ஒரத்தநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் குறித்து விமர்சனம் செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வைத்திலிங்கம் தஞ்சாவூரில் பதிரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, ``முன்னாள் முதல்வர் இ.பி.எஸ், நான் ஒரத்தநாடு தொகுதிக்கு எதையும் கேட்வில்லை, யாருக்கும் எந்த உதவியும் செய்யவில்லை என்றுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலிலதாவிடம் கேட்டு, ஒரத்தநாட்டில் மூன்றாவது கால்நடை மருத்துவக் கல்லுாரியை கொண்டு வந்தேன்.
வேளாண்மை கல்லுாரி, ஐ.டி.ஐ., பேராவூரணியில் கலைக் கல்லுாரி, செங்கிப்பட்டியில் பொறியியல் கல்லுாரி உள்ளிட்டவற்றையும் கொண்டு வந்தேன். தஞ்சாவூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வந்தேன். அதன் மூலம் இன்றைக்கு தஞ்சாவூர் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. வேலைவாய்ப்பின் மூலம் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் என்னால் வேலை பெற்றுள்ளனர். இதே எடப்பாடி பழனிசாமி 2021ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில், வைத்திலிங்கம் திறமையானவர். இந்த தொகுதிக்கு நிறைய செய்தவர் என்றார்.
அன்றைக்கு நல்ல வாய், இன்றைக்கு நாற வாய் வைத்து பேசியிருக்கிறார். என்ன பேசுகிறோம் என தெரியாமல், விரகத்தியின் விளிம்பில், தான் முதல்வராக இருந்தோமே என்ற எண்ணம் இல்லாமல், தான் வகித்த பதவிக்கு மரியாதை இல்லாத அளவிற்கு பேசியிருக்கிறார். நான் எதையும் கேட்வில்லையாம். தஞ்சாவூருக்கு சட்டக்கல்லுாரி வேண்டும், மாவட்ட நீதிமன்றம் இடம் பெயர்ந்து விட்டது. அது காலியாக உள்ளது என்றேன். அப்போது, நீங்கள் ஜெயலிலதாவிடம் எல்லாவற்றையும் கேட்டு பெற்று விட்டீர்கள் சட்டக்கல்லுாரி அமைக்க ரூ.150 கோடிக்கு மேல் செலவாகும் என்று சொன்னவர் தற்போது தவறான தகவலை பேசியுள்ளார்.
ஆயிரம் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. துரோகிகளான ஓ.பி.எஸ், தினகரன் இருவரும் இணைந்து விட்டார்கள் என கூறியுள்ளார். இதே எடப்பாடி பழனிசாமி தான் ஆர்.கே.நகர் தொகுதி பிரசாரத்தில் தினகரனை போல் வல்லவர் இல்லை. அரசியல் வித்தகர் இல்லை என்றார். இப்படி முன்னுக்கு பின் முரணாகவும், தனக்கு ஆதாயம் என்றால் வாழ்த்தியும் பேசுகிறார். ஓ.பி.எஸ்., தினகரன் சந்தித்து விட்டதால், தனக்கு அரசியலில் வாழ்வு கிடையாது என்பதால், என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசி வருகிறார்.
நான், சண்டிக்குதிரை எதற்கும் பயன்படாது என்றேன். இ.பி.எஸ், சண்டிக்குதிரை இல்லை, பந்தயக்குதிரை என ஆர்.காமராஜ் கூறியுள்ளார். எட்டு தேர்தலில் தோல்வி அடைந்தவரை பந்தயக்குதிரை என பேசும் ஆர்.காமராஜூக்கு அறிவு உள்ளதா?. அ.தி.மு.க.,வை அழித்துக்கொண்டு இருக்கிற எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.,வை விட்டு செல்ல வேண்டும். அவரை தவிரித்து விட்டு, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான் எங்களின் எண்ணம்.
துரைக்கண்ணு சிலை திறப்பதை நான் தடுத்தேன் என பொய் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன ரகசியத்தை வெளியில் கூறினால், அசிங்கமாகி விடும். சந்தர்ப்ப சூழ்நிலையால் சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். தமிழகம் பல முதல்வர்களை கண்டுள்ளது. அவர்கள் எல்லாம் மிகவும் மரியாதையாக இருந்தனர். ஆனால், முதல்வர் என்ற தகுதி இல்லாத ஒரு நபர் இருந்தார் என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான். அவர் நம்பிக்கை துரோகி. பொதுக்கூட்டத்திற்கு 15 ஆயிரம் பேர் வந்ததாக பொய் சொல்கின்றனர். மக்களின் ஆதரவும், பேச்சு திறமையும் இல்லாதவர், திராவிட இயக்க வரலாறு தெரியாதவர்.
எடப்பாடி பழனிசாமி எத்தனை முறை ரகசியமாக சபரீசனுக்கு போன் செய்துள்ளார் என்பது அவரின் மனசாட்சிக்கு தெரியும். நாங்கள் உங்களை விட அனைத்திலும் தகுதியானவர்கள். எந்த நேரத்தில் நீருபிக்க முடியுமோ அப்போது நீருபிப்போம். ஜெயலலிதாவின் மரணத்தில், நீதி விசாரணை வேண்டும் என மக்களின் கோரிக்கையை ஏற்று ஆணையம் அமைப்பதாக கூறினார். அப்போது வேண்டாம் என கூற வேண்டியது தானே. தினகரன் 18 எம்.எல்.ஏக்களுடன் சென்று விட்டார். ஓ.பி.எஸ்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை நான், தங்கமணி, வேலுமணியும் பலமுறை சென்றோம். நாங்கள் ஓ.பி.எஸ்ஸையும், இ.பி.எஸ்ஸையும் இணைக்கவிட்டால் ஆட்சி கவிழ்ந்திருக்கும்.
நன்றி இல்லாத மனிதர் என்றால், எடப்பாடி பழனிசாமி தான். எங்களை செத்த பாம்பு என்கிறார். நாங்கள் நசுக்கிக் கொன்ற பாம்பு அவர். நீதிமன்ற தீர்ப்பு வரட்டும். இரட்டை இலை சின்னம் இல்லாமல், எடப்பாடி பழனிசாமி தேர்தலை சந்தித்து, எங்களை விட ஒரு ஓட்டு அதிமாக வாங்கி விட்டால், நாங்கள் அரசியல் செய்யவில்லை” என்றார்.
from India News https://ift.tt/2dFizZ7
0 Comments