``கலங்கி நிற்பவர்களின் முகத்தை மார்பிங் செய்கிறார்களே..." - வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வேதனை!

மல்யுத்தப் பயிற்சி முகாமில் பயிற்சி பெறும் வீராங்கனைகள் அங்குள்ள பயிற்சியாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மேலும், முன்னாள் மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங், 10-க்கும் மேற்பட்ட பெண் வீராங்கனைகளைப் பாலியல்ரீதியில் துன்புறுத்தியிருப்பதாக உலக சாம்பின்ஷிப் பதக்கம் வென்ற விக்னேஷ் போகத், சரிதா, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் உட்பட சுமார் 30 வீரர், வீராங்கனைகள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

கைதுசெய்யப்படும் வீராங்கனைகள்

மேலும், `இதற்கு நீதி வேண்டும்' எனக் கூறி கடந்த ஜனவரி முதல் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வாக்குறுதியளித்தது. அதை நம்பிய விளையாட்டு வீரர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால், நீண்ட நாள்களாகியும் விளையாட்டுத்துறை அமைச்சகம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அதை பதிவுசெய்யாமல் நாள்கள் கடத்தப்பட்டதாக வீரர்கள் குற்றம்சாட்டினர். அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தையும் அணுகினர். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக டெல்லி காவல்துறை புகாரைப் பதிவுசெய்தது. ஆனால், இப்போதுவரை அவரைக் கைதுசெய்யவில்லை. விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், தாங்கள் அளித்திருக்கும் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றக் கோரிக்கையுடன் நேற்று, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா நடக்கும் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தைத் தொடங்கினர்.

கைதுசெய்யப்படும் வீராங்கனைகள்

உடனே போராட்ட இடத்துக்கு விரைந்த டெல்லி காவல்துறை அதிகாரிகளால், குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றப்பட்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அவர்கள்மீது ஐ.பி.சி பிரிவு 147, 149, 186, 188, 332, 353, PDPP சட்டத்தின் பிரிவு மூன்று ஆகியவற்றின் கீழ் டெல்லி காவல்துறை வழக்கு பதிவுசெய்திருக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். மேலும், ``தங்கள் எம்.பி-யைக் காப்பாற்ற பா.ஜ.க எந்த எல்லைக்கும் செல்லும்" என்றும் விமர்சித்துவருகின்றனர்.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட வீராங்கனைகள் விரக்தியுடன் வேனில் அமர்ந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி வைரலானது. ஆனால், அந்த செல்ஃபியை மார்பிங் செய்து அவர்கள் சிரித்துக்கொண்டிருப்பது போன்று எடிட் செய்து அந்தப் படத்தையும் சேர்த்து வைரலாக்கினர். இது தொடர்பாகப் பேசிய மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக், "பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்கு பதிவுசெய்ய ஏழு நாள்கள் எடுத்துக்கொண்ட டெல்லி காவல்துறை, அமைதியாகப் போராட்டம் நடத்திய எங்கள்மீது வழக்கு பதிவுசெய்ய ஏழு மணி நேரத்தைக்கூட எடுத்துக்கொள்ளவில்லை.

வீராங்கனைகள்

நாட்டில் சர்வாதிகாரம் ஓங்குகிறதா... அரசு, விளையாட்டு வீரர்களை எப்படி நடத்துகிறது என்பதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் சிரித்துக்கொண்டிருப்பதுபோல எங்கள் புகைப்படத்தை மார்பிங் செய்திருக்கிறார்கள். இதைச் செய்பவர்களுக்கு வெட்கமே இல்லை. கடவுள் எப்படி இப்படிப்பட்டவர்களை உருவாக்குகிறார்... கலங்கி நிற்பவர்களின் முகத்தை மார்பிங் செய்கிறார்களே... அவர்களுக்கு இதயம் இருப்பதாகக்கூட நான் நினைக்கவில்லை. எங்களை இழிவுபடுத்த முயல்கிறார்கள்" என வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.



from India News https://ift.tt/bpMLc0e

Post a Comment

0 Comments