தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியைத் துறந்த சரத் பவார் - அரசியல் பின்னணி என்ன?!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரை நூற்றாண்டுக் காலமாக அரசியல் தலைவராக இருந்தவர் சரத் பவார். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளாக தேசியவாத காங்கிரஸ் என்னும் கட்சியை உருவாக்கி மூன்று முறை மகாராஷ்டிரா மாநிலத்தை ஆட்சி செய்த தேர்ந்த அரசியல்வாதி, தற்போது தன் தலைவர் பதவியைத் துறந்திருக்கிறார். அதன் பின்னணி என்ன?

யார் இந்த சரத் பவார்?

1958-ம் ஆண்டு தன் அரசியல் பயணத்தை காங்கிரஸ் கட்சியில் தொடங்கியவர், 1999-ம் ஆண்டு அந்தக் கட்சியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் என்னும் கட்சியைத் தொடங்கினார்.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இவரின் சுயசரிதைப் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அதில் திடீரென தான் பொறுப்பு வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவிலிருந்து விலகயிருப்பதாக அறிவித்தார்.

சரத் பவார்

என்ன பேசினார் சரத் பவார்?

பதவியைத் துறப்பதை அறிவித்தவர், இளம் தலைமுறையினருக்கு வழிவிடும் வகையில் புதிய தலைவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கப்போவதாக சரத் பவார் தெரிவித்தார். மேலும், தலைமைப் பொறுப்பைத்தான் துறப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினராக என் மக்கள் பணி தொடரும்” எனப் பேசியிருந்தார்.

உத்தவ் தாக்கரே - சரத் பவார்

இதைக் கேட்டு முதல் வரிசைத் தலைவர்கள் தொடங்கி அடிமட்டத் தொண்டர்கள் வரையில் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அங்கு தொண்டர்கள் பலரும் அவரின் இந்த அறிவிப்பைத் திரும்பப் பெறும் வரையிலும் போராடுவோம் என சாலையில் அமர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

ஆனால், அதிலிருந்து பின்வாங்கும் எந்தத் திட்டமும் இல்லை என்பது, அவர் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க ஒரு கமிட்டியை உருவாக்கியது காட்டுகிறது. அதற்கான பணிகளும் ஒருபக்கம் நடந்துவருகிறது.

தேசியவாத காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளான காங்கிரஸ், சிவசேனா கட்சியினர்களுக்கும்கூட இவரின் இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது. காரணம், வரலாற்றில் காங்கிரஸிலிருந்து வெளியேறி, பல ஆண்டுகளாக செயல்பாட்டில் ஒரு கட்சியாகவும், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த கட்சியுமாக தேசியவாத காங்கிரஸ் இருக்கிறது. கடந்த தேர்தலில் பல ஆண்டுகளாக நீடித்துவந்த சிவசேனா - பா.ஜ.க கூட்டணி முறிந்தபோது, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணியை உறுதிசெய்ததில் முக்கியப் பங்காற்றியவர் சரத் பவார். அதேபோல், நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இவரின் பங்கு அதிகமாகயிருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரின் இந்த அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், சரத் பவார் தனது முடிவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

அஜித் பவார்

அதிகாரமா... அடிபணிந்தாரா?

கடந்த சில காலமாகவே சரத் பவார்- அஜித் பவாருக்குமிடையே மோதல் போக்கு இருந்துவருகிறது. அஜித் பவாரிடம் 25 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் பா.ஜ.க-வில் இணையவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அவற்றை அஜித் பவார் மறுத்தார். எனினும் இருவருக்குள் புகைச்சல் இருப்பது உண்மை என்பது அவர்கள் கட்சியினரும் உறுதிசெய்தனர். இந்த நிலையில்தான் ’தன் படைபலத்தைக் காட்ட சரத் பவார் எடுத்த நடவடிக்கைதான் இது’ என இந்தச் சம்பவம் குறித்து கூறப்படுகிறது.

சரத் பவார்

இந்த அதிகாரப் போட்டியில், அஜித் பவாரைத் தனிமைப்படுத்த சரத் பவார் `உணர்ச்சி அரசியல்’ செய்கிறார். இந்த அறிவிப்பு, கட்சியை சரத் பவாரின் பின்னால் அணிதிரளச் செய்து, அஜித் பவாருக்கு என்றுமே அவர்தான் ராஜா என்பதைக் காட்ட எடுத்த நடவடிக்கை எனச் சில அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதேவேளையில் கட்சி உடையாமல் இருக்க அஜித் பவாருக்கே பதவியை விட்டுத்தரும் செயல் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, மத்திய புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்புக்குக் கீழ் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பா.ஜ.க செல்லும் நோக்கத்தில் இருந்துவருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க-வுடன் இணைந்து செயல்பட தேசியவாத காங்கிரஸ் முடிவெடுத்தால், பவார் தலைமையில் அப்படி நடப்பதை ஏற்க மாட்டார் என்பதால் விலகியிருக்கலாம்.

"மகாராஷ்டிராவில், நாம் அனைவரும் பவார் பெயரில் ஓட்டு கேட்கிறோம். கட்சிக்கு பவார் மூலம் ஓட்டு கிடைக்கிறது. பவார் சாகேப் ஒதுங்கிவிட்டால், எங்களின் முதல் கேள்வி, மக்களை எப்படி எதிர்கொள்வது?" பிரஃபுல் படேல், சுனில் தட்கரே, சகன் புஜ்பால் போன்ற தலைவர்களும் பவாரை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அஜித் பவார், `எப்போது வேண்டுமானாலும் தலைமை மாற்றம் நடைபெறலாம். தலைவர் நியமனத்தை ஏன் எதிர்க்கிறீர்கள்?’ என்று கேள்வியெழுப்பினார். `இதில் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை’ என சரத் பவார் கூலாக இருந்தது அஜித் பவாருக்கு வழிவிட்டுத்தான் தலைமை பொறுப்பைத் துறக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பட்னாவிஸ் - அஜித் பவார்

ஆனால், அரசியல் காய் நகர்த்தலுக்காகத் தலைமைப் பதவியைத் துறப்பது மகாராஷ்டிரா மாநிலத்துக்கு முதல்முறை அல்ல. சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேவும் தன் இருப்பை உறுதிசெய்ய 1978, 1990 ஆண்டுகளில் இரண்டு முறை, தலைவர் பதவியிலிருந்தும் சிவசேனாவிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

ஆனால், சரத் பவார் என்ன காரணத்துக்கு இந்த முடிவை எடுத்திருக்கிறார். இந்த முடிவில் தொடருவாரா... என்பது இன்னும் சில நாள்களில் வெளிவரலாம். உண்மையில் தன் அதிகாரத்தைச் செலுத்துகிறாரா... இல்லை அழுத்தம் காரணமாக அடிபணிந்தாரா...  என்பது அடுத்தடுத்த நகர்வுகளில் வெளிப்படும்.



from India News https://ift.tt/3qeXFKG

Post a Comment

0 Comments