‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம், கேரளாவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனம் பெற்றிருக்கிறது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்படம் மே 5-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க் கட்சியான காங்கிரஸ் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
இந்தப் படத்தின் டீசர் கடந்த நவம்பர் 2-ம் தேதி வெளியானது. அதில், கேரளாவில் 32,000 பெண்கள் காணாமல்போனதன் பின்னணியை இந்தப் படம் வெளிக்கொண்டுவருவதாகக் கூறப்பட்டது. அனைவரின் கண் முன்பாகவே, சாதாரண பெண்களை பயங்கரவாதிகளாக மாற்றும் ஆபத்தான விளையாட்டு கேரளாவில் நடைபெறுவதாகவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில், கேரளாவிலுள்ள ஒரு கல்லூரி விடுதியில் ஒரே அறையில் நான்கு பெண்கள் தங்கியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் முஸ்லிம் பெண். அந்த முஸ்லிம் பெண்ணைப் பின்பற்றி மூளைச்சலவை செய்யப்பட்டு மற்றவர்களும் முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும், பிறகு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்காக வேலை செய்ய நாடு கடத்தப்படுவதாகவும் காட்சிகள் வருகின்றன.
ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்ற இந்து பெண் வேடத்தில் அடா ஷர்மா நடித்திருக்கிறார். ‘லவ் ஜிகாத்’ மூலமாக காதல் வலையில் வீழ்த்தப்பட்டு முஸ்லிம் பெண் ஃபாத்திமாவாக அவர் மதமாற்றம் செய்யப்படுகிறார். பிறகு, ஷாலினி உட்பட 48 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்காக வேலை செய்ய வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவது போன்ற காட்சிகள் வருகின்றன.
மற்றொரு காட்சியில், பிற பெண்களுடன் உறவை ஏற்படுத்தி அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு முஸ்லிம் தோற்றத்தில் இருக்கும் சில ஆண்கள், இளைஞர்களிடம் கூறுகிறார்கள். பிறகு, ஷாலினி உன்னிகிருஷ்ணன் மதம் மாற்றப்படுதல், திருமணம், பாகிஸ்தானுக்கு கடத்தப்படுதல் என்று காட்சிகள் வருகின்றன. அடுத்த 20 ஆண்டுகளில் கேரளா, இஸ்லாமிய மாநிலமாக மாறும் என்று கேரளாவின் முன்னாள் முதல்வர் ஒருவர் கூறியிருக்கிறார் என்கிற ஒரு வசனம் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் மே 5-ம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.
இப்படியொரு படம் எடுக்கப்பட்டிருப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். “தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரெய்லர், மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்ட கேரளாவை மதத் தீவிரவாதத்தின் மையமாகச் சித்தரிக்கும் வகையில், சங்பரிவார் பிரசாரமாக இருக்கிறது. போலிக் கதைகள் கொண்ட திரைப்படங்கள் மூலம் பிரிவினைவாத அரசியலைப் பரப்புவதற்கு சங் பரிவார் முயல்கிறது. எவ்வித உண்மையும் ஆதாரமும் இல்லாமல், கட்டுக்கதைகளைப் பரப்புகிறார்கள்.
இந்தப் படம், பொய்களைப் பரப்பிவரும் சங்பரிவார் தொழிற்சாலையின் தயாரிப்பாகும். கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக சங்பரிவார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. அதில் ஒன்றுதான் தி கேரளா ஸ்டோரி திரைப்படம்” என்று முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்திருக்கிறார்.
இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி-யான சஷிதரூர், “இது உங்களுடைய கேரளா ஸ்டோரியாக இருக்கலாம். ஆனால், இது எங்களுடைய கேரளா ஸ்டோரி இல்லை” என்று கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் கேரளா சட்டமன்றக் குழுத் தலைவரான வீ.டி.சதீசன், “இந்தப் படம் பொய்களால் நிரம்பியதாக இருக்கிறது. இதில், முஸ்லிம்களை மிகவும் தவறாகச் சித்தரித்திரிக்கிறார்கள். பொய்களின் மூட்டையாக இருக்கும் இந்தப் படத்தில், கேரளாவில் 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.ஏஸ் பயங்கரவாத இயக்கம் இருக்கும் பகுதிகளுக்கு அனுப்பப்படுவதாகக் கூறியிருக்கிறார்கள்.
தங்களின் வெறுப்பு விதைகளை விதைப்பதற்காகவும், மதநல்லிணக்கத்தைச் சிதைக்கவும் நோக்கமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கேரளாவின் புகழைக் கெடுப்பது அவர்களின் நோக்கமாக இருக்கிறது. இதன் பின்னால், சங் பரிவார் அமைப்புகள் இருக்கின்றன. ஆகவே, இந்தப் படத்தைத் திரையிட மாநில அரசு அனுமதி அளிக்கக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுதிப்தோ சென் என்ற இயக்குநர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். முதன் முதலில், ‘தி அதர் வெல்த்’ என்ற ஆவணப்படத்தை 1997-ம் ஆண்டு இயக்கினார். 1998-ம் ஆண்டு ‘தி லேண்ட் வித்தின் ரிப்பிள்ஸ்’ என்ற ஆவணப்படத்தை இயக்கினார்.
‘தி லாஸ்ட் மங்க்’ என்ற ஆங்கிலப் படத்தை 2006-ம் ஆண்டு இயக்கினார் சுதிப்தோ சென். பல குறும்படங்களையும் அவர் இயக்கியிருக்கிறார். ஆனால், அவை எதுவுமே பெரிதாகப் பேசப்படாத நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தால் சுதிப்தோ சென் பெயர் பிரபலமாகியிருக்கிறது.
சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக ‘நாடகக் காதல்’ என்கிற சொல்லாடல் தமிழ்நாட்டில் சமீபத்தில் உருவாக்கப்பட்டதைப் போல, கேரளாவில் ‘லவ் ஜிகாத்’ என்கிற ஒரு சொல்லாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘இந்துப் பெண்களை போலியாகக் காதலித்து கட்டயாய மதமாற்றம் செய்யும் முஸ்லிம் ஆண்கள், அந்தப் பெண்களை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்திச்சென்று இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள்’ என்பதுதான் லவ் ஜிகாத்தின் அர்த்தம் என்று சொல்லப்படுகிறது.
கேரளாவில் லவ் ஜிகாத் நடைபெறுவதாக ஒரு தரப்பினர் கூறிவரும் நிலையில், “லவ் ஜிகாத் என்கிற ஒன்று நம் சட்டத்தில் இல்லை. அந்த மாதிரியான ஒரு வழக்கு எங்கேயும் பதிவாகவில்லை என்று மத்திய புலனாய்வு அமைப்புகள் கூறியிருக்கின்றன” என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, நாடாளுமன்றத்தில் 2020-ம் ஆண்டு தெரிவித்தார்.
அப்படியிருக்கும்போது, கேரளாவில் 32,000 பெண்களைக் காணவில்லை என்றும், இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களை காதலித்து கட்டாய மதமாற்றம் செய்து இஸ்லாமிய நாடுகளுக்கு கடத்திச்செல்லப்படுகிறார் என்று ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் நான்கு ஆண்டுகளாக கேரளாவில் களஆய்வு செய்து, உண்மைத் தகவல்களின் அடிப்படையில் ‘தி கேரளா ஸ்டோரி’யை எடுத்திருப்பதாக, அந்தப் படத்தின் குழுவினர் கூறுகிறார்கள். மத்திய அமைச்சரே நாடாளுமன்றத்தில் மறுத்திருக்கும் நிலையில், போலியான தகவல்களை வைத்து எப்படி ஒரு திரைப்படத்தை எடுக்கலாம் என்று இதை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
மே 5-ம் தேதி படம் வெளியாகவிருக்கிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதால், அங்கு இந்தப் படம் வெளியாகுமா என்பது தெரியவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் வெளியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சமூகத்தில் அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் குலைக்கும் வகையில் திரைப்படம் எடுப்பது சரியல்ல என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
from India News https://ift.tt/g2iwXyS
0 Comments