமைச்சர் வீட்டிலே எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கிறார். காவல்துறை மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு அடிபணிந்திருக்கிறது. தி.மு.க-வின் தொண்டர்படையாக மாறிவிட்டது. அதனால், தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. நாங்கள் முன்பு சொன்ன போதே இவற்றை தடுத்திருந்தால் இன்றைக்கு மரக்காணம், செங்கல்பட்டு பகுதிகளில் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் நடந்திருக்காது. இன்றைக்கு டாஸ்மாக்குகளுக்கு ஆலைகளில் இருந்தே கலப்படமான மது பாட்டில்கள் வருகிறது. கலப்பட கலர் சாராயமும் வருகிறது. இதனால் அரசுக்கு அதிக வரி இழப்பு ஏற்படுகிறது. அந்த காசு முழுவதும் துறை மந்திரி செந்தில் பாலாஜிக்கு தான் போகிறது. அவரிடமிருந்து ஸ்டாலின் குடும்பத்திற்கு செல்கிறது. மு.க.ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது, அவர் ஒரு பொம்மை.
விழுப்புரத்தில் 220 'பார்'கள் இருக்கிறது. அதில் ஒன்றுக்கு கூட அனுமதியில்லை. ஏன் இது போலீஸ், கலெக்டருக்கு தெரியாதா? கடந்த இரண்டு ஆண்டுகளாக அதில் வந்த பணமெல்லாம் எங்கே போனது? தமிழ்நாடு அளவில் இந்த போலி மது விற்பனையில் மட்டும், இந்த தி.மு.க அரசு கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்து வரி இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தி.மு.க-வும், தி.மு.க-வை சார்ந்தவர்களும், தி.மு.க-வின் முதல் குடும்பமும்தான் பயன் அடைந்திருக்கிறது. இது விசாரிக்கப்பட வேண்டும். இந்த அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த சாராய அரசு, ஊழல் அரசு அகற்றப்பட வேண்டும். பி.டி.ஆர் ஆடியோ உண்மை, அதனால்தான் அவர் மீது நீங்கள் வழக்கு போடவில்லை.
அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்கிறார்... "எடப்பாடி அவர்களே இனி நீங்கள் நிம்மதியாக தூங்க முடியாது" என்று. முதலில் நீங்கள் உங்கள் தலைவரை நிம்மதியாக தூங்க விடுங்கள். இதை நான் சொல்லவில்லை, உங்கள் தலைவர் ஸ்டாலினே சொல்கிறார். உங்கள் தலைவன் யாரு... அதில் அவர்களுக்கே குழப்பம். தலைவன், உதயநிதியா... துர்காவா... சபரீசனா... என்று. மு.க.ஸ்டாலினை தான் பொம்மை போல வைத்து விட்டார்களே. அதிகாரமற்ற பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்றைய ஆட்சியில், அரசு அதிகாரிகள் உட்பட யாருக்குமே பாதுகாப்பு இல்லை. மந்திரி எல்லாம் சாராயம் விற்றால் இந்த ஆட்சி எப்படி இருக்கும்... அப்படித்தான் இருக்கும். இன்றிருப்பது ஒரு சாராய அமைச்சரவை, கஞ்சா அமைச்சரவை, கொள்ளையர்கள் அமைச்சரவை" என்றார் காட்டமாக. (வீடியோ கீழே உள்ள லிங்க்கில்)
from India News https://ift.tt/lxKDkBG
0 Comments