உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த தொழிலதிபர் பியூஸ் ஜெயின். பெர்ஃப்யூம் எனப்படும் வாசனை திரவியங்கள் மற்றும் பான் மசாலாக்களை தயாரித்து வருகிறார். உத்தரப்பிரதேசத்தின் கன்னுஜ் என்ற இடத்தை சொந்த ஊராக கொண்ட ஜெயின் கான்பூரில் தொழில் தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த மாதம் `சமாஜ்வாடி அத்தர்’ என்ற பெயரில் புதிதாக வாசனை திரவியம் ஒன்றை அறிமுகம் செய்ததில் இருந்து ஜெயினுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்தது.
கடந்த 23-ம் தேதி வருமான வரித்துறை, ஜி.எஸ்.டி, வரி மற்றும் நேரடி வரி விதிப்புத்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் ஜெயினுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். இரண்டு நாள்களுக்கும் மேல் நடந்த இச்சோதனையில் ஜெயின் வீட்டில் இருந்து 250 கோடிக்கும் அதிகமாக ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மெஷின் மூலம் எண்ணுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனையின் போது ஜெயின், தனது குடும்பத்தோடு டெல்லிக்கு சென்று இருந்தார். அவரின் இரண்டு மகன்கள் மட்டுமே கான்பூரில் இருந்தனர். பல முறை போன் செய்த பிறகே ஜெயின் கான்பூர் வந்தார். அவரின் வீடு முழுக்க பணத்தை பேப்பரில் கட்டி வைத்திருந்தார். அதோடு நாடு முழுவதும் குறிப்பாக மும்பை, கான்பூர், கன்னுஜ், டெல்லி, துபாய் போன்ற இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்திருந்தார்.
கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரின் பூர்வீக வீடான கன்னுஜ் நகர வீட்டில் 18 லாக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 500 சாவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சாவிகளைக்கொண்டு லாக்கர்களை திறக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஜெயினிடம் 50 மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவரிடம், `இந்த அளவுக்கு என்ன காரணத்திற்காக பணத்தை பதுக்கி வைத்திருந்தார்?’ என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஜெயின் இந்த அளவுக்கு எப்படி பணம் சம்பாதித்தார் என்பது குறித்து விசாரித்ததில் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. ஜெயின் தனது தந்தையிடமிருந்து பெர்ஃப்யூம், உணவுப்பொருள்களில் சேர்க்க பயன்படும் ரசாயானங்களை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கற்றுக்கொண்டு, கான்பூரில் அத்தொழிலை தொடங்கினார். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா முழுக்க தனது தொழிலை விரிவுபடுத்தினார்.
குறிப்பாக மும்பை, குஜராத்தில் பெரிய அளவில் விரிவுபடுத்தினார். உலகம் முழுக்க பெர்ஃப்யூம்களை ஏற்றுமதி செய்து வந்தார். இதற்காக மும்பையில் அலுவலகம் தொடங்கி அங்கிருந்து நாடு முழுவதும் சப்ளை செய்து வந்தார். பெர்ஃப்யூம் மட்டுமல்லாது பான் மசாலா தயாரிப்பிலும் ஈடுபட ஆரம்பித்தார். அவர் தொடங்கிய சிகர் பிராண்ட் பான் மசாலாக்கள் பெரிய அளவில் வருமானத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. ஒவ்வொரு நாளும் நாடு முழுவது லாரிகளில் பான் மசாலா, புகையிலை பொருட்கள், பெர்ஃப்யூம் போன்றவற்றை அனுப்பி வைப்பது வழக்கம். நாடு முழுவதும் லாரிகளில் சரக்கு அனுப்பும் போது அதன் மதிப்பு ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதற்கு இ-வே பாஸ் தேவை. அதனால் லாரியில் இருக்கும் பொருள்களின் மதிப்பை 50 ஆயிரத்திற்கும் குறைவாக மதிப்பிட்டு இன்வாய்ஸ் தயாரித்து அனுப்புவதை ஜெயின் வழக்கமாக கொண்டிருந்தார்.
இதற்காக லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் தானும் ஒரு பங்குதாரராக சேர்ந்து கொண்டார். இதன் மூலம் அரசுக்கு ஜி.எஸ்.டி.வரி செலுத்துவதில் இருந்து தப்பித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்தார். அவ்வாறு சம்பாதித்த பணத்தை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் தனது சொந்த ஊரில் ஜெயின் எப்போதும் தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே காட்டிக்கொண்டதாக கன்னுஜ் நகர மக்கள் தெரிவித்தனர்.
ஜெயின் எப்போது கன்னுஜ் வந்தாலும் அவர் தனது வீட்டில் இருக்கும் பழைய ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டுதான் எங்கும் செல்வது வழக்கம் என்று அவரின் பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிவித்தனர். ஆனால் அவரின் வீட்டில் இருந்து ரூ.250 கோடிக்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை கேள்விப்பட்டு அவரின் சொந்த கிராம மக்கள் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்ந்துள்ளனர். இந்த பணம் பறிமுதல் விவகாரத்தை பா.ஜ.க தனக்கு சாதகமாக்கிக்கொள்ள முயன்று வருகிறது. பியூஸ் ஜெயினை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நண்பர் என்றும் பாஜக கூறி வருகிறது. ஆனால் அக்குற்றச்சாட்டை சமாஜ்வாடி கட்சி அடியோடு மறுத்துள்ளது.
from தேசிய செய்திகள்
0 Comments