மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, `கர்நாடகாவில் இருக்கும் பா.ஜ.க அரசு சமூகவிரோத சக்திகளிடமிருந்து மாநிலத்தை எப்படிப் பாதுகாக்கிறது’ என்று பெருமையுடன் குறிப்பிட்டார். அப்போது, ‘கர்நாடகாவை பா.ஜ.க அரசு பாதுகாத்து வருகிறது. ஆனால், பக்கத்தில் கேரளா இருக்கிறது. இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை..’ என்றார் அமித் ஷா.
கேரளாவைப் பற்றி வெளிப்படையான கருத்தை முன்வைக்காமல், சூசகமாகப் பேசினார் அமித் ஷா. அதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்வினையாற்றினார். ‘அமைதியான வாழ்க்கையைப் பற்றி அவர் (அமித் ஷா) பேசுகிறார். கேரளாவில் என்ன அபாயத்தை அவர் காண்கிறார்?’ என்று கேள்வியெழுப்பினார்.
மேலும், ‘கேரளாவில் அனைத்து நம்பிக்கைகளையும் சார்ந்த மக்கள், அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருப்பதுபடி அமைதியாக வாழ்கிறார்கள். இந்த நிலைமை கர்நாடகாவில் இருக்கிறதா... கர்நாடகாவில் முஸ்லிம்களும் பிற சிறுபான்மை சமூகத்தினரும் தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள். ஆனால், கேரளாவில் வகுப்புவாதப் பதற்றம் எதுவும் இல்லை. அமித் ஷா தனது பேச்சை முழுமைப்படுத்த வேண்டும்” என்றார் பினராயி விஜயன்.
இதுபோக, கேரளா குறித்த அமித் ஷாவின் பேச்சு குறித்து ஒரு நாளேட்டில் கட்டுரை எழுதியிருந்தார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஜான் பிரிட்டாஸ்.
‘பிரசார பேரபாயங்கள்’ என்ற தலைப்பில் ஜான் பிரிட்டாஸ் எழுதிய கட்டுரையில், “சமீபத்தில் அமித் ஷா கர்நாடகாவில் ஆற்றிய உரை, பெரும் கவனம் பெற்றிருக்கிறது. ‘தன் கட்சி மட்டுமே கர்நாடகாவைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. உங்களுக்கு அருகில் கேரளா இருக்கிறது. அதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்று அவர் பேசியிருக்கிறார். அவரது பெரும்பான்மைவாத அரசியலை நிராகரித்துவரும் மக்கள் வாழ்கிற கேரளாவுக்கு எதிராக இப்படி அவர் பேசுவது முதன்முறை அல்ல. இந்தத் தேசத்தில் அதிக கல்வியறிவுகொண்ட மாநிலத்தை இழிந்து பேசுகிற பா.ஜ.க தலைவர் இவர் மட்டுமல்ல...” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஜான் பிரிட்டாஸின் கட்டுரைக்கு ஆட்சேபம் தெரிவித்து பா.ஜ.க-வின் கேரள மாநில பொதுச்செயலாளர் பி.சுதீர், ராஜ்ய சபா செயலகத்துக்கும் ராஜ்ய சபா தலைவர் ஜகதீப் தன்கருக்கும் புகார் கடிதம் எழுதினார். ஜான் பிரிட்டாஸ் எழுதிய கட்டுரை தேசத்துரோக நடவடிக்கை என்றும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் சுதீர் வலியுறுத்தியிருந்தார்.
அதையடுத்து, அந்தக் கட்டுரை தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜான் பிரிட்டாஸுக்கு ஜகதீப் தன்கர் சம்மன் அனுப்பினார். ஜகதீப் தன்கரைச் சந்தித்து விளக்கம் அளித்ததாகவும், அந்த விளக்கத்தை எழுத்து மூலமாக அளிக்குமாறு ஜகதீப் தன்கர் கூறியதாகவும் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்திருக்கிறார். நாளேட்டில் எழுதிய ஒரு கட்டுரைக்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு சம்மன் அனுப்பியது அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.
மதுரை தொகுதி எம்.பி-யான சு.வெங்கடேசன், “பாசிச மனோபாவம் கொண்டவர்களின் பசிக்கு நியாயங்கள்தான் ருசியாக இருக்கும்போல... அமித் ஷா மீது புகார் வருகிறது என்றவுடன், அதைத் தடுக்கத் துடிக்கிறார்கள். இப்படித் திசை திருப்பிவிடுகிறார்கள். மாநிலங்களவையின் மிகச்சிறந்த பங்களிப்பாளர் ஜான் பிரிட்டாஸ். அவர் மீதான புகார் ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவால். நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாயை அடைக்க முயலும் இவர்கள், நாளை நாட்டையே ஜனநாயக இருளில் ஆழ்த்திவிடுவார்கள். மாநிலங்களின் சகோதரத்துவத்தை வாக்கு வங்கிக்காக பலிகொடுக்கும் அற்ப அரசியலுக்கு எதிரான போரில் கேரளத்துடன் தமிழ்நாடு இணைந்து நிற்கும். ஜனநாயகத்தை நேசிக்கிற ஒவ்வொருவரும் ஜான் பிரிட்டாஸுடன் இணைந்து நிற்போம்” என்று கூறியிருக்கிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான மஹூவா மொய்த்ரா, ‘அமித் ஷா மீதான விமர்சனம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்று ஜான் பிரிட்டாஸை மாநிலங்களவைத் தலைவர் கேட்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. அடுத்ததாக நான் முன்வைக்கும் பல விமர்சனங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க என்னை அழைப்பார்கள். அந்த அழைப்புக்காகக் காத்திருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
ஒரு நாளேட்டில் எழுதிய கட்டுரைக்காக ஜான் பிரிட்டாஸ் எம்.பி-க்கு சம்மன் அனுப்பியதற்கு அதிர்ச்சி தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார், தி.மு.க எம்.பி-யான தமிழச்சி தங்கப்பாண்டியன். ‘உண்மையைச் சொன்னதற்காக ஜான் பிரிட்டாஸ் எம்.பி-க்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கிறார்கள்’ என்று விமர்சித்திருக்கிறார், காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரம்.
from India News https://ift.tt/IaES93z
0 Comments