தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் `உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் கேள்வி பதில் வீடியோவை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று வெளியிட்ட வீடியோவில் முதல்வர் ஸ்டாலின், ``நம்முடைய திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டு ஆக போகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில், மகளிருக்கு இலவசப் பேருந்து, பள்ளிக் குழந்தைகளுக்குக் காலைச் சிற்றுண்டித் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம், தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் நான் முதல்வன் திட்டம் - என, இவ்வாறு எண்ணற்ற முன்னோடி மக்கள் நலத் திட்டங்களைச் செய்து காட்டியிருக்கிறோம்.
இந்த வேகம் கொஞ்சமும் குறையாமல், இன்னும் வேகத்துடன் இதுபோன்ற திட்டங்கள் தொடரும். நம்பர் 1 தமிழ்நாடு என்ற நம்முடைய இலக்கை நோக்கி செல்வோம். ஆளுநர்கள் சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க, கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானம் இந்தியா முழுவதும் எதிரொலிப்பது உண்மைதான். உச்ச நீதிமன்றமும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறது. இந்தியா முழுமைக்குமானதுதான் தமிழ்நாட்டுடைய குரல். சமூகநீதிக்கு தமிழ்நாடுதான் தலைநகர். அதேபோலத்தான், மாநில சுயாட்சி உரிமைகளுக்கும் தமிழ்நாடுதான் தலைநகர்.
அந்த அடிப்படையில்தான் இது மாதிரியான தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம். மக்களுடைய பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்புகின்ற சட்ட மசோதாக்களை, ஒரு நியமன ஆளுநர் கிடப்பில் போடுவார் என்றால், அதைவிட மக்களாட்சி மாண்புக்கு இழுக்கு இருக்க முடியாது. அதனால்தான், சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று சொல்கிறோம்.இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உடனடியாக என்னுடைய குரலுக்கு வலுசேர்த்த மாநில முதலமைச்சர்களுக்கு நன்றி. அதேபோல, இன்னும் இருக்கின்ற மற்ற மாநில முதலமைச்சர்களும் இதை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில், முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று உள்துறை அமைச்சரே பேசியிருப்பது, சிறுபான்மைச் சமூகத்தினர் மீதான வன்மம் இதன் மூலமாக வெளிப்படுகிறது. தேர்தல் அரசியல் லாபங்களுக்காக உள்துறை அமைச்சர் இவ்வாறு சொல்லி இருக்கிறார். இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்து மக்களை திருப்திப்படுத்தும் என்று பா.ஜ.க.-வினுடைய தலைமை அவர்களாவே கற்பனை செய்திருக்கிறது. ஆனால், உண்மை அப்படியில்லை. பா.ஜ.க-வுக்கு வாக்களிக்காத பெரும்பான்மையான மக்களும் இந்துக்கள்தான். ஆனால் அவர்கள் அமைதியையும், சகோதரத்துவத்தையும் விரும்புகிற மக்கள்.
பா.ஜ.க. தன்னுடைய வெறுப்புணர்ச்சியை குறிப்பிட்ட சிலரிடம் திணித்து, அதுதான் ஒட்டுமொத்த மக்களுடைய மனநிலை என்று காட்ட நினைக்கிறது. அதற்கு துணையாக பொய்களையும், கற்பனைக் கதைகளையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கின்ற பரப்புரை இயந்திரமாக சமூக ஊடகங்களில் செயல்படுகிற பா.ஜ.க ஆதரவு கணக்குகளும், பா.ஜ.க-வினுடைய ஊதுகுழலாக மாறி, ஜனநாயகத்தினுடைய நான்காவது தூண் என்பதை மறந்து, பா.ஜ.க.வை தாங்கிப் பிடிக்கிற சில ஊடகங்களும், இப்படி பல காரணிகள் மூலம் தன்னுடைய வெறுப்பு அரசியலை பா.ஜ.க. செய்துகொண்டு இருக்கிறது.
மதச்சார்பின்மையை அரசியலமைப்பு நெறிமுறையாக கொண்ட நாட்டில், உள்துறை அமைச்சரே இவ்வாறு பேசுவது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிற செயல். மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்கள் மக்களை நம்புகிறோம். இந்திய மக்களுடைய மனசாட்சி என்றைக்கும் உறங்கிவிடாது என்று நம்புகிறோம். நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் பேரில் வெளியான ஆடியோ குறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணிகளைச் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மேலும் இதைப் பற்றி பேசி, மட்டமான அரசியலில் ஈடுபடுகிறவர்களுக்கு நான் விளம்பரம் தேடித் தர விரும்பவவில்லை.
கலைஞர் நூற்றாண்டு வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த விழாவை இந்தியாவே திரும்பிப் பார்க்கிற மாதிரி கொண்டாட இருக்கிறோம். இதற்காக குடியரசுத் தலைவரை டெல்லி சென்று சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறேன். இந்தச் சந்திப்பில், தலைவர் கலைஞர் மீதும், தமிழ்நாட்டின் மீதும் குடியரசுத் தலைவர் வைத்துள்ள மதிப்பையும், மரியாதையும் நான் அறிந்தேன். பெண்கள் அரசியல் ஆளுமைகளாக வரவேண்டும் என நினைத்த தலைவர் கலைஞர். அவர்களின் நூற்றாண்டு விழாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைப்பது மிகமிகச் சிறப்பானது.
கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சியினர், செயற்பாட்டாளர்கள் இவர்களுடைய கருத்துக்கு மதிப்பளித்து தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தை நிறுத்தி வைத்தது குறித்து மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. `மனச்சாட்சியே நீதிபதி' என்று கலைஞர் சொல்வார். அப்படித்தான் நானும் செயல்பட்டு வருகிறேன். மக்களின் எண்ணத்தைப் புரிந்து செயல்படுவதே மக்களாட்சி. அப்படி எடுக்கப்பட்ட முடிவு அது. பலத்தை வைத்து இந்த சட்டம் கொண்டு வரப்படவில்லை. பலவீனமாக இதனை வாபஸ் பெறவுமில்லை.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வகைப் பணியாளர் தேர்வுகளும், ஒருங்கிணைந்த மேல்நிலைப் பணியாளர் தேர்வுகளும் இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக, எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும், இந்த நிலை விரைவில் வரவேண்டும். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வரும் கொள்கை இது.
நம்முடைய கோரிக்கையின் காரணமாக, இன்று தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு மாநில மொழிகளைப் பேசும் இளைஞர்களும், அவரவர் மொழியில் இந்தத் தேர்வுகளை எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அறிவுத் திறனை இந்தி, ஆங்கிலம் என்ற குறிப்பிட்ட மொழி எல்லைக்குள் சுருக்கக் கூடாது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்தான் என்பதால், எல்லா மாநில இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கான முதற்படிதான், நமது வலியுறுத்தல் காரணமாக நடந்திருக்கும் இந்த நல்விளைவு. விரைவில் அனைத்து ஒன்றிய அரசுத் தேர்வுகளும், அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட குரல் கொடுப்போம்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், அப்போதைய முதலமைச்சரின் பொறுப்பில் இருந்த பொதுப்பணித்துறை டெண்டர்கள் வழங்கியதில் தொடங்கி, காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் என பல்வேறு திட்டங்களிலும் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. அ.தி.மு.க.வின் கரெப்ஷன் ஆட்சியை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். அதை சிஏஜி அறிக்கையும் ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறது.
இது குறித்து அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படும். ஊழல் தடுப்புச் சட்டத்தில் 2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களின் அடிப்படையில், இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல சில முன் அனுமதிகளையும், இசைவு ஆணைகளையும் பெற வேண்டியிருக்கிறது. அந்த அடிப்படையில், விசாரணை நிறைவடைந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். அது உறுதி. டெல்லிக்குப் சென்றதும் எடப்பாடி பழனிசாமியின் வீரியம் அடங்கிவிட்டது. வீராவேசமாக டெல்லிக்குக் கிளம்பிச் சென்று காத்திருந்து, காற்று போன பலூனாக திரும்பி வருவது அவருக்கோ, அவர் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கோ ஒன்றும் புதில்லையே" எனத் தெரிவித்திருக்கிறார்.
from India News https://ift.tt/fOPndlp
0 Comments